கட்டுரை

img

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 பேரிடர் காலத்தின் சூறையாடல் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

மத்திய அரசின் இந்த வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 2020, ஆகஸ்ட் 11 வரை அவகாசம் வழக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது கருத்துகளை eia 2020-moefcc@gov.in என்ற முகவரிக்கு அனுப்புவது மிகவும் அவசியமாகும். மக்கள் இயக்கங்கள் இதை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிட வேண்டும்.

கொரோனா காலத்தில் மோடி அர சாங்கம் செய்துவரும் அநியாயங் கள் சொல்லி மாளாது. இந்த பேரி டரை முன்வைத்து மத்திய அரசு செய்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகள் கணக்கில் அடங்காது. மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட  ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு கொடுப்பது ‘இயல்பான’ ஒன்றாக மாறிப் போயுள்ளது. துண்டு துண்டாய் கொடுத்து மிகவும் சலித்து போன மோடி அரசு தேசத்தின் வளங்கள் அனைத்தையும் ஒரே சட்டத்தின் மூலம் அடகு வைக்க துணிந்து விட்டது. அதன் பெயர்தான் ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’ ஆகும் (Environment Impact Assessment -2020). 

ஐந்து திட்டங்கள்

1   சூரியன் உதயமாகும் நிலம், இயற்கை அதிசயம் என குறிப்பிடப்படுகிற அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 4 தேசியப் பூங்காக்கள் மற்றும் 7 வனவிலங்கு சரணால யங்கள் உள்ளன. 83.749 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதா கும். பன்முகத் தன்மை வாய்ந்த, பல்லுயிரி நெருக்கம் நிறைந்த அருணாசலப் பிரதேசத்தில் நெட்டாலின் ஹைட் ரோ பவர் திட்டத்திற்கு இக்காலத்தில் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. திபாங் ஆற்றில் 278 மீட்டர் உயரத்துக்கு அணை கட்ட ரூ.1,600 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே மிக உயரமான அணையாக இது இருக்கும். ஆனால் இந்த நீர் பரப்பின் உயர்வால் குடும்பங்களை இழக்கும் வன மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? 

2 அசாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகா வோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்கா காசிரங்கா வனவிலங்கு சரணாலயம்  ஆகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் இங்கு இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கின்றன. பிரம்ம புத்திரா நதிப் படுகையில் உள்ள இந்த காடுகளில் உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு வசிக்கின்றன. இவை தவிர யானைகள், காட்டெரு மைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்க ளும் காசிரங்காவின் சிறப்பு அம்சமாகும். 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகு தியில் யானைகள் காப்பகம் அருகில் நிலக்கரி சுரங்கத் திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

3 மத்தியப் பிரதேசத்தில் கஜூராஹோவிற்கு அருகில் அமைந்துள்ளது பண்ணா தேசியப் பூங்கா. இந்த வன விலங்கு சரணாலயத்தில் அதிகம் புலிகளைக் காணலாம். பண்ணா காட்டு பகுதியில்தான் மோடியின் முதல் நதிகள் இணைப்பு திட்டம் உருவானது. பண்ணா புலிகள் காப்ப கத்தின் 4141 ஹெக்டேர் நிலங்கள் பறிக்கப்பட்டன. அதாவது 105 சதுர கிலோமீட்டர் பகுதி சூறையாடப்பட்டது. அப்போது எதிர்ப்பு கிளம்பியவுடன் இது மக்களுக்கு ஆதர வான திட்டம், இனி இங்கு எவ்வித சுரங்கப் பணிகளும் நடக்காது என மோடி அரசு சத்தியம் செய்தது. ஆனால் இப்போது  இக்காடுகள் பகுதியில் வைரம் எடுப்பதற்கு கார்ப்ப ரேட் கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

4 650 கிமீ தூரம் கொண்ட பிட்ர்கனிகா சதுப்புநில காடு கள் நிறைந்த ஒடிசா மாநில சந்திரபிலா சுரங்கம் உள்ள வனப்பகுதியில் தாளபிரா II மற்றும் III நிலக்கரி சுரங்கம் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது. இது 2018 ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் சுரங்கத்தை உருவாக்கி இயக்கு வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. பிடிஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அதானி நிறுவனம், இச்சுரங்கம் மூலம் 12,000 கோடி வருமானம் ஈட்டும் என்று குறிப் பிட்டது. வனம் கொடூரமாக அழிக்கப்பட்டது. இது போதா தென இப்போது அதானி நிறுவனத்திற்கு அந்த நிலக்க ரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய திட்டத்திற்கும் மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

5 குஜராத் மாநிலத்தின், சௌராஷ்ட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான கிர் தேசியப் பூங்கா இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லை மோடி அரசு. கிர்காடு களில் சுண்ணாம்புக் கல் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இவைகளுக்கு யாரிடமும் அனுமதி பெறா மல் இருக்க மோடி அரசு கொண்டு வந்துள்ளது தான் EIA - 2020 ஆகும்.

