கட்டுரை

img

மருத்துவ முறைகளையாவது கூட்டுங்களேன்....

கொரோனா வைரஸ் கிருமி தொற்று பரவல் 100 நாட்களைக் கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பலியானோர் எண்ணிக்கை என்பது செய்திகளில் விலைப்பட்டியல்போல் நிரந்தரமாகிவிட்டது.  நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக்கவும், திட்டமிடவும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, அவரவர் அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்ற கோரிக்கையை கேளாக் காதினராக அரசு புறந்தள்ளிவிட்டது.  

இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி பல விஷயங்களில் நீதிமன்றங்கள் குட்டுவைத்தபின் அதனைத் துடைத்துக்கொண்டு தனது முடிவுகளாக அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு மனமில்லை என்றாலும் அனைத்துவகை மருத்துவ முறைகளையாவது கூட்டுங்கள் என்ற கோரிக்கையும் நிலுவையில் கிடக்கிறது. இந்திய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்தை மட்டும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ முறையின் கீழ் சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒரு மரணம் கூட இல்லாத சிகிச்சை என்பது கூடுதல் சிறப்பு. இந்த மருத்துவமனையை விரிவுபடுத்திக் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகளை அனுப்பினால் குணமடைந்தோர்  எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் ஆயிரம் படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தக்  கோரிக்கை குரலுக்கும் செவிசாய்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதிலும் ஒரு மருத்துவ அரசியல் இருக்கிறதோ! 

சிக்குன்குனியா நோய் பரவியபோது அதற்கான மருந்தினை ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகளில்தான் மக்கள் தேடியடைந்தார்கள். வலி தணிக்கும் (பெயின் கில்லர்) மருந்துதான் ஆங்கில (அலோபதி) மருத்துவ முறையில் இருக்கிறது. இந்த மருந்து சிக்குன்குனியாவைக் குணப்படுத்த போதாது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவமுறைக்கு செல்வது நல்லது என்று தெய்வசுந்தரம் போன்ற ஆங்கில முறை மருத்துவர்களே பரிந்துரை செய்ததைப் பார்க்க முடிந்தது. பலனும் கிடைத்தது. உள்ளுக்கு கஷாயம்; மேலுக்கு எண்ணெய் என நாள்கணக்கில் பயன்படுத்தி சிக்குன்குனியா நோயிலிருந்து மீண்டவர்கள் ஏராளம்.அடுத்து டெங்கு காய்ச்சல். இதற்கும் ஓடி ஓடி அலைந்து இறுதியில் நிலவேம்பு கசாயத்தைக் கண்டடைந்தனர். பிறகு அதனைத் தேநீர், காப்பி போல அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினர். எல்லா இடங்களிலும் மருத்துவமனைகளிலும் அரசே இலவசமாக நிலவேம்பு கசாயம் கொடுத்தது. அதுவும் கூட ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைவாக இருந்ததற்குக் காரணமாக இருக்கலாம். 

கொரோனா பாதிப்புக்குப்பின் கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஓயாமல் சொல்லி சொல்லித்தான் அரசின் ஒப்புதலைப் பெற முடிந்தது. அதன் பிறகு இப்போது ஒருவருக்கு நோய் பாதித்தால் அந்தத் தெருமுழுவதும் கபசுரக் குடிநீர் மருந்து பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தாமதம் ஆனாலும் பரவாயில்லை. முற்றாக மறுக்கப்பட வில்லையே என இந்த விஷயத்தில் ஆறுதல் அடையலாம். ஆனால் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஆர்சானிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகள்  நான்கினை மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரை மூன்று மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் அந்த மாத்திரைகளைக்  கொள்முதல் செய்து நோய் பாதித்தவர்களுக்கு அரசு வழங்குவதாக தகவல் இல்லை. மாறாக ஹோமியோபதி மருத்துவத்திற்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட டாக்டர் கோபிகார் பெயரில் நடத்தப்படும் அறக்கட்டளை மூலமாக ஆர்சானிக் ஆல்பம் 30 மாத்திரைகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான ஹோமியோபதி மருத்துவர்கள் நேரடியாகக் களத்திற்கு சென்று இந்த மாத்திரைகளின் பயன் குறித்து விவரித்து வழங்கிய செய்திகள் வெளிவந்தன. இந்த மாத்திரைகளால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததும் பல நேர்வுகளில் நிரூபணமானது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் செயல்படுகிறோம் என சொல்லிக் கொண்டிருக்கும் முதலமைச்சரும் சுகாதாரத் துறை அமைச்சரும் ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளில் கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முறைப்படியான அனுமதி அளிக்காதது ஏன் என்ற கேள்வி அர்த்தமுள்ளது. 

யுனானி முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று அண்மையில் கூட கோரிக்கை மனு முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கோரிக்கை மற்ற மருத்துவ முறைகள் சார்ந்தும் அரசுக்கு வந்திருக்கும்.   
ஒவ்வொரு மருத்துவ முறையும் உயிர் காக்க உதவும் என்றால் அது சார்ந்த மருத்துவர்களை அழைத்து மருந்துகள் பற்றி கேட்டறிந்து, அவற்றைப் பரிசோதித்து, மத்திய அரசின் ஆயுஷ் மற்றும் ஐசிஎம்ஆர் அனுமதி பெற்று சிகிச்சைக்கு வழிவகுப்பதுதானே சரியாக இருக்கும். இன்னமும் கூட அந்த முயற்சியை மேற்கொள்ளாமல் தாமதம் செய்வது மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது ஆகுமா?  அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடியாது என்று அரசு அடம்பிடிக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, அனைத்து மருத்துவ முறைகளின் மருத்துவ நிபுணர்களையாவது கூட்டலாமே! ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாமை காட்டும் நிலைமையில் மாற்றம் கொண்டுவந்து மக்கள் தங்களுக்கான மருத்துவ முறைகளைத் தெரிவு செய்து கொள்ள அனுமதிக்கலாமே! எதில் அதிகப் பயன் கிடைக்கிறதோ அதனைப் பரவலாக்குவதுதானே மக்கள் நலன் காப்பதாக இருக்கும்?

====மயிலை பாலு===

;