புதன், அக்டோபர் 21, 2020

கட்டுரை

img

சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு...

1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது குறித்த நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் நிறைவடையப் போகின்றன. ஆரம்பத்தில் இருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாதி, மதம், இனம், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் குடிமக்கள் அனுபவிக்கும் வகையில், இந்தியாவின் எதிர்காலத்தை ஜனநாயக, மதச்சார்பற்ற, மக்கள் குடியரசாக வடிவமைப்பதையே தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. சமீபகாலமாக, அரசியலமைப்பின் இந்த அடித்தளக் கொள்கைகளுக்குச் சவால்விடப்பட்டு வரும் நிலையில், அந்தக் குறிக்கோள் கடுமையான பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சமத்துவமின்மை, சுரண்டல், மத அடிப்படையிலான சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் பறிப்பு, சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுஆகியவை நிறைந்து, மிகமோசமான நிலையை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். இவ்வாறான சூழலில், சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கை நினைவு கூர்வது மிகுந்தமுக்கியத்துவம் பெறுவதாக இருக்கிறது. இன்றைக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்ற அரசியல் சுதந்திரம், குடிமக்கள் சமத்துவம்ஆகியவை குறித்த கருத்துக்களை நிறுவுவதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கான பங்கு மிகவும் துல்லியமாக இருந்தது.

பின்னணி
பிரிட்டிஷ் ஆட்சியின் சீர்குலைக்கும் வரலாறும், அவர்கள் நமதுமக்களை பலவந்தமாகச் சுரண்டியதும் நம்முடைய சுதந்திரப் போராட்டத்திற்கான உந்துதலை அளித்தன. மிகப் பரந்து, மாறுபட்ட நிலைமைகளில் இருந்த இந்திய மக்களின் எண்ணற்ற போராட்டங்கள், நாடு தழுவிய அளவில் சுதந்திரப் போராட்டம் தோன்றுவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தித் தந்தன. இவ்வாறாக நடந்த ஒவ்வொரு போராட்டத்திற்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுரண்டலும், கொள்ளையுமே உடனடிக் காரணங்களாக இருந்தது மிகவும் வெளிப்படையான உண்மையாகவே உள்ளது.  

பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இருந்த இந்திய வீரர்களின் கிளர்ச்சி, காலனித்துவச் சுரண்டலுக்கு எதிரான முதன்முதலான ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாடாக இருந்தது. அந்தக் கிளர்ச்சி தொடங்கிய 1857 மே 10 அன்றிலிருந்து மீண்டும் தில்லியைக் கைப்பற்றுவதற்கு 1857 செப்டம்பர் 20 வரையிலும் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு நான்கு மாதங்கள் ஆனது. ஆனாலும், கிளர்ச்சியாளர்கள் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டவும், கிளர்ச்சியால் விடுவிக்கப்பட்ட வடஇந்தியாவின் பெரும்பகுதியை மீண்டும் கைப்பற்றவும் கிட்டத்தட்ட அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது.  காலனித்துவ வரலாறு குறித்த பதிவுகளில் பெரும்பகுதி, அந்தக் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை குறைத்திட முயல்வதாக இருந்த போதிலும், சில பதிவுகள் அப்போதிருந்த சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கின்றன. இந்திய சமஸ்தானங்கள், பிரபுக்கள், ஜமீன்தார்களின் உடனடித் தூண்டுதலும், இந்திய வீரர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அழிவை எதிர்கொண்டிருந்த உழைக்கும் மக்களின் அதிருப்தியும் ஒருசேர அதிகரித்ததும் கிளர்ச்சிக்கான காரணமாக இருந்தது என்பது வெளிப்படை.  

வெகுஜனங்களின் பங்கைக் குறைத்து, தேசிய அளவில் எழுந்திருந்த எழுச்சியை ‘சிப்பாய் கலகம்’ என்பதாகக் குறைத்து மதிப்பிடுகின்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் முயற்சியைக் கேள்விக்குள்ளாக்கிய காரல் மார்க்ஸ், அந்தக் கிளர்ச்சியை ‘ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் தேசிய புரட்சி’ என்பதாக வகைப்படுத்தி, ‘ராணுவக் கலகம் உண்மையில் ஒரு தேசிய புரட்சி’ என்று தெளிவுபடுத்தியிருந்தார்.  அந்த எழுச்சியைத் தக்கவைக்கத் தவறியதன் படிப்பினைகள், அதன் பெரும் தாக்கத்திற்கு இணையாகவே இருந்தன. நிச்சயமற்ற நிலைமையை எதிர்கொண்ட இந்திய மாநில ஆட்சியாளர்கள் பலரும், மிகப்பெரிய ஜமீன்தார்களும் ஆங்கிலேயர்கள் பக்கம் தீவிரமாக இருந்தனர். அதனை அங்கீகரித்த. கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு, ‘அவர்கள் (இளவரசர்கள்) புயலுக்கான தடுப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் இல்லையென்றால் அந்தப் பெரிய அலை நம்மை வீழ்த்தியிருக்கக்கூடும்’ என்று கள்ளமின்றிக் கூறியிருந்தார். 

