திங்கள், அக்டோபர் 26, 2020

தமிழகம்

img

கொரோனா தொற்றாளர்களை அலைக்கழிக்காதீர்... மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துக... மருத்துவமனைகளை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

கோயம்புத்தூர்:
ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவக் கட்டமைப்பு போதாமைகள் காரணமாக கொரோனா தொற்றாளர் களை அலைக்கழிக்கும் போக்கை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மருத்துவமனைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீபமாக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்சமயம், கொரோனா தொற்றால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. திங்களன்று  ஒருநாள் மட்டும் 648 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத் துறையின் அலட்சியம் காரணமாக நோயாளிகள் அவதிக்குள்ளாவதும், அலைக்கழிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது. குறிப்பாக, ஆக்சிஜன் போதாமையின் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இத்தகைய அலட்சியப் போக்கு மற்றும் குறைபாடுகளை களையக்கோரி கோவை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மேற்குறிப்பிட்ட இரண்டு மருத்துவமனைகளையும் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவ மனையின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் கோவை மாவட்டசெயலாளர் வி. இராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். 

கோவை இஎஸ்ஐ மருத்துவம னையின் முன்பு நடைபெற்ற முற்றுகைபோராட்டத்திற்கு கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு, இடைக்குழு செயலாளர்கள் மற்றும் முன்னணிஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், கொரோனா சிகிச்சையில் அலட்சியம் காட்டக்கூடாது, கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல்வசதிகள் செய்யப்பட வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு  ஆக்சிஜன் வசதிகளை அதிகப்படுத்த  வேண்டும். மருத்துவமனையில் சுகாதாரத்தை அதிகப்படுத்த வேண்டும்.  சிகிச்சையில்  இருப்பவர்கள் முழுமையாக குணமடையும் முன்பாக அவர்களை  வீட்டிற்கு அனுப்பக் கூடாது.மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு முடிவுகள் வரும்வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். 

இதனையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களோடு, அரசு மருத்துவமனையின் முதல்வர் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்களுக்கு உள்ள அதிகாரத்திற்குட் பட்டு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும், மாநில அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகள் குறித்து உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பால் மருத்துவமனைகளின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

;