ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தலையங்கம்

img

சமூக முடக்கம்: மக்களின் வாழ்வு குறித்து என்ன முடிவு?

கொரானா வைரஸ் தொற்றை சமாளிப்பது சம்பந்தமாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இருமுறை தேசியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவற்றில் இதனால் ஏற்பட்டுள்ள உடனடிப் பொருளாதார மந்தத்தை எதிர்கொள்ளவும், சாமானிய மக்களின் வருமானத்திற்கும், வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்டுள்ள சீர்குலைவினைச் சரி செய்வதற்கும் அரசாங்கம் எவ்விதமான பொருளாதாரத் தொகுப்புத் திட்டங்களையும் அறிவித்திடவில்லை.

பிரதமர் மார்ச் 24 அன்று ஆற்றிய இரண்டாவது உரையின்போது, நாடு 21 நாட்களுக்கு முடக்கப்படும் என்று அறிவித்தார். இத்தகைய கடுமையான நடவடிக்கையைத் திணிப்பதற்கு முன், பொருளாதார அமைப்புகளைப் பாதுகாத்திடவும், இதனால் வருமானம் ஈட்டலை முற்றிலுமாக இழக்கும் சாமானிய மக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை அளிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் இதுபோல் எதுவும் செய்யப்படவில்லை.

மார்ச் 20 அன்று அவர் ஆற்றிய முதல் உரையில், பிரதமர், மார்ச் 22 அன்று “மக்கள் ஊரடங்கு” என்று அறிவித்ததுடன், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் பொருளாதாரத்தின் மீது ஒரு பணிக்குழு (task force) அமைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் இதனிடமிருந்து இதுவரை எவ்விதமான வெளிப்பாடும் வெளிவரவில்லை. நிலைமையின் அவசரத்தன்மையை உணர்ந்து, அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து உரையாற்றிய பிரதமர் உரையின்போது இது தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவருடைய உரையில் இருந்த ஒரேயொரு அறிவிப்பு, சுகாதாரத் துறைக்கு மருத்துவமனைகளில், அதிக வென்டிலேடர்கள், பாதுகாப்புத் துணி உறைகள், தனித்த வார்டுகள் (isolation wards) கட்டுவதற்காக, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது மட்டுமேயாகும். ஆனாலும், சோதனைக் கருவிகள் மற்றும் சோதனை செய்வதை விரிவாக்குவதற்கான ஏற்பாடுகள் எது குறித்தும் எவ்விதமான குறிப்பும் இல்லை. இவை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன.

இந்த நிதி ஒதுக்கீடும், நாட்டில் கொரானா வைரஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 53 நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறது. தங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று  நாடு முழுதும் உள்ள டாக்டர்களும், நர்சுகளும் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது, முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சுகாதார உள்கட்டமைப்பில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிற தொகை மிகவும் குறைவாகும். சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவதால் மாநிலங்களுக்குத் தாராளமானமுறையில் மத்திய அரசு உதவிட முன்வர வேண்டும். இந்தத் தொற்று தொடர்பாக தனியார் நிறுவனங்கள் முழுமையாகத் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ள நிலையில், பொது சுகாதாரத்துறையை உதாசீனம் செய்து, தனியார் சுகாதாரத் துறையை ஊட்டிவளர்த்த முட்டாள்தனத்திலிருந்து இப்போதாவது மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் கண்களைத் திறந்தகொள்ள வேண்டும்.

கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு சுகாதார வல்லுநர்களின் கூற்றின்படி மூன்று வாரங்கள் சமூக முடக்கம் அமல்படுத்துப்பட வேண்டியது அவசியம்.  நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் வருமானம் ஏதுமின்றி தங்கள் குடும்பத்தினரின் அன்றாட உணவுத் தேவைகளுக்காகவும், அத்தயாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகவும் வருமானம் ஈட்டமுடியாதநிலை ஏற்படும் எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது கடுமையானதும், இதயமற்றதுமாகும். முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், நாட் கூலி பெறுபவர்கள், கேசுவல் தொழிலாளர்களின் அவலநிலை மிகவும் மோசமாகும். நாட்டில் முறைசாராத் தொழில்களில் 39 கோடித் தொழிலாளர்களுக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலையிழந்துள்ளார்கள். அவர்களை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்க உத்தரவிடுவதற்கு முன் அரசாங்கம் அவர்களுக்கு தேவையான இலவச ரேஷன்கள் மற்றும் சற்றே வருமானத்திற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். அவர்களின் ஜன் தன் கணக்குகளில் 5000 ரூபாய் போட்டிருக்க முடியும்.  

புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள், சமூக முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தங்களின் இல்லங்களுக்குச் செல்லமுடியாமல் வீதிகளில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களைப்பற்றி மத்திய அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

சில மாநில அரசாங்கங்கள் மட்டும்தான் நிவாரண நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றன. இதில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் குறிப்பிடத்தக்கதாகும். இது, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன்கள் ஒரு மாதத்திற்கு அளித்திருக்கிறது, ஓய்வூதிய நிலுவைத் தொகையை அளித்திருக்கிறது, முன்பணம் அளித்திருக்கிறது, மதிய உணவு உட்கொண்டுவந்த குழந்தைகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்களை அளித்திருக்கிறது. மேலும், வேலையிழந்த புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து, அங்கே அவர்களுக்கு இலவச ரேஷன்களும் அளிக்கப்படுகின்றன, மருத்துவ சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தில்லி, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் சில மாநில அரசாங்கங்கள் ரொக்க மாற்று அல்லது இலவச ரேஷன்கள் அறிவித்திருக்கின்றன.

நிரந்தரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பிரதமர் தன்னுடைய முதல் உரையில், வேலையளிப்பவர்கள் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது என்றும், அவர்களின் ஊதியங்களில் வெட்டினை ஏற்படுத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த அடிப்படையில் தொழிலாளர்நலத்துறை அமைச்சகமும் பின்னர் அறிவுரைகளை அளித்திருக்கிறது. இத்தகைய புனிதமான அறிவுரைகள் பயனளிக்காது. இது தொடர்பாக அரசாங்கம் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வேலைகளையும், பயன்பாடுகளையும் பாதுகாக்கும் விதத்தில் ஓர் அறிவிக்கையை வெளியிட வேண்டும். இது, ஒப்பந்தத் தொழிலாளர்களையும் உட்படுத்திட வேண்டும். மிகவும் பிற்போக்கான பிரிட்டன் அரசாங்கம் கூட, கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள், வேலைக்கு வருவதில் சிரமத்தை எதிர்கொள்வார்களானால், 80 சதவீத ஊதியத்தை அளித்திட வேண்டும் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு மூன்று மாத காலத்திற்கு இருக்கும் என்றும், தேவைப்பட்டால் அது நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கும் நிதி உதவி அளிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அவ்வாறு நிதி உதவிகள் அளிக்கும்போது, அவை கதவடைப்பு அல்லது ஊதிய வெட்டு போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்திட வேண்டும். உதாரணமாக, கோ ஏர் (Go Air) போன்ற விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு, உதவி தேவைப்படுகிறது. அது, அரசாங்கத்திடம் இருந்து உதவியைப் பெறமுடியாத நிலையில், ஊழியர்களை நீக்கிவிட்டது. இண்டிகோ (Indigo)  நிறுவனம் ஊதிய வெட்டை ஏற்படுத்தி இருக்கிறது.  எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதி உதவி செய்திட வேண்டும். அவற்றின் கடன் வாங்கும் வரம்பை (borrowing limits) உயர்த்திட வேண்டும்.

கடந்த சில நாட்களாக, பல நகரங்களில் காய்கறிகள் மற்றும் பல அத்தியாவசிப் பொருள்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்துபேசி, அத்தியாவசியப் பொருள்கள் நாடு முழுதும் கொண்டுசெல்வதற்கு வகை செய்ய வேண்டும். சோதனைச் சாவடிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

சமூக முடக்கத்தை அறிவிப்பதற்கு முன் போதுமான அளவிற்கு சிந்தனையோ மற்றும் தயாரிப்பு வேலைகளோ இல்லை என்பதற்கு அரசாங்கம் அறிவித்துள்ள அதிகாரபூர்வமான வழிகாட்டும் நெறிமுறைகளில் இரு விஷயங்கள் விடுபட்டிருப்பதைக் காட்டமுடியும். செயல்பட வேண்டிய அரசுத்துறைகள் என்றும், அவை மூடப்படக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிற துறைகளில் சுகாதாரத்துறையும், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறையும் விடுபட்டிருக்கின்றன. இவ்விரு துறைகளும் செயல்படாவிட்டால் எப்படி கேந்திரமான சுகாதாரத்துறையும், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகமும் வலுவானமுறையில் இருந்திடும்? அதேபோன்று விவசாய உற்பத்தி, பயிர்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் எடுத்துச்செல்லுதல், அவற்றைக் குளிர்பதன அறைகளில் வைத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான பணிகளைக் கவனிக்கும் விவசாயத்துறைக்கும் சரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை.

எனினும், மிகவும் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டியது என்னவெனில், மோடி அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் வடுப்படத்தக்க நிலையில் வாழும் மக்களுக்கு, நிதி உதவி அளித்தும், அத்தியாவசிய உணவுப் பொருள்களை அளித்தும் உதவிட வேண்டும். இவற்றை அது உடனடியாகச் செய்திட வேண்டும். இத்துடன் பொருளாதார மந்தத்தை எதிர்கொள்ளும் விதத்திலும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

(தமிழில்: ச. வீரமணி)
 

;