செவ்வாய், அக்டோபர் 27, 2020

தலையங்கம்

img

கடமையை மறந்து  கடன் சுமையை திணிப்பதா?

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை மாநில அரசுகளின் தலையிலேயே மத்திய பாஜக கூட்டணி அரசு சுமத்தி வருகிறது. மருத்துவம் மற்றும் சுகாதாரம் மாநில அரசின் பொறுப்பில் உள்ளதால் மாநில அரசுகள்தான் கடும் நெருக்கடிக்கு இடையில் இந்த செலவுகளை சமாளித்து வருகின்றன. 

மத்திய அரசைப் பொறுத்தவரை இந்த கொடிய காலத்தில் மாநிலங்களின் சுமையை பகிர்ந்துகொள்ள மறுக்கிறது. மறுபுறத்தில் பிஎம்கேர்ஸ் திட்டம் என்ற பெயரில் தனியார் அறக்கட்டளைக்கு பல ஆயிரம் கோடி நிதி திரட்டப்படுகிறது. இதுகுறித்த விபரங்களைக் கூட வெளியிட மறுக்கிறார்கள். மாநிலங்கள் இந்த நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்குமாறு கேட்டதையும் நிராகரித்துவிட்டது மத்திய அரசு. இந்த நிதிஎவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவ மறுப்பது மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத்தொகையையும் வழங்க மோடி அரசு மறுக்கிறது. இந்த ஜிஎஸ்டிவரித்திட்டத்தை கொண்டுவந்த போது இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசுஈடுகட்டும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதை தற்போது நிறைவேற்ற மத்திய அரசு  மறுக்கிறது. இந்நிலையில் மாநிலங்கள் கடன்பெறும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு கேரளம் உள்ளிட்டபல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜிஎஸ்டி வரி நிலுவை உள்ளிட்ட பாக்கிகளை மாநிலங்களுக்கு தர வேண்டும் என்றும், இயற்கை பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை மாநிலங்களுக்கு தர வேண்டும் என்றும் பெரும்பாலானமாநிலங்கள் வலியுறுத்தின. இதை நிறைவேற்ற மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரம்கோடி கடன் வழங்கப்படும் என்றும் 50ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் தரப்படும் இந்தக் கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.1600 கோடி, உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களுக்கு ரூ.900ஆயிரம் கோடி வழங்கப்படும் என்றும் மற்ற மாநிலங்களுக்கு நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இரு தவணைகளாக வழங்கப்படும் என்றும்2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு பரிந்துரை க்கும் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.உதய் மின் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடன்கிடைக்கும் என ஏற்கெனவே மத்திய அரசு  மிரட்டியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, பொதுத்துறைகளுக்கு எதிரான சீர்திருத்தங்களை கடனுக்கான நிபந்தனை என்ற பெயரில் புகுத்துகிறது மோடி அரசு. கடுமையான நிதிச்சுமையில் தத்தளிக்கும் மாநிலங்களை மேலும் கடனாளியாக்காமல் தரவேண்டிய வரி பாக்கியை தர மோடி அரசு முன்வர வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் இணைந்து இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
 

;