தலையங்கம்

img

ஐஎம்எப் சொன்ன பிறகாவது அசைவார்களா?

புதுதில்லியில் ‘ஈட் ரைட் இந்தியா’ இயக்கத் தின் சார்பில் விஷன்- 2050 என்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசும் போது உணவுப் பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு செல்ல வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்உணவுப் பாதுகாப்பே இந்திய மக்களுக்கு கேள்விக்குறியான நிலையில் இருக்கின்றது. உணவுப்பாதுகாப்புக்கான பொது விநியோக முறை சீரழிக்கப்பட்டு அதை ஒழித்துக்கட்டும் வேலையில் மத்திய ஆட்சியாளர்கள் இறங்கியிருக்கிறார்கள்.இந்த நிலையில் உணவுப் பாதுகாப்பை விட ஊட்டச்சத்து பாதுகாப்பு அவசியம் என்று அமைச்சர் பேசியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. உலக அளவில் வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பட்டியலின்படி உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. 2018 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4 கோடியே 66 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2020 மார்ச் 2 ஆம் தேதிய கணக்கெடுப்பின்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் பாதிக்கும் மேற்பட்டவை ஊட்டச்சத்து குறைபாட்டால் நிகழ்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தாண்டின் துவக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று உலகை தாக்கியது. அது இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. திடீரென்று ஒருநாள் பொது முடக்கம் மற்றும் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அதுதான் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் என்றும் கூறினார். ஆனால் அதனால் புலம் பெயர் தொழிலாளர் உள்ளிட்ட நாட்டின் ஏழை, எளிய மக்கள்பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல, பட்டினிச் சாவுகளும் ஏராளமாய் நிகழ்ந்தன.

பொது முடக்க காலத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் ஆறு மாதகாலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிவாரண கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தின. ஆயினும் இதுவரை அதற்காக ஒரு சிறு துரும்பைக்கூட மத்திய அரசு கிள்ளிப் போடவில்லை.இந்நிலையில், ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா செய்தியாளர்களிடம் பேசும்போது கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் மக்களின் உயிரை காப்பதற்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் நேரடிநிதியுதவியாக மக்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா பொது முடக்க காலத்தில் மக்களிடம் நேரடியாக பணம் வழங்க வேண்டும்என்கிற கோரிக்கையை இதுவரை ஏறெடுத்தும் பார்க்காத மோடி அரசாங்கம் இனிமேலாவது செயல்படுத்த முன்வருவது நாட்டு மக்களுக்குநல்லது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு உதவுவதாக அது அமையும்.
 

;