சனி, செப்டம்பர் 26, 2020

தமிழகம்

img

தேசிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் - தமுஎகச முதல்வருக்கு கடிதம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது. தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவண் தீட்சண்ய எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது

அய்யா, வணக்கம். 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 3, 4ஆம் தேதிகளில் இணையவழியில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  
 
 *மும்மொழிக்கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு 
தேசிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும்* 

தேசிய கல்விக்கொள்கையின் வரைவறிக்கை வெளியானதிலிருந்தே அது கல்வித்துறையில் இதுகாறும் நாடு எட்டியுள்ள சாதனைகளை பின்னிழுக்கவும், இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றதாக இந்தியக் குழந்தைகளின் கருத்துலகை கட்டமைக்கவும், கல்வியை முற்றாக வணிகமயமாக்கவும் கொண்டு வரப்படுகிறது- உள்ளிட்ட ஆபத்துகளை முன்னிறுத்தி தமுஎகச எதிர்த்து வந்திருக்கிறது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மாற்று முன்மொழிவுகளையும் பொருட்படுத்தாத மத்திய அரசு இக்கொள்கையை அதன் மூலவடிவிலேயே நம்மீது திணிக்கும் முடிவுக்கு வந்துள்ளது. கல்வி தொடர்பாக மத்திய அரசே எல்லாவற்றையும் தன்னிச்சையாக முடிவெடுப்பதும் இறையாண்மையுள்ள மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் கையை முறுக்கி அவற்றின் ஒப்புதல் பெறுவதுமாகிய நிலைமையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கல்வி மாநிலப் பட்டியலுக்குரியதாக மாற்றப்பட வேண்டும் என்று வலுவாக கோருவதற்கு இதுவே தக்க தருணமென தமுஎகச கருதுகிறது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், மும்மொழிக்கொள்கையை ஏற்கமாட்டோம் இருமொழிக் கொள்கையே தொடரும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை தமுஎகச வரவேற்கிறது. இந்த கல்விக்கொள்கையின் இதர அம்சங்கள் பற்றி ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக அரசால் அமைக்கப்படவிருக்கும் குழுவினை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உளவியலாளர்கள் ஆகியோரை கொண்டதாக அமைப்பது அவசியம். கல்விப்புலத்திலும் அதன் வழியே சமூகக்கட்டுமானத்திலும் தமிழகம் இதுகாறும் எட்டியுள்ள சாதனைகளை தற்காத்துக் கொண்டு முன்னேறவும், மாணவர் நலன், மாநில உரிமைகள், பண்பாட்டு தனித்துவம் மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும்  தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையினை முழுமையாக நிராகரிக்க வேண்டும். 

 *கருத்துகள் தொடர்பான மோதல்களைச் சமாளிக்க
வல்லுனர் குழுவை அமைத்திடுக* 

கலை, கலாச்சாரம் தொடர்பான விஷயங்களில் உருவாகும் முரண்பாடுகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை காவல்துறை அதிகாரிகளிடமோ உள்ளூர் நிர்வாகத்தினரிடமோ மட்டுமே விட்டுவிட முடியாது; கருத்துகள் தொடர்பாக உருவாகும் மோதல்களால் உருவாகும் நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் வல்லுனர் குழு ஒன்றை அரசு உருவாக்க இதுவே சரியான தருணமாகும். படைப்பிலக்கியம் மற்றும் கலையின் பல்வேறு துறைகளைச் சார்ந்த தகுதியான ஆளுமைகளைக் கொண்டதாக இந்த வல்லுனர் குழு இருக்க வேண்டும்” என்று  பெருமாள் முருகன் வழக்கில் உயர் நீதிமன்றம் பணித்திருப்பதை தமிழக அரசு இதுகாறும் உதாசீனம் செய்து வருவது ஏற்கத்தக்கதல்ல. கலை இலக்கிய அமைப்புகள் மற்றும் ஆளுமைகளைக் கொண்டு அத்தகையதொரு குழுவினை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.  

 

;