வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

கட்டுரை

img

‘சொர்க்கலோகத்தில்’ நெருப்பு : பொறுப்பற்ற டிரம்ப் நிர்வாகம்

கொரோனாவைரஸ் தொற்று நெருக்கடி போன்றே, ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தைத் தொடர்ந்து எழுச்சி வெடித்ததற்கு, டிரம்ப் நிர்வாகத்தின்  வெளியே தெரியாத நிலையில் உள்ள துரோக நடவடிக்கைகள் மட்டுமல்ல, சமீபத்திய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்ததால் ஏற்பட்ட தோல்வியும் காரணங்களாகும்.

கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவில் இறந்தோர் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள விவரம், ஒரு லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. அதேசமயத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக 4 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இவ்வளவு விரைவாக ஏற்பட்டுள்ள வறிய நிலையின் கொடூரம் எத்தகையதாக இருக்கும் என்று கற்பனை செய்வதுகூட கடினமாகும்.  ஆனாலும், மின்னாபொலிஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடூரமான ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு வீடியோ சாட்சிகளாக நாம் மாறியிருக்கிறோம். பலமுனைகளிலிருந்தும் ஒரு நெருக்கடி உருவாகும்போது உலகம் என்னவாகும் என்பதற்கு அமெரிக்காவில் வெள்ளிக்கிழமையன்று கடைகள் சூறையாடப்பட்டதும், கட்டிடங்களும் கார்களும் தீக்கிரையானதும் சாட்சியங்களாக இருக்கின்றன.

பொறுப்பற்ற டிரம்ப் நிர்வாகம்
கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆரம்பத்திலிருந்தே டிரம்ப் நிர்வாகம் அசமந்தமாக இருந்து வந்ததிலிருந்தும், அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியானமுறையில் கணிக்கத் தவறியதிலிருந்தும், இப்போது நடந்துள்ள சம்பவங்கள் முற்றிலும் வேறானது என்பது போன்றே தோன்றுகிறது. மார்ச் மாதத்தின்போது, “கொரோனா வைரஸ் தொற்று இந்த அளவிற்கு உலக அளவில் பரவும்,” என்று எவருக்கும் தெரியாது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.  இதே மாதிரியே அவசரநிலைக் காலம் முழுவதும் அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வந்த ஒவ்வொருவரும், புதிதாக கொரோனா வைரஸ் தொற்று போன்று ஏதோ ஒன்று வந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். கடந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே, நாம் சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS), எபோலா (Ebola) மற்றும்  எச்1என்1 (H1N1) போன்று பல தொற்றுக்களைப் பார்த்திருக்கிறோம். ஒபாமா நிர்வாகம், இத்தகைய நிகழ்வுகளின்போது இவற்றின் வீரியத்தைத் தணித்திட நடவடிக்கைகள் எடுப்பதற்காக தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் இயக்குநரகம் (National Security Council Directorate) ஒன்றை உருவாக்கி இருந்தது.   ஆனால் டிரம்ப் நிர்வாகத்தால் அது, பெரிய அளவில் கலைக்கப்பட்டுவிட்டது.

