புதன், அக்டோபர் 21, 2020

கட்டுரை

img

தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளும், தீர்வும்...

இந்திய நாட்டின் மிகப்பெரிய தொழில் சாலைப்போக்குவரத்து மோட்டார் வாகனத் தொழில். பயணிகள்/சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி, ஆட்டோ,வேன், கால்டாக்சி போன்ற சேவைத்துறையில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து மத்திய, மாநில அரசுகளின் கஜானாவுக்கு பல கோடிரூபாய்களை வரியாக உழைத்து கொடுக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டூரிஸ்ட் டாக்சி, கால்டாக்சி, இலகுரக வாகனம், டாடா ஏஸ், மினி டோர், மேக்சி கேப், மினிலாரி, ஆட்டோ உள்ளிட்ட சிறு வாகன ஓட்டுனராகவும், பழுது நீக்கும் தொழிலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இஎஸ்ஐ, மருத்துவ திட்டம், பென்சன், சட்டசமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகள் இல்லை.மத்திய, மாநில அரசுகளும் கண்டுகொள்ளாத நிலைநீடிக்கிறது.மத்திய அரசு பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் பயன்பெரும் வகையில் மோட்டார் வாகன சட் டத்தைத் திருத்தி சாலைப்போக்குவரத்து தொழிலைபெரும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், காப்பீட்டு பிரிமியம், உதிரி பாகங்கள் விலை, ஆர்.டி.ஓ மற்றும்காவல்துறை அபராத கட்டணங்கள் உள்ளிட்டவைகளை பல மடங்கு அரசுகள் உயர்த்தி உள்ளனர். பதிவுசெய்து 15 ஆண்டுகள் ஆன வாகனம் சாலையில் ஓடதடை, மாசுக்கட்டுப்பாடு என்ற பெயரில் மின்சார வாகன உற்பத்தி துவக்கம் போன்ற நவீனமயம் காரணமாக சாலைப்போக்குவரத்து தொழில் மேலும் பல நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது.கொரோனா ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக,கடந்த 6 மாத காலமாக 30 லட்சம் மோட்டார் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும்துன்ப துயரங்களுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் உள்ளாகி உள்ளனர்.

சிறு வாகன உரிமையாளர்கள் அரசு மற்றும்தனியார் நிறுவனங்களில் கடன் பெற்று சுயமாகமேற்படி வாகனங்களை இயக்கி வந்தனர். சாலைப்போக்குவரத்து சம்மேளனம் தமிழகத்தில் முறைசாரா நலவாரியத்தில் பதிவுசெய்த, பதிவு செய்யாதஅனைவருக்கும் கொரோனா நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டி போராடினோம். சட்டப்படியும் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்ற வழிகாட்டுதலை பெற்றுள்ளோம். இது எதிர்காலத்தில் நலவாரிய செயல்பாட்டை பலப்படுத்த உதவும்.
லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சாலைவரிதொடர்பாக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு, வாகன உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளது. மோட்டார் வாகன கடன் (இ.எம்.ஐ) திருப்பிசெலுத்த ஓர் ஆண்டு நீட்டித்து கொடுக்க கால அவகாசம் கேட்டு நிதியமைச்சருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் சம்மேளனத்தின் சார்பில் மனு கொடுத்துள்ளோம்.சாலைவரி, தகுதிசான்று, பர்மிட், ஓட்டுனர் உரிமம்புதுப்பித்தல் உள்ளிட்ட ஆர்.டி.ஓ பணிகளுக்கு சம்மேளனம் எடுத்த முயற்சியின் காரணமாக ஒருவருடம் காலஅவகாசம் பெற்றுக் கொடுத்துள்ளோம். நீதிமன்றம் வட்டிக்கு வட்டி போடக்கூடாது; வாகனங்கள் பறிமுதல் செய்யக் கூடாது என்று உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.வாகனம் ஓட்டும்பொழுது விபத்து ஏற்பட்டால், கொலைக்குற்றவாளி போல் நடத்தக்கூடாது; ஓட்டுனர் உரிமம் பறிக்கக் கூடாது; அதீதமான அபராதம் விதிக்க கூடாது; சிறைக்கு அனுப்பக் கூடாதுஎன்ற முழக்கத்தை சம்மேளனம் எடுத்துச் செல்லும்.பெருகி வரும் நெருக்கடி காரணமாக மோட்டார் வாகன தொழிலாளர்கள் எரிமலை குன்றாய் உள்ளனர். மோட்டார் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற எரிமலையாய் எழுவார்கள்என்பது நிச்சயம்.

==எஸ்.மூர்த்தி===

பொதுச்செயலாளர்

;