செவ்வாய், அக்டோபர் 27, 2020

தலையங்கம்

img

எங்கே செல்கிறது தேசம்..!

தலித் மக்களுக்கு எதிராக அரங்கேறும் ஒவ்வொரு வன்கொடுமையும்  நாகரீக சமூகத்தின்மீது காரி உமிழ்வதாகவே இருக்கிறது. குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வல்லுறவு கொலைகள் ஒவ்வொன்றும் குலை நடுங்கச் செய்கிறது. மனிதம் எங்கே என்றகேள்வி மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரை யும் பிடித்து உலுக்குகிறது.

இந்தியா முழுவதும்   தலித் பெண்களுக்கு எதிரான வல்லுறவு வழக்குகள் கடந்த நான்குஆண்டுகளில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்கிறது தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் புள்ளி விபரம். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்களின் மீதான தாக்குதல்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது தற்செயலானது அல்ல.  குறிப்பாக பாஜகஆளும் மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக அலகாபாத்நீதிமன்றத்தின் கேள்விகள் யோகி ஆதித்யநாத்அரசு எந்த அளவிற்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. ‘சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்என்ற பயத்தால் உடலை எரித்தோம் என்கிறீர்கள்.சமூக விரோதிகளுக்கு பயந்து முக்கியமான தடயமான சடலத்தையே பாதுகாக்க முடியாத உங்களால், உயிரோடு வாழ்பவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? சட்ட விரோதமாக, முக்கிய தடயத்தை அழித்த உங்களை சஸ்பெண்ட் செய்யாமல் ஏன் அரசு போற்றிப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது?”  என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 

இந்நிலையில்தான் “உத்தரப்பிரதேச  மாநிலத்தில் வழக்கு நடந்தால் எங்களுக்கு நீதி கிடைக்காது. வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுங்கள். அதுவரை நாங்கள் கொல்லப்பட்டு விடாமல் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடுங்கள்” என கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தின ரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளுக்கு  எதிரானகுற்றங்கள் 70 சதவிகிதம்   அதிகரித்திருக்கிறது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியானாவில் நூறு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்தியா முழுவதும் 2009 முதல் 2018 வரை சிறப்பு நீதிமன்றத்திற்கு  எட்டிய சாதிய வன்கொடுமை வழக்குகளில்  25.2 சதவீதம் மட்டுமே தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன.  62.5 சதவிகித வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வர்ணாசிரம முறையிலான சாதிய பாகுபாடு நீடிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்-சின் கோட்பாடே இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படை காரணமாகும். இந்தக் கோட்பாட்டை பாஜக தலைமையிலான மோடி அரசு  நிலை நிறுத்த முயல்கிறது. இது தலித் மக்களுக்கு எதிரான நிலை மட்டுமல்ல. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான நிலையும் ஆகும். இந்த பிரிவினைவாத கும்பல்களிடமிருந்து தேசத்தை பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட்டக் களம் காண வேண்டும்.
 

;