வெள்ளி, செப்டம்பர் 25, 2020

கட்டுரை

img

‘ஒரு தேசிய அவசர நிலை’- பிருந்தாகாரத்

ஹைதராபாத்தின் மிக அருகில் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை பெண் மருத்துவர் மீது கொடூரமான வன்முறை நடத்தி அவரை கும்பல் வன்புணர்வு செய்து கொலை செய்த நிகழ்வு நாடு முழுவதும் கோப அலைகளை உருவாக்கியதோடு பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களுக்கும் அது இட்டுச் சென்றது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் டோன்க் என்ற இடத்தில் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியைக் காணவில்லை. பின்னர் மிருகத்தனமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கோயம்புத்தூரில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பதினோறாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்பல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். ராஞ்சியில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை ஆயுதம் தாங்கிய கும்பல் கடத்திச் சென்று வன்புணர்வு செய்துள்ளது.
தேசிய அவசரநிலை
பயங்கரமான பாலியல் குற்றங்கள் நிறைந்த அந்த வாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்து - குறிப்பாக பாலியல் குற்றங்களைப் பொறுத்து ‘ஒரு தேசிய அவசரநிலை’ என்ற எதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. மிருகத்தனமான ஆண்மை என்ற பாலியலில் பொதிந்துள்ள வன்புணர்வு கலாச்சாரமும், வக்கிரங்களும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அரசு அதை மறுக்கும் நிலையிலேயே உள்ளது. தேசிய குற்ற ஆராய்ச்சி அமைப்பின் 2016ம் ஆண்டு அறிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது. 2017ம் ஆண்டின் அறிக்கை 2019ம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டிருக்கிறது. கும்பல் கொலைகள் மற்றும் சாதி ஆணவக் கொலைகள் ஆகியவற்றை திட்டமிட்டு பதிவு செய்ய தவிர்த்திருப்பதையும் தாண்டி, பெண்களுக்கெதிரான குற்றங்கள் கவலைக்கிடமான வகையில் அதிகரித்திருப்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக அந்த ஆண்டு மட்டும் தினந்தோறும் ஆயிரம் குற்றங்கள் வீதம் ஒரு ஆண்டில் 3.5 லட்சம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினந்தோறும் சராசரியாக 93 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகள். ஒரு நாளைக்கு 241 பாலியல் துன்புறுத்தல்கள் வீதம் 87,924 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை பதிவு செய்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 28 வீதம் வரதட்சணைக் கொலைகள் பதியப்பட்டுள்ளன.
பெரும்பாலான குற்றங்கள் பதியப்படுவதில்லை
பெண்கள் மீதான தாக்குதல் குறித்து இந்த எண்ணிக்கை உள்ளபடியே அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், அவை பெண்களின் மீது இழைக்கப்படும் குற்றங்களில் ஒரு சிறு சதவிகிதமே. இதன் மூலம் பெரும்பாலான குற்றங்கள் பதியப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. உதாரணமாக திருமணமான பெண்களில் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைகளுக்கு ஆளாவதாகவும், அதில் 1.5 சதவீதம் பேர் மட்டுமே காவல்துறையின் உதவியை நாடி இருப்பதாகவும், நான்காவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. கொள்கை ரீதியான முயற்சிகளுக்கு மிகச்சரியான புள்ளி விபரக் கணக்குகள் அதிமுக்கியமானவை ஆகும். துர்திர்ஷ்டவசமாக இன்றைய மத்திய அரசு உண்மைகளை வெளிக்கொணரும் புள்ளி விபரங்களை மறைக்கிறது அல்லது அவற்றை தூக்கி குப்பையில் எறிந்து விடுகிறது. ஹைதராபாத்தில் நடந்த அந்த கொடுமையான சம்பவம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் சுரணையற்ற தன்மையை வெளிக் கொணர்ந்துள்ளது. தெலுங்கானா மாநில முதல்வர், துக்கம் நிறைந்த அந்த குடும்பத்தை சந்திக்கக்கூட முயற்சிக்கவில்லை. பாராளுமன்றத்தில் அந்த பிரச்சனை எழுப்பப்பட்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு இல்லை என்பது வெளிப்படையானது. தில்லி அவரது நேரடிப் பார்வையில் உள்ளது. தில்லி மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநகரம். அவர் எப்பொழுதாவது இந்த பிரச்சனை குறித்து தில்லி காவல்துறையுடன் கலந்தாய்வு செய்துள்ளாரா அல்லது கவலையாவது தெரிவித்துள்ளாரா? இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அவரது முன்னுரிமைப்பட்டியலில் இல்லை போல் தெரிகிறது. அதேநேரத்தில் ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வேதனையான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் சார்பாக பதிலளித்த ராஜ்நாத் சிங், “இங்கு  வந்திருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும், தேவைப்பட்டால் அதற்கு ஒரு சட்டமும் இயற்றப்படும். இதுபோன்ற கொடிய குற்றங்களை களைய அனைத்து ஆலோசனைகளையும் அரசு வரவேற்கிறது. கடுமையான சட்டங்களை அமல்படுத்த நாங்கள் தயாராய் இருக்கிறோம்” என்றார். இதுபோன்ற கொடுமையான குற்றங்களை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துவதற்கு பதிலாக குற்றங்களின் தண்டனைகளை அதிகரிப்பது