வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தமிழகம்

img

அத்திவரதரை காண படையெடுக்கும் மக்கள் போதிய கழிவறை இல்லாததால் காஞ்சி முழுவதும் துர்நாற்றம்

காஞ்சிபுரம், ஆக.14-  அத்திவரதர் விழாவினால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். அத்திவரதர் திருவிழா நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரத்திற்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இதனால் காஞ்சிபுரத்தில் வசிக்கும்  மக்கள் வீட்டை விட்டே வெளிவர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரத்தைச் சுற்றிலும் 20 கிலோ மீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் காலை முதல் ஏற்படுவதால் அன்றாட செயல்பாடுகளில் ஈடுபட முடியவில்லை என நகர வாசிகள் கூறுகின்றனர். மேலும, காஞ்சிபுரம் பட்டு விற்பனை உள்ளிட்ட அனைத்துத்தரப்பு வியாபாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் கூறியதாவது:- காஞ்சிபுரம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், எந்த பணிகளிலும் ஈடுபட முடியாமலும் முடங்கிக் கிடக்கின்றனர். காஞ்சிபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு போதிய உணவு வசதிகளும், கழிப்பறை வசதிகளும் போதுமானதாக இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளின் இணைப்புகள் நகரின் கழிவுநீர் கால்வாய்களில் இணைக்கப்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் உள்ளூர் ஜவுளி வர்த்தகம் முற்றிலும் முடங்கி கிடக்கிறது.

வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்டு நகரின் அனைத்துத்தரப்பு மக்களும் கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர். 200 மீட்டர் நடந்து செல்லும் பகுதிகள் கூட காவல் துறைகளால் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதால் நகர மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குக் கூட நடந்து செல்ல முடியவில்லை. முழுவதுமாக காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பணியில் உள்ள காவலர்கள் அனைவரும் வெளி மாவட்ட காவலர்கள் என்பதால் நகரின் முக்கிய தலைவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.  காஞ்சி நகரம் முழுவதும் எங்கும் காவல்துறையினர் இருப்பதால்  நகர மக்கள் அச்ச உணர்வில் இருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கண்டு  கொள்ளாமல் உள்ளது.

நகரத்தில் அத்தி வரதரைக் காணவந்த பொதுமக்கள் பத்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலர் பசியால்  மயக்கமடைந்தும் இறந்து போனவர்களும் ஏராளமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே  45 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெள்ளை அறிக்கையாக மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.  அத்திவரதரைக் காணவரும் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு, நவீன முறையிலான பாதுகாப்பை ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில்  நடைபெறும் இதுபோன்ற மிகப்பெரும்  நிகழ்வுகளில் நகர் மக்கள்,அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகளிடம் கருத்து கேட்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டிருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

;