செவ்வாய், அக்டோபர் 27, 2020

தலையங்கம்

img

சூரப்பா, இதைச் சொல்ல நீ யாரப்பா?

புகழ்மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தராக சூரப்பாவை நியமித்தபோதே  கடும் ஆட்சேபணையும் சர்ச்சையும் எழுந்தது. பாஜகவின் நிர்ப்பந்தம் காரணமாகவே இவர் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அவர் தற்போது தன்னுடைய வேலையை காட்டி வருகிறார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாநிலஅரசின் கட்டுப்பாட்டிலிருந்து பறிப்பதற்காக உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்போவதாக மத்திய அரசு கூறியது. இதற்கு பல்கலைக்கழகத்தை பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டுமென்றும், மாநில அரசின் நிதி ஒதுக்கீடுதேவையில்லை என்றும், ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடியைதிரட்டி விட முடியும் என்றும் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறுவது மற்றும் அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய மாநில அரசின் சார்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தன்னுடைய அறிக்கையைஇன்னமும் தரவில்லை. அண்ணா பல்கலைக்கழக விசயத்தில் மாநில அரசு எந்தவொரு கொள்கை முடிவையும் அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பாவிற்கு முக்கியமான விசயத்தில் மத்திய அரசுக்குநேரடியாக கடிதம் எழுதும் அதிகாரத்தை அளித்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் உடனடியாக அவரை பணிநீக்கம் செய்வதுதான் நியாயமாக இருக்கும். 1500 கோடி ரூபாயை சூரப்பா எங்கிருந்து திரட்டுவார்? அனைத்து சுமைகளும் மாணவர்களின் தலையில்தான் சுமத்தப்படும், மாநில அரசின் நிதியுதவி இல்லாமல் கிட்டத்தட்ட மத்திய அரசின் கீழ் இயங்குகிற தனியார்பல்கலைக்கழகம் போல அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்ற முயல்வது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் துரோகமாகும்.அண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனமாக மாற்றப்படுமானால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள69 சதவீத இடஒதுக்கீடு என்பது இல்லாமல் போகும். ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை என்ற நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அதே கதிதான் ஏற்படும். 

இடஒதுக்கீடு பாதிக்கப்படாது என்ற எந்தஉத்தரவாதத்தையும் வழங்க மோடி அரசு தயாராகயில்லை. இந்தநிலையில் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யவும் பல புகழ்பெற்ற நிபுணர்களை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தை சீரழிக்கவும், துணைவேந்தரின் துணையோடு மத்திய அரசு மேற்கொள்ளும் சதியை முறியடித்தாக வேண்டும்.

;