சுழலியல் சட்டம் 2006

இந்தியா மிகவும் வளம் மிக்க பன்முகத்தன்மை வாய்ந்த நிலபரப்பைக் கொண்டது. பசுமைக் காடுகள் நிறைந்த, 6 மாநிலங்களில் படர்ந்து செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், Ever Green Forest என்றழைக்கப் படும் வடகிழக்கு மாநில பசுமைக் காடுகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், அதில் உள்ள கனிம வளங்கள், பல்லா யிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரைகள், 100க்கும் மேற்பட்ட ஆறுகள், சதுப்பு நில காடுகள், தக்காண பீடபூமி என வியத்தக வளங்களை கொண்ட நாடு. ஆனால் இந்த வளங்களை கொன்றழிக்க மோடி அரசு அலைகிறது. அதற்கு தடையான சட்டங்களை உடைத்து வருகிறது.

1972-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “மனித சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு பிரகடனத் தின்” அடிப்படையில், “சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்ப தும், மேம்படுத்துவதும் அடிப்படைக் கடமை” (Fundamen tal Duty) என்பது 1976-ல் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் “போபால்” துயரத்திற்குப் பிறகு - சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. 

கடந்த 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச் சூழல் சட்டமே பல குறைபாடுகளை கொண்டதுதான். இருப்பி னும் ஒரு சில பாதுகாப்புகளாவது அதில் இருந்தன. சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் பசுமை தீர்ப்பாயம், உயர் மற்றும் உச்ச நீதி மன்றங்களின் தலையீடுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆனால் 2006 சட்டத்தை வலுவாக்கப் போகிறோம் என்ற பெயரில் மிகவும் ஆபத்தானதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 வந்துள்ளது. கொரோனா பாதிப்புள்ள இந்த சூழலில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வரைவு அறிக்கையை தயாரித்து ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் இதுகுறித்த கருத்துக்களை மக்கள் கூற வேண்டும் என மத்திய அரசு கூறியது. இதனிடையே தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இது இந்திய நாடு முழுவதும் பாதிப்புகளை உருவாக்கும் வரைவு என்ப தால் 22 மாநில மொழிகளில் இதை மொழிபெயர்த்து 10  நாட்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு கருத்து சொல்லும் காலத்தை ஆகஸ்ட்11 வரை தள்ளி வைத்துள் ளது. ஆனால் இதுவரை மொழிபெயர்ப்பு பணி நடக்க வில்லை.  

சுற்றுச்சூழல் தாக்க  அறிக்கை என்பது என்ன? 

அரசு திட்டங்கள் எனில் அரசும், தனியார் திட்டங்கள் எனில் அரசு அனுமதிபெற்ற தனியார் அமைப்புகளை வைத்தும் முதலில் சாத்திய கூறு அறிக்கையையும் (Feasibility Report)  பின்பு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும் (Environment Impact Assessment Report) தயார் செய்து அதை திட்ட அமலாக்கம் நடைபெற வுள்ள மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மூலம் வெளியிட்டு 30 நாட்கள் மக்கள் கருத்துக்கு காத்திருந்து, பின்னர் உள்ளூர் மொழிகளில் கருத்து கேட்பு கூட்டத்திற்கு அறிவிப்பு செய்வர். பின்னர் பொதுமக்கள் கருத்துக்கேட்பு (Public Hearing) கூட்டம் நடத்தி மக்கள் கருத்துக்களை கேட்டு பின்புதான் அந்த திட்டம் அமலாக்கம் நடக்கும். இதில்கூட தனியார் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது உண்டு. 

உதாரணமாக 2014 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேலிங்கிராயன் பேட்டை கிரா மத்தில் குட் எர்த் ஷிப் யார்டு என்ற கப்பல் கட்டும் தளம் துவக்க கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. ஆனால் அந்த தளத்துடன் ஒரு இரசாயன நிறுவனம் துவங்கும் செய்தியை மறைத்திருந்தனர். மேலும் அந்த கூட்டத்திற்காக வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்திருந்தது அண்ணா பல்கலைக்கழகம். ஆனால் அப்போது அந்த பல்கலைக்கழகத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான அனுமதியே இல்லை என்பதைக் கண்டறிந்து, அதில் உள்ள தவறு களை சுட்டிக்காட்டி, அன்றைய சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் உள்ளூர் மக்களும் இணைத்து போராடி அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்தனர்.        

