சனி, செப்டம்பர் 26, 2020

தலையங்கம்

img

அநியாயமான தீர்ப்பு

 தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப் பட்டோருக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளி லும், பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு வழங்கு வது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது அநியாயமான தாகும். இது சட்டவிரோதமானதும் கூட. உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வாயம், அரசமைப்புச் சட்டத்தின் 16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய பிரிவுகள், சட்ட ஷரத்துக்களை இயக்கிடும் பிரிவுகள்தான் என்றும், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசாங்க வேலைகளிலும், பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும் வியாக்கியானம் செய்திருக்கிறது. இதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றமானது உத்தர்கண்ட் உயர்நீதிமன்றம் மாநில அரசு இட ஒதுக்கீடுகள் அளித்திட வேண்டும் என்று பிறப்பித்திருந்த தீர்ப்பை ரத்து செய்திருக்கிறது. இட ஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வுகள் வழங்குவது தொடர்பான ஷரத்து, அடிப்படை உரிமையாக இல்லாதிருக்கலாம் என்றபோதி லும், இவை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய அரசமைப்புச் சட்ட ஷரத்துக்களா கும். இவற்றை இந்தியா முழுவதும் அமல்படு த்தப்பட வேண்டியதும் அவசியமாகும். அரசமைப்புச்சட்டத்தை உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருக்கும் விதம் தலித் விரோத, பழங்குடியினர் விரோத மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விரோத ஒன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மிகச்சரியான முறையில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இவ்வாறு வியாக்கி யானம் செய்யக்கூடிய விதத்தில் இருக்கும் இடைவெளியைச் சரிசெய்திட மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக வலியுறுத்தியுள்ளது. சட்டமியற்றியதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற இடைவெளியை உடனடி யாக சரி செய்திட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய வியாக்கியானத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்திட சாத்தியமான சட்ட நடவடிக்கை கள் அனைத்தையும் எடுத்திட வேண்டும். உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இதேபோன்று ஒரு அநியாயமான தீர்ப்பினை வழங்கியது. தலித் - பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தவறாக பிரயோகிக்கப்படுவ தாக பொய்யாக தொடரப்பட்ட வழக்கில், அந்த சட்டத்தின் உயிரையே உருவி நீர்த்துப்போகச் செய்தது. ஆனால் மோடி அரசு வேடிக்கை பார்த்தது. அச்சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்களும் தலித் உரிமை இயக்கங்களும் எழுச்சிமிகு போராட்ட ங்களை நடத்தின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அத்தீர்ப்பை செல்லாததாக்கும் விதத்தில் சட்டத்திருத்தம் செய்திட மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் இடஒதுக்கீடு தீர்ப்பில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது  உச்சநீதிமன்றம் பொறுப்பின்றி நடந்துகொள் வதையே வெளிப்படுத்துகிறது.

;