தலையங்கம்

img

ஆசியாவிலேயே மிக மோசம்

தொற்று 1000 ஆக இருந்தபோது தேசம் பூட்டப் பட்டது; தொற்று 10 லட்சத்தை கடந்தபோது ஆட்சியாளர்களின் வாய் பூட்டப்பட்டுள்ளது- என்ற வாசகங்களுடன் ஊடகங்களில் வெளியாகி யுள்ள கேலிச் சித்திரம் ஒன்றே போதும், மோடி அரசின் உச்சகட்ட அலட்சியத்தையும், பரிதாப கரமான தோல்வியையும் அம்பலப்படுத்துவதற்கு.

“கோவிட் பெரும் தொற்றை எதிர்த்தப் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் தொற்றும் மரணங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. திட்டமிடப்படாத, தான்தோன்றித் தனமான ஊரடங்கு மூலம் மக்களுக்கு சொல் லொண்ணா துயரங்களை விளைவித்தது மோடி அரசு. இப்போது தம்மை தாமே காத்துக் கொள்ளும் நிலைக்கு மக்களைத் தள்ளி கை கழுவ முயல்கிறார் மோடி” என்று கடுமையான விமர்சனக் கணைகளை தொடுத்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

தொற்று பாதித்த உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், பரி சோதனைகள் நடக்கும் செய்வதில் கடைசி நாடு களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆசியா என்ற வரையறையில் 21 நாடுகள் உள்ளன. இவற்றில், கொரோனா தொற்று பரிசோதனை செய்வதில்  இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது. தற்போதுள்ள விப ரங்களின்படி ஒவ்வொரு 13 பரிசோதனைகளில் ஒரு பரிசோதனை கொரோனா பாதிப்பு உறுதி எனக் காட்டுகிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே பாதிப்பின் பரவலை மிகச் சரியாக கணித்து மக்களை பாதுகாக்க முடியும். மியான்மர், தைவான், தென்கொரியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அதிகமான பரிசோதனைகளை நடத்தி யதன் விளைவாகவே தொற்று பரவலை கட்டுக் குள் கொண்டு வர முடிந்தது என்பதை ஆசியா வின் மிகப் பெரிய நாடான இந்தியாவின் ஆளும் அரசு உணர மறுக்கிறது. இதன் விளைவாக கொரோனா தொற்று நோயை கையாளுவதில் ஆசியாவிலேயே மிக மோசமான நாடு என்ற நிலைக்கு இந்தியாவை குப்புறத் தள்ளியுள்ளது மோடி அரசு.

பரிசோதனை மட்டுமல்ல, தொற்று பரவலி லும் மரண விகிதத்திலும் ஆசியாவின் பிற நாடு களை விட இந்தியாவே ஆபத்தான நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தா னில் கூட, தொற்று பரவல் வரைபடம் உச்சத் திற்கு சென்று கீழே இறங்கத் துவங்கிவிட்டது. வங்கதேசத்தை பொறுத்தவரை பரவல் விகிதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வரைபடம் நேர் கோடாக மாறிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் இரண்டாவது அலை ஏற்பட்ட போதும், அதையும் சீரான நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்று வருகிறார்கள். கிர்கிஸ்தான், ஜப்பான், இந்தோனேசியா போன்றவையும் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. மரணத்தை கட்டுப்படுத்துவதிலும் இதே நிலைதான். இவற்றில் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்து மக்களை காவு கொடுக்கிறது மோடி அரசு. வெற்றுச் சவடால் வாய் பிளந்து நிற்கிறது.  

;