கட்டுரை

img

‘ஜல் ஜீவன் மிஷன்’ உள்நோக்கம் என்ன?

2019 ஆகஸ்ட் 15ல் 73வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, நாட்டின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ‘ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கொள்காட்டி பேசினார். தண்ணீர் பிரச்சனை பற்றி யாரும் சிந்திக்காத காலத்திலேயே அதன் அவசியத்தை உணர்த்திய மகான் திருவள்ளுவர் என்று புகழாரம் சூட்டினார். ஆனால் கடந்த 10 மாதங்கள் கடந்த பின்பும் நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எந்த உருப்படியான திட்டத்தையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

மாறாக, மோடி அரசு அறிவித்துள்ள‘ஜல்ஜீவன் மிஷன்’ என்ற திட்டம் இந்திய மக்களுக்கு குடிநீர் வழங்குவதை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் உள்ளுர் அளவில் மழை நீர் சேகரிப்பு திட்டம்,நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் விவசாய தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்டவை அடியோடு பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜல்ஜீவன் திட் டத்தை தமிழ்நாட்டில் விரைந்து செயல்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மத்திய நீர் வள அமைச்சகத்தின் சார்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகவாத் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிலுள்ள 1.27 கோடி கிராமங்களில்உள்ள வீடுகளிலும், நகரங்களில் 21.85 லட்சம் வீடுகளுக்கும் தண்ணீர்இணைப்புகள் புதிதாக கொடுக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவெ 34 லட்சம் கிராமப்புற வீடுகளுக்குஇந்த ஆண்டு குழாய் தண்ணீர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் உள்ளது.

நீராதாரங்களை  சிதைக்கும் முயற்சி மேலும் ஜன்தன் ஆதர்ஷ் கிராமயோஜனாவின் கீழ் உள்ள அனைத்து117 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் பட்டியல் இனத்தினர் பழங்குடியினர் 90 சதவீதம் உள்ள கிராமங்களில் 100 சதவிகித குழாய்இணைப்புகள் வழங்க முன்னுரிமைஅளிக்கப்பட்டுள்ளது என்பதும், ஒவ் வொரு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொத்த கிராம ஊராட்சிகளில் வெறும் 7 (அ) 8 ஊராட்சிகளை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு தேர்வு செய்வதும்பெரும் ஏமாற்று வேலையாகும்.ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம அளவிலான செயல் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களுக்கு 15 வது நிதி ஆணையத்தின் மானியங்கள், மாவட்டக் கனிம வளர்ச்சிநிதி, காடு வளர்ப்பு ஈடு செய்யும் நிதி, மேலாண்மை மற்றும் திட்டமிடும் ஆணையம், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, உள்ளூர் பகுதிகள் வளர்ச்சி நிதி ஆகிய பல்வேறு திட்டங்களை இணைத்து, நீண்ட காலதண்ணீர் விநியோக அமைப்புகளை உறுதி செய்வதற்கு மாறாக ஏற்கெனவே இருக்கும் தண்ணீர் ஆதாரங் களை சிதைக்கும் முயற்சியே ‘ஜல் ஜீவன்’ திட்டம் ஆகும்.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை அறைகுறையாக அமுல் படுத்தும்போது கிராமங்களில் உள்ளநீர் நிலை அமைப்புகளின் திட்டமிடல், அமல்படுத்துதல், மேலாண்மை செயலாக்கம் மற்றும் பராமரிப்பில் உள்ள உள்ளூர் கிராம சமூகம், கிராமப் பஞ்சாயத்து அல்லது அவர்களின் துணைக்குழுக்களில் உள்ள லட்சக்கணக்கானோர் நேரடியாக வேலையில்லாமல் பாதிக்கப்படுவர். மேலும் ஒரு வீட்டிற்கு150 லிட்டர் தண்ணீர் தான் கொடுக்கப் படும் என்பதும், மாதா மாதம் இதன் பராமரிப்பு மற்றும் நீர் உற்பத்தி செலவிற்கு பயனாளிகளிடமே வசூல் செய்யப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
ஏற்கெனவே கிராம நகர்ப்புற ஏழைகள் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து வருமானம் இழந்து வறுமையில் வாழும் மக்களுக்கு இந்தஅறிவிப்பு பேரிடியாய் உள்ளது.
புதிய உத்தரவுகள்
ஜல்ஜீவன் இயக்கம் தொடர்பாக மாவட்ட ஆட்சி தலைவர்களின் அறிவிக்கையில், கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு உள்ள அனைவரும் 20.7.2020 க்குள் ரூ.1000 கட்டாயம் வைப்பு தொகை கட்ட வேண்டும் என்றும், முன் தேதியிட்டு 01.04.2020 முதல்மாதம் ரூ.50 செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 20ம்தேதிக்குள் கட்டணம் ரூ.1000 செலுத்தவில்லை என்றால் இணைப்பு
துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது. குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பே இணைப்புக் கட்டணம் செலுத்தியுள்ளனர். குடிநீர் இணைப்புபெற்ற மக்களை தற்போது முறையற்ற இணைப்பு பெற்றவர்கள் என கூறுவது தவறானதாகும். கொரோனா கடைகாலத்தில் வருமானம் இன்றி உணவுக்கே சிரமப்படும் நிலையில் கிராமப்புற மக்கள் குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களிடம் குடிநீர் இணைப்புக்காக கட்டாய வசூல் செய்வது மனிதாபிமானமற்ற செயலாகும்.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் கட்டாய குடிநீர் இணைப்பு தர போவதாகவும் அனைவரும் புதிய இணைப்புபெற ரூ.3000 இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. பொது குடிநீர் குழாய்கள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் சொல்லப்படுகிறது அப்படி நடந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவிவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.மத்திய அரசு நாடு முழுவதும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம்கொண்டு வந்து பின்பு நாடு முழுவதும் தண்ணீர் விநியோகிக்கும் உரிமையை தனியார் மற்றும் கார்ப்பரேட் களிடம் கொடுப்பதே மோடி அரசின் உள்நோக்கமாகும்.எனவே, தண்ணீர் விநியோகிக்கும்உரிமை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட வேண்டும். தனியாரிடம் கொடுக்க முயற்சிக்கும் தந்திரத்தை கைவிட வேண்டும்; கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ஓகேனேக்கல் குடிநீர் திட்டம் என தமிழ்நாடு முழுவதும் குவியலான நீர் ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி மாநிலம் முழுவதும் தண்ணீர்விநியோகத்தை பரவலாக்க வேண்டும்;தண்ணீருக்கு ஜலஜீவன் மிஷன் திட்டம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும்; ஒவ்வொரு கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கும் போதுமான நிதியைஒதுக்கீடு செய்து தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

===எஸ்.சங்கர்===

மாநில பொருளாளர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

;