வியாழன், செப்டம்பர் 24, 2020

கட்டுரை

img

பயிர்க் காப்பீடும் - பரிதவிக்கும் விவசாயிகளும்... க. சுவாமிநாதன்

இன்சூரன்ஸ் துறையில் தனியாரை, பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் போது சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அனுபவம் என்ன?  இதோ எந்த மாநிலத்தை இன்றைய ஆட்சியாளர்கள் “மாடல் மாநிலம்” என்றார்களோ அந்த மாநிலத்தின் அனுபவம் இது. இந்து பிசினஸ் லைன் (11.08.2020) இதழின் முதல் பக்க செய்தி இது. குஜராத் மாநில அரசும் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தை விட்டு வெளியேறுகிறது... பிரீமிய சுமை தாங்க முடியவில்லையாம்_ “என்பது தலைப்பு. 

“பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” 2016ல் குஜராத்தில் அமலுக்கு வந்தது. இவ்வாண்டு இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கான டெண்டர்கள் மிக மிக அதிகமான பிரீமியத்தை கோரியதால் இத் திட்டத்தை விட்டு வெளியேறுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி  “ரூ.4500 கோடி பிரீமியம் கேட்கிறார்கள். இது மிக அதீதம்” என்று சொல்லி இவ்வாண்டு பயிர்க் காப்பீட்டில் இணையப் போவதில்லை என்று கூறியுள்ளார்.  கடந்த ஆண்டு குஜராத்தில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனிவர்சல் சாம்போ, பாரதி ஆக்சா போன்ற தனியார் நிறுவனங்களோடு இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து பயிர்க் காப்பீடு வழங்கின.  ஏற்கெனவே பீகாரும், மேற்கு வங்காளமும் இத் திட்டத்தில் இருந்து வெளியேறி விட்டன. பஞ்சாப் இந்த திட்டத்திற்குள்ளேயே வரவேயில்லை. ஆரம்ப காலங்களில் நிறைய விவசாயிகள் வெளியேறிய செய்திகள் வந்தன. இப்போது மாநிலங்களே வெளியேறுகின்றன. 

மத்திய நிதி கண்காணிப்பு மையம் (Centre for Financial Accountability) என்ற அமைப்பின் அறிக்கையை தயாரித்த பெர்சிஸ் ஜின்வாலா கருத்துப்படி, காப்பீட்டு வரம்பிற்குள் வருகிற  விவசாயிகள் எண்ணிக்கை, விளை நிலங்கள் அளவு, உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் ஆகியனவற்றிற்கான தர அளவுகோல்களை இத் திட்டம் எட்டவில்லை என்று கூறியுள்ளார். குஜராத் பற்றிய அந்த அறிக்கையில் “2016 ல் 37%, 2017 ல் 33%, 2018 ல் 29%, 2019 ல் 26% என்ற அளவில்தான் விவசாயிகளை காப்பீட்டு வரம்பிற்குள் கொண்டு வந்தது” என கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த விவசாய நிலத்தில் கால்வாசி கூட காப்பீட்டுத் திட்டத்தால் பயன் அடையவில்லை.  ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான யோகேந்திர யாதவ்  “தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் பணம் பண்ணி விட்டார்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை காப்பீட்டுத் தொழிலில் கொண்டு வந்த நோக்கங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களே ஒப்புக் கொண்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும்” என்கிறார். 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தந்த கணக்குப்படி பிரதமரின் பீமா ஃபசல் யோஜனா திட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெற்ற பிரீமியம் 2016- 2019ல் ரூ. 76,008 கோடி. அவர்கள் விவசாயிகளுக்கு தந்துள்ள உரிமத் தொகை ரூ.64,528 கோடிகள். இதை கூட அரசு, தனியார் நிறுவனங்கள் என்று பிரித்து ஆய்வு செய்யலாம்.  2017- 18 விவரங்கள் வாயிலாக அரசு & தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டில் உள்ள வித்தியாசத்தை காண முடியும். அரசு இன்சூரன்ஸ் நிறுவனம் (Agricultural Insurance Company of India) ரூ.7893 கோடி பிரீமியம் வசூலித்தது. அது வழங்கிய உரிமங்களோ ரூ.12339 கோடிகள்.  ஐ.சி.ஐ.சி.ஐ லாம்பார்ட் கணக்கை பாருங்கள். வசூலித்த பிரீமியம் ரூ. 2371 கோடிகள். விவசாயிகளால் கோரப்பட்ட உரிமங்கள் ரூ.1362 கோடிகள். 

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் வசூலித்தது ரூ.1181 கோடிகள். விவசாயிகளால் கோரப்பட்ட உரிமங்கள் ரூ.475 கோடிகள்.   இதில் தனியார் லாபம் அடைவதற்காக அரசு இன்சூரன்ஸ் நிறுவனமான “இந்திய விவசாயக் காப்பீட்டு கழகத்தை” (Agricultural Insurance Corporation) சற்று விலகியிரும் என்று 2018ல் சொன்னதாக இதழ்கள் எழுதின. இவ்வளவுக்கும் அது அதற்கு முந்தைய ஆண்டில் லாபம் காட்டி இருந்தது. அதுவே காரணமாக இருந்திருக்குமோ! (அது எப்படி லாபத்தை அரசு நிறுவனம் கொண்டு செல்லலாம்!!!)

லாபம் வந்தால் அரசு நிறுவனம் விலகி நிற்க வேண்டும். லாபம் வராது என்ற நிலை ஏற்பட்டால் தனியார் நிறுவனங்கள் பயிர்க் காப்பீட்டில் இருந்து வெளியேறிவிடும் என்பதற்கும் சாட்சியங்கள் உள்ளன. 2019 காரீஃப் சீசன் டெண்டர்களில் ஐ.சி.ஐ.சி.ஐ- லாம்பார்டு, டாட்டா ஏ.ஐ.ஏ, சோழமண்டலம் எம்.எஸ், ஸ்ரீராம் ஆகிய நான்கு கம்பெனிகளும் பங்கேற்கவில்லை. பருவமழை பொய்க்கும் என்றால் ஓடிப் போய் விடுவார்கள் போலிருக்கிறது. 

விவசாயிகள் தாம்புக் கயிறை நாடுகிற தருணங்களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கக் கயிறை தாயத்தாக கட்டிக் கொண்டார்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது. இதில் தாமதம், இழுத்தடிப்பு தனிக் கதை. நவம்பர் 2019 ல் இருந்த நிலைமை இது. 2018 க்கான உரிமங்களில் ரூ.2511 கோடிகள் (16%) நிலுவையில் இருந்தன. 2019 ஏப்ரலில் கோரப்பட்ட உரிமங்களில் ரூ.1269 கோடிகள் (26%) நிலுவையில் இருந்தன. உரிய நேரத்தில் விவசாயிகளின் துயரை துடைப்பதிலும் தோல்வி.  அதுவும் பிரதமரின் “செல்லம்” குஜராத்தே இப்போது வெளியே போகிறது.

;