வெள்ளிக்கிழமையன்று, டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மின்னபொலிஸில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை, “குண்டர்கள்” (thugs) என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் அங்கே ராணுவம் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிட்டிருந்தார். “சூறையாடல்கள் துவங்கியதும்,” “துப்பாக்கிச் சூடுகளும் துவங்கின,” என்றும் அவர்  மிரட்டலுடன் கூறினார். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையும்கூட ஒரு நீண்டகால பிரச்சனையின் ஒரு பகுதியேயாகும். இதன் ஆபத்தான சமிக்ஞைகளை தற்போதைய டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது. முற்போக்கு சக்திகள் 1994ஆம் ஆண்டு குற்றச் சட்டமுன்வடிவை (1994 Crime Bill), விரிவானமுறையில் விமர்சனம் செய்தன. இதனை ஜோ பிடேன் (Joe Biden), முன்னெடுத்து வந்தார். எனினும் இது குறைத்தே மதிப்பிடப்பட்டு வந்தது. 1992இல் லாஸ் ஏஞ்செல்சில், ஒரு கறுப்பினத்தவரான ராட்னி கிங் என்பவரை மூர்க்கத்தனமாகத் தாக்கிய நான்கு காவல் துறையினரை (இந்த சம்பவம் வீடியோவில் படமாக்கப்பட்டு நாடு முழுதும் ஒளிபரப்பப்பட்டது) நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து, கலவரங்கள் வெடித்தன.  கலவரங்கள் நடைபெறும்போதெல்லாம், போலீசாரின் கோபம் கறுப்பினத்தவருக்கு எதிராகக் கிளம்புவது வாடிக்கையாகிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னோடி போன்று, லாஸ் ஏஞ்செல்ஸ் சம்பவம்,  பின்னர் ஃபெர்குசென் மற்றும் பால்டிமோர் சம்பவங்கள் எவ்விதத் தலையீடுமில்லாமலே இதுபோன்று பிரச்சனைகள் வெடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளாகும். ஆனால், டிரம்ப் நிர்வாகம் நாட்டில் உள்ள நிலைமைகளைப் புரிந்துகொள்வதற்கான திறமையின்றி, இவற்றைத் தடுப்பதற்கான தலையீடு எதுவுமே மேற்கொள்ளாமல், ஒரு கட்டிட காண்ட்ராக்டர் போன்றே செயல்பட்டிருக்கிறது.

போலீசுக்கு வானளாவிய அதிகாரம்
2017 ஜூலையில், டிரம்ப், நியூயார்க்கில் ஃசபோல்க் என்னுமிடத்தில் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்துகையில், சந்தேகத்தின்பேரில் கைது செய்து காவல்நிலையங்களுக்குக் கொண்டுவரும்போது அவர்களை நையப்புடைத்திட வேண்டும் என்பதுபோல் பேசினார்.   அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் வழக்குரைஞரான அட்டார்னி ஜெனரல், ஜெஃப் செசன்ஸ், காவல்துறை அமைப்புகளின் தேசிய சங்கத்தில் (National Association of Police Organizations) பேசியபோது,  “சட்டத்துறை ஒட்டுமொத்த காவல்துறைகளைக் கட்டுப்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காது. அவர்களுடைய தினசரி வேலைகளில் தலையிட மாட்டோம்,” என்றார்.  பின்னர் நவம்பரில், ஜெஃப் செசன்ஸ் தன்னுடைய கடைசி நடவடிக்கையாக, போலீஸ் துறைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சிவில் உரிமைகள் பிரிவுக்கு இருந்த அதிகாரத்தைக் கடுமையாக வெட்டிச் சுருக்கி, உத்தரவு பிறப்பித்தார். இதன்பொருள், சமூகத்தில் போலீசார் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கைகள்மீது, அத்தகைய போலீசாரின் வன்முறை வெறியாட்டங்களால் சமூகத்தில் எந்தவொரு வெடிப்பும் ஏற்படாதவரை, அரசாங்கத்தின் எந்தவொரு உயர் அமைப்பும்  தலையிடாது என்பதேயாகும். இத்தகைய வெடிப்புகள்தான் இப்போது மின்னபொலிஸின் வீதிகளில் நடந்துள்ளது.

வியாழக்கிழமையன்று, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், மின்னெசோட்டா மாகாணத்திற்கான அமெரிக்க அட்டார்னி, எரிகா மக்டொனால்ட் (Erica MacDonald), “ஜனாதிபதி டிரம்ப்பும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் (William Barr)-உம்  இந்த வழக்கில் புலனாய்வை நேரடியாகவும், சுறுசுறுப்பாகவும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். போலீசார் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பிரிவின் கூட்டம் ஒன்றில் தலைமை தாங்கும்போதுதான், பார் இவ்வாறு பேசுகிறார். 