‘இந்திய சுதந்திரப் போராட்டம் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டமாக இருக்க வேண்டும். விவசாயிகள் எதிர்கொண்டிருந்த பெருமளவிலான துயரங்களுக்கு எதிரான எதிர்ப்பு பயன்படுத்திக் கொள்ளப்படாவிட்டால், சுதந்திரத்திற்கான இயக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது’என்ற தெளிவான பாடத்தை பிரிட்டிஷாரின் எதிர்வினை அடிக்கோடிட்டுக் காட்டியது.அந்த 1857ஆம் ஆண்டிலிருந்து, ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் நிலப்பிரபுத்துவ இளவரசர்கள் தங்களுக்கிடையே பொதுவான நோக்கத்தைக் கொண்டிருக்க அனுமதித்தால், பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்ற தங்களுக்கான பாடத்தை ஆங்கிலேயர்களும் கண்டறிந்து கொண்டனர். பிரிட்டிஷ் பத்திரிகையாளரான தாமஸ் லோவ் ‘பசுவைக் கொல்பவர்கள் - பசுவை வழிபடுபவர்கள், பன்றியை வெறுப்பவர்கள் - பன்றியை உண்பவர்கள் என்று எந்தவித வேறுபாடுமின்றி ஒன்றாகக்கிளர்ந்தெழுந்தனர்’ என்று குறிப்பிட்டார். அவர்களால் அதுபோன்றமறுநிகழ்வு நிகழாமல் தடுக்கப்பட வேண்டியிருந்தது! இயற்கையாகவே, அது ‘பிரித்தாளுவது’ என்ற அவர்களுடைய மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுத்துக் கொடுத்தது. சுதந்திரப் போராட்டத்தில் தங்களுடைய பங்கையாற்றுவதில் இந்தபடிப்பினைகள் அனைத்தையும் கம்யூனிஸ்ட்டுகள் உள்வாங்கிக் கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலம் 
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்திய மக்களின் பல்வேறு உள்ளூர்அளவிலான போராட்டங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றி உடனடி உத்வேகத்தை அளித்தது. லெனின் தனது காலனித்துவ ஆய்வறிக்கையில் குறிப்பிட்ட வேண்டுகோள், துவக்கத்தில் சிறிய எண்ணிக்கையிலான புரட்சியாளர்களால் இந்தியாவில் மட்டுமல்லாமல், பிற இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்துத் தந்தது. ஐரோப்பாவின் பல்வேறுபகுதிகளில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட புலம்பெயர்ந்தோர் ஆற்றிய பங்கு பொதுவான அம்சமாக இருந்தது. ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாட்டில் அமைக்கப்பட்ட கட்சி அமைப்பின் நீட்டிக்கப்பட்ட வடிவமாக இருந்தது’ என்று முசாபர் அகமது குறிப்பிட்டுள்ளார். 

1922-23இல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பெஷாவர் கம்யூனிஸ்ட் சதி வழக்கில் இருந்து அது தெளிவாகத் தெரிய வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பத்து பேரில் ஒன்பது பேர் கட்சியின்புலம் பெயர்ந்தோர் பிரிவில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்த புதிய அரசியல் உருவாக்கத்தின் மீது பல சதி வழக்குகளைப் போட்டு மேற்கொள்ளப்பட்ட கடுமையான துன்புறுத்தல்களிலிருந்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கம் ஏற்படுத்தியதாக்கங்களால் அச்சமடைந்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவருகிறது. பெஷாவர் சதி வழக்கு (1922-23), கான்பூர் போல்ஷ்விக் சதிவழக்கு (1924), மிகவும் மோசமான மீரட் சதி வழக்கு (1929) ஆகியவழக்குகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 31 முக்கிய தலைவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 

கட்சி துவங்கப்பட்ட உடனே, 1921ஆம் ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் காங்கிரஸ் அமர்வில் முழுமையான சுதந்திரத்திற்கான தீர்மானத்தை, பின்னர் நடக்கப் போவது குறித்து எந்தக் கவலையும் இல்லாத, தாக்குதல்களால் பொறுமையிழந்திருந்த அந்தப் புதியகட்சி கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை மௌலானா ஹஸ்ரத்மொஹானி, சுவாமி குமாரானந்த் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்திற்கான முக்கியமான நோக்கங்களை வெளிப்படுத்தும் வகையில், கட்சியின் சார்பாகக் கொண்டு வந்தனர். ‘முழுமையான சுதந்திரம்’ என்கின்ற அந்த தீர்மானம் 1929ஆம் ஆண்டில்தான் இறுதியாக காங்கிரஸால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மக்களுடன் தொடர்புகள்: விவசாயிகள், தொழிலாள வர்க்கப் போராட்டங்கள்
அகமதாபாத் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு முன்னதாக எம்.என்.ராய், அபானி முகர்ஜி ஆகியோர், ‘விவசாயிகள் சங்கங்களின் திட்டத்தை தன்னுடைய சொந்த திட்டமாக காங்கிரஸ் மாற்ற வேண்டும்; எந்தவொரு தடையாலும் காங்கிரஸைத் தடுத்து நிறுத்தமுடