சனி, செப்டம்பர் 19, 2020

தலையங்கம்

img

கொரோனா தொற்று... குழந்தைகளைக் காப்போம்...

கோவிட் 19 தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான முயற்சிகளில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல், கோவிட் சிகிச்சைக்கான உத்தரவாதங்களையும் செய்யாமல் வாழ்வாதாரங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு வருமாறு கூறிவிட்டன. இந்தியாவும் அடுத்தடுத்ததளர்வுகளை அறிவித்து தொழில் நிறுவனங்களை திறந்துள்ளது. அரசு எந்த உதவியும்செய்யாத நிலையில், வாழ்வுக்கு வேறு வழியின்றி, உயிரை பணயம் வைத்து மக்கள் வேலைகளுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். எனினும் இந்தியாவில் பள்ளிகளை திறப்பதற்கான துணிச்சல் அரசுக்கு வரவில்லை. அது வர வேற்கத்தக்கது. தமிழகத்தில் கூட பள்ளிகளை இப்போது திறப்பதற்கில்லை என்று அரசு மிகச்சரியாகவே கூறியுள்ளது. 

ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், சுவீடன் உள்பட - கொரோனா பாதிப்பு மிக அதிகம் உள்ள பல நாடுகளில், அதிகபட்சமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு அதன்மூலம் எதிர்ப்பு சக்தி பெற்றுவிட முடியும் என்ற அறிவியல் விரோத “மந்தை எதிர்ப்பு சக்தி” கோட்பாட்டை முன் வைத்து பள்ளி - கல்லூரிகளைத் திறப்பதற்கு அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இந்த நாடுகள் உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு வார காலமாக ஒவ்வொரு நாளும்சுமார் 2லட்சத்து 60ஆயிரம் பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்; ஒவ்வொரு நாளும் 5,500 பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் இதை கருத்தில் கொள்ளாமல் உலகம் முழுவதும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் கார்ப்பரேட் பள்ளிக்கூடங்களை நடத்தக்கூடிய பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஒருபுறம் ஆன்லைன் வகுப்புக் கொள்ளை, மறுபுறம் பள்ளிகளுக்கு வருமாறு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்ப்பந்தம் என்ற இரட்டைத் தாக்குதல் துவங்கியிருக்கிறது. ஆனால் மாணவர்களை பள்ளிகளுக்கு வரச்சொல்லும் அரசுகள், பள்ளிகளில், கல்லூரிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. உதாரணத்திற்கு பிரேசிலில் பாசிஸ்ட் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ, பிடிவாதமாக பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டார். பள்ளிகள் திறந்த ஒருவாரத்திற்குள் 36 பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட ஏற்பாடுகள் இருந்தாலும், ஒருவரோடு ஒருவர் பேசுவதையோ, விளையாடுவதையோ குழந்தைகளிடையே தடுக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கூடும்போது ஆபத்து பல மடங்கு அதிகமாகிறது. இதற்கு எதிராக உலகெங்கிலும் பெற்றோர்கள் - கல்வியாளர்கள் குரல் எழுப்பத்துவங்கியுள்ளனர். உலகம் முழுவதும் நூற்றுக்கும்மேற்பட்ட சமூக ஊடகக் குழுக்கள் இந்த எதிர்ப்பில் இறங்கியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

;