கடந்த ஐந்தாண்டுகளில், இரட்டை நகரங்களாக விளங்கும் இந்தப் பகுதியில் போலீசாரின் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் மூன்று நிகழ்ந்திருக்கின்றன. 2015இல் ஜாமர் கிளார்குக் (Jamar Clark), 2016இல் பிலாண்டோ கேஷில் (Philando Castile), மற்றும் 2017இல் ஜஸ்டின் டாமண்ட் (Justine Damond). இம்மூன்று நிகழ்வுகளிலும் பல்வேறு ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கைகளே காரணங்களாகும்.  

வன்முறையை கொண்டாடும் டிரம்ப்
ஜனாதிபதி தமது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று காலை “சுடுவது  தொடங்கிவிட்டது” (“the shooting starts”) என்பதைப் பதிவேற்றம் செய்தார். போலீஸ் அதிகாரி டெரக் சாவின் (Derek Chauvin), ஜார்ஜ் ஃப்ளாயிட் கழுத்தில் தன் முழங்காலை வைத்து சுமார் எட்டு நிமிடங்கள் அழுத்திக்கொண்டிருந்து, பின்னர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்வதற்கு ஒருசில மணிநேரத்திற்கு முன்புதான், டிரம்ப் இவ்வாறு பதிவேற்றம் செய்திருந்தார். இவ்வாறான ட்ரம்பின் ட்விட்டர் பதிவேற்றம் என்பது, முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். “வன்முறையைக் கொண்டாடுதல்”(“Glorifying violence”) என்பது அரசின் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றாகும். எனினும் டிரம்ப் இவ்வாறு செய்திருந்தார். சாமானிய மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமெரிக்க ராணுவத்திற்கு ஒரு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பது, தலைமைப் பண்புக்கு எதிரான ஓர் அறிவற்ற செயலாகும். பொதுமக்களைக் குணப்படுத்துகிறோம் என்று கூறி அவர்கள்மீது கிருமிநாசினியை ஊசிமூலமாக உட்செலுத்துவதற்கு ஒப்பானதாகும் என்றும் இது ஒரு தவறான ஆலோசனை என்றும் விமர்சிக்கப்பட்டன.

‘நீடித்த சமூக நிகழ்வுகள்’
நம்முடைய பிரச்சனைகள் நமக்குத் தெரியவராத துரோகங்களிலிருந்து உருவாகிவிடவில்லை. அவை நம்மிடம் உள்ள பொருள்களைச் சரியானமுறையில் பயன்படுத்தாததால் ஏற்பட்ட தோல்வியின் விளைவுகளேயாகும். 1967 ஜூலையில் டெட்ராயிட்டில் வேலைநேரம் முடிந்தபின்னர் ஒரு மதுக்கூடத்திற்குள் மிருகத்தனமான முறையில் போலீசார் சோதனை மேற்கொண்டபின்னர், அந்த நகரத்தில் இதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் வன்முறை வெடித்தது. அதன்பின்னர் ஒரு மாதம் கழித்து, மார்ட்டின் லூதர் கிங், ஜுனியர், அமெரிக்க  மனநலவியல் சங்கத்தில் (American Psychological Association) ஓர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், கலவரங்கள் என்பவை  சட்டத்தை உயர்த்திப்பிடிக்கவேண்டியவர்களின் அத்துமீறிய சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவாக உருவான “நீடித்த சமூக நிகழ்வுகள்” (“durable social phenomena”)  என்று சித்தரித்தார்.

தலைவர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்திட முடியாதுதான். ஆனாலும், நடந்திடும் நிகழ்வுகளின் அடிப்படையில், அவை உருவாக்கக்கூடிய ஆபத்துக்களை உய்த்துணர்ந்து, அறிவாற்றலுடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட முடியும். அவர்கள் புலன்கள் காணாதவற்றைக் காணும் திறனுடையவர்களாக இல்லாது இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

கட்டுரையாளர் : அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி நியூயார்க்கர் இதழின் செய்தியாளர்
தமிழில்
: ச.வீரமணி
 

;