சட்டப் பிரிவை மாற்றி வாழ்வை சூறையாடும் பயங்கரம் 

2006 ஆண்டு சட்டத்தில் பிரிவு A என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய திட்டங்கள் என்றும், பிரிவு B மாநில அரசுகளிடம் அனுமதி வாங்க வேண்டிய திட்டங்கள் என்றும் இருந்தது. ஆனால் இந்த இரண்டுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும், மக்கள் கருத்து கேட்பும் முக்கியம். ஆனால் 2020 சட்டத்தில் பிரிவுகள் A மற்றும் B என்பதை மாற்றி  பிரிவு கள் A1, B1, B2 என மூன்றாக பகுத்துள்ளனர். இதில் B2 என்ற பகுதியில் வரும் திட்டங்களுக்கு எவ்வித சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதியும் தேவையில்லை என்று வகுத்தி ருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.  உதாரணமாக, B2 பகுதியில் பாதுகாப்புத் துறை, முக்கி யத்துவம் வாய்ந்த துறைகள், மின்சார கம்பங்கள் அமைப்பது, 8 வழி, 4 வழி சாலைகள் அமைப்பது, ரயில் தண்டவாளங்கள் அமைப்பது, கேஸ் பைப் லைன்கள் அமைப்பது, சூரிய மின்சாரம் தயாரிப்பது, நச்சு வாயு நிறு வனங்கள்  என வாழ்விட நிலங்களை, காடுகளை, விவசாய வயல்களை, ஆறுகளை, மலைகளை துளைத்துச் செல்லும் நேர்கோட்டு திட்டங்கள், கடலில் 15 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் வரும் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட 40 வகையான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது எத்தகைய அபாயம் என சொல்லி விளக்கிடத் தேவையில்லை. அதேபோல 2006 சட்டத்தின்படி கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கு 30 ஆண்டு கள் மட்டுமே அனுமதி (இதுவே அதிகம்). ஆனால் 2020 வரைவின்படி 50 ஆண்டுகள் என உயர்வு. அணை மற்றும் அணுசக்தி நிறுவனங்களுக்கு 10 வருட அனுமதி என்பது 15 வருடங்களாக  உயர்த்தப்பட்டுள்ளது. இதர திட்டங்களு க்கு 5 ஆண்டுகள் என்பது 10 ஆண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் கொடுமையாக தற்போது சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 15 உயிர்க ளைப் பறித்த, பல மக்களின் உடல் நலனை பாழ்படுத்திய காற்றையும் நீரையும் நஞ்சாக்கியுள்ள விசாகப்பட்டி னத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனமும் இதில் அடங்கும்.

அழிக்கப்படும் மணல் திட்டுக்கள்

அதேபோல் ஒரு திட்டம் துவங்க நிலம் வாங்கிய பிறகு, அனுமதி வாங்குவதற்கு முன்பே அந்த நிலத்தை சம தளமாக்கலாம் என்ற EIA 2020 வரையறையும் மிகவும் ஆபத்தானது. தனது அதிகார பலத்தால் நிலங்களை வாங்கும் நிறுவனங்கள் விளை நிலங்களை அழித்து  சமதளமாக்கலாம். அவர்களுக்கு காவல்துறை உதவி இருந்தால் போதும். அவர்கள் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் முன்பே பல பணிகளை செய்து முடிப்பர். இதில் மிகவும் ஆபத்தானவை கடற்கரையோரம் வரும் திட்டங் கள்தான்.  ஏனெனில் கடற்கரையை சார்ந்த மணல் திட்டுக்கள் (Sand dunes) சூழலியலுக்கு மிகவும் முக்கிய மானவை. இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காப்பவை.  இவைகளை அழித்த பின்பு அனுமதி வாங்கி என்ன செய்வது? கடலூர் அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள கடற்கரை மணல் திட்டுக்களை நாகார்ஜுனா என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அழித்த வரலாறு உண்டு. ஆனால் அந்த நிறுவனம் இன்றுவரை பல்வேறு காரணங்களால் துவங்கப்படவில்லை என்பதும் அழிந்த மணல் திட்டுகள் சமதளமாய் நிற்பதும் கொடிய சோகம்.