என்று பேசி பிரச்சனையை அரசு திட்டமிட்டு திசை திருப்புகிறது. ஒவ்வொரு முறையும் கடுமையான தண்டனை என்று கூறி பிரச்சனையின் கவனத்தை திசை திருப்புவதை அரசே பொறுப்பேற்று செய்கிறது. வன்புணர்வு செய்து கொலை செய்யும் குற்றத்திற்கு மரணதண்டனை என்பது ஏற்கனவே சட்டங்களில் உள்ளது. இதுபோன்ற கடுமையான தண்டனைகள் மட்டும் குற்றங்களை குறைத்து விடாது என்பதை உலக அனுபவம் தெளிவாக உணர்த்துகிறது. தொடர்ந்து சமூக செயல்பாட்டாளர்களால் வலியுறுத்தப்படும் பிரச்சனை என்னவென்றால் தண்டனையின் தன்மை மற்றும் கடுமை மட்டுமல்ல, விரைவான, உறுதியான, நியாயமான நடைமுறைகளுமே குற்றங்களை குறைக்கும் என்பதே. ஆனால் இந்த வகையான மதிப்பீட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
பெருமளவிலான வழக்குகள் தேக்கம்
தேசிய குற்ற ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கை குழந்தைகள் வன்புணர்வு வழக்குகள் உட்பட வழக்குகள் மொத்தமாக தேங்கிக் கிடக்கின்றன என்று தெரிவிக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான குற்றங்களே அதிகமாக, 89.6சதவீதம் தேக்க நிலையில் உள்ளது. 2017ம் ஆண்டில் மட்டும் 1.17 லட்சம் வன்புணர்வு வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருந்துள்ளன. அந்த ஆண்டு 28,750 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன. இந்த அளவு அதிகமான வழக்குகளில் எத்தனைபேர் விசாரணைக்குப் பின் தண்டிக்கப்பட்டார்கள் என்றால் வெறும் 5,822 பேர் மட்டுமே. நீதி பரிபாலன முறையில் சீர்திருத்தம் மற்றும் தண்டனையை உறுதிப்படுத்தலில் ஏற்பட்ட முழுமையான தோல்வியே பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஐ.நா. சபை பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடும்போது “பெண்களின் பாதுகாப்பு என்பது வன்முறையை தடுப்பது அல்லது பழிவாங்கலை தடுப்பது ஆகியவற்றின் உத்திகள் மற்றும் கொள்கைகள் அடங்கியது; தடுப்பு முயற்சி என்பது ஆபத்து மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் அடங்கிய கொள்கை ரீதியிலான, நீண்ட கால, விரைவானதாக இருக்க வேண்டும்” என்கிறது.  நிர்பயா வழக்கிற்குப் பின் இந்தியாவில் அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி குற்றங்களை தடுப்பதற்கான பல்வேறு தொடர்ச்சியான பரிந்துரைகளை செய்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சமூக மற்றும் நிர்வாக ரீதியான உள்கட்டுமானத்தை உத்தரவாதப்படுததும் பொறுப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியது. அந்த கமிட்டியின் ஆலோசனைகளில் சமத்துவம் என்ற உயரிய சமூக மாண்பு மற்றும் பெண்களின் சுயசார்பு ஆகியவற்றை இளைஞர்கள் மதிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொதுப்போக்குவரத்து, தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பற்ற பகுதிகள் என வரையறுக்கப்பட்ட இடங்களில் கூடுதல் போலீஸ் ரோந்துப்பணி போன்றவையும் அடங்கும். இந்த நடவடிக்கைகளை கடுமையாக கடைப்பிடித்திருந்தால் அந்த இளம் மருத்துவர் இன்று உயிருடனும் பாதுகாப்புடனும் இருந்திருப்பார்.
அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் 
நீதிபதி வர்மா அறிக்கை சொல்கிறது: “இன்னும் அதிர்ச்சியூட்டும் செயல் என்னவென்றால் அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் மத்திய அரசும், சில மாநில அரசுகளும் திறனற்று இருக்கின்றன. பல்வேறு பரிந்துரைகள், கலந்தாலோசனைகள், ஆய்வுகள், நீதித்துறையின் வழிகாட்டுதல்கள் - குறிப்பாக சிவில் சமூகத்தின் போராட்டங்கள் இத்தனைக்குப் பின்னரும் அரசு இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முற்றிலும் தவறி இருக்கிறது”. ஆறு ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது இந்த அரசு நாடாளுமன்றத்தில் வர்மா கமிட்டி பரிந்துரைகளுக்கு கூடுதலான ஆலோசனைகளை கேட்டிருப்பதன் மூலம் அதன் அரசியல் விருப்பமின்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.  இந்த ஆட்சியின் பெண்ணுரிமை தொடர்பான பிற்போக்கு அணுகுமுறை மிகவும் முன்னுக்கு வந்துள்ளது. கத்துவாரிலும், ஷாஜகான்பூரிலும் அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருந்தார்கள். பாதுகாப்பான பொது வெளி என்ற பெண்களின் எதிர்பார்ப்புக்கள் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன. சாதீய மற்றும் வர்க்க படி நிலையில் உருவாக்கப்பட்டுள்ள தலித், ஆதிவாசி மற்றும் ஏழைப் பெண்களே இதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவர். பாலியல் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் என்பது பெண்களை பலவீனப்படுத்தும் கொள்கைகள் மற்றும் பண்பாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு இணையானது. இந்தியாவை அதன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய மாநில அரசுகளை பொறுப்பாளிகளாக்கும் வகையில் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் பெருமளவிலான மக்களை பங்கேற்கச் செய்வதே முன்னோக்கிச் செல்வதற்கான வழியாகும்.  நன்றி: இந்து (ஆங்கிலம்)நாளிதழ் தமிழில்: வழக்கறிஞர் பெ. ரவீந்திரன், சிவகாசி

;