CSR நிதி 

மக்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து அமலாக்கப்படும் திட்டங்கள், அதனால் வாழ்விழந்த மக்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க அங்கு செயல்படும் நிறுவனங்கள் அம்மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு செலவு செய்யும் தொகை CSR நிதி எனப்படும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி (Corporate Social Responsibility Fund). இது பெரு நிறுவனங்களின் பிச்சை அல்ல, அவர்களின் சமூகக் கடமை. அல்லது அதைப் பெற வேண்டியது வாழ்விழந்த மக்களின் உரிமை. அந்த அடிப்படையில்தான் தங்களது லாபத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை நிறுவனங்கள் கிராம மக்களுக்கு செலவு செய்து வரு கின்றன. உதாரணத்திற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1200 கோடி லாபம் அடைந்தால் அதிக பட்சம் 45 கோடியை இந்த வகையில் மக்களுக்கும் அவர்க ளுக்கான திட்டங்களுக்கும் செலவு செய்ய வேண்டும். ஆனால் EIA 2020  வரைவுப் படி இதற்கும் ஆபத்து வந்துள்ளது. 

மோடி அரசு கொரோனா பேரிடர் காலத்தில் இந்த CSR நிதியைக் கூட மக்களுக்கு செலவு செய்யவிடாமல், நிறுவனங்களை மிரட்டி தனது தனிப்பட்ட நிதியமான பி.எம்.கேர்ஸ்க்கு இந்த நிதியை களவாடியது தனிக்கதை. (அதிகாரப்பூர்வமற்ற மோடியின் இந்த பி.எம்.கேர்ஸ் கணக்கிற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ரூ.20 கோடி கொடுத்துள்ளது) ஆனால் இனி மக்கள் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொழுக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்காண்டு CSR நிதியைக் கூட கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  தனது திட்ட வரைவின் போது ஒப்புக்கொள்ளும் நிதியை கொடுத்தால் போதும் என்ற நிலையை உருவாகி உள்ளது இந்த புதிய சட்ட வரைவு.

வளரப்போகும் கட்டிடங்கள்

இதுவரை 20,000 சதுர மீட்டருக்குள் மட்டுமே நிறுவ னங்கள் கட்டிடங்களை கட்ட அனுமதி இருந்தது. அதற்கு மேல் கட்ட வேண்டுமெனில் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இனி 1,50,000 சதுர மீட்டர் வரை அனுமதி இல்லாமல் கட்டிடங்களை கட்டிக்கொள்ளலாம் என்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எந்த ஒரு நிறுவனமும் அனுமதி வாங்கிய அளவுக்கு மீறி தனது நிறுவனத்தை ஓர் அடி விரி வாக்கம் செய்ய வேண்டுமெனில் கூட முறையான அனுமதி வாங்க வேண்டுமென்பது இதுவரை இருக்கும் சட்டம். ஆனால் EIA 2020 இதையும் ஒழித்துக்கட்டுகிறது. அதாவது எந்த ஒரு நிறுவனமும் அல்லது திட்டமும் 50  சதம் வரை EIA அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்து கொள்ளலாம். அதாவது 100 கிலோ மீட்டர் சாலைக்கு அனுமதி வாங்கி 150 கிலோ மீட்டர் போட்டுக்கொள்ளலாம். பின்பு அனுமதி வாங்கினால் போதும். இது எவ்வளவு அக்கிரமமானது!

அரசியல் சட்டத்திற்கு எதிரானது 

குறிப்பாக கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைக ளை எதிர்த்து சில அமைப்புகளும் தனி நபர்களும், அர சியல் இயக்கங்களும் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா, இனி அது முடியாது! அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமைச் சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது எவ்வளவு மோச மான ஆபத்து என்பதை நாம் உணர முடியும். குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் பாஜக பாசிச குணத்தின் வெளிப்பாடு இது. அதுமட்டுமல்ல, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்க ளையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவக்குழியில் தள்ளுவதற்கு சமமாகும். 

இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 51 A (9) ஒவ்வொரு குடிமகனுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அடிப்படை கடமை என்று அறிவிக்கிறது. அப்படி எனில் சுற்றுச்சூழலை சூறையாடுவோரை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை EIA 2020 பறிப்பது எப்படி சரியாகும்? மக்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை பறிக்கும் திட்டங்களை எதிர்த்து கேள்விகேட்கும் உரிமையை அல்லது மக்கள் கருத்து கேட்கும், சொல்லும் உரிமையை பறிப்பது எப்படி சரியாகும்? ஆக அரசியல் சட்டத்தின் அடிப்படையை கேள்வி கேட்கும் இந்த சட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கட்டுரையாளர் : பொறுப்பாளர்,  

கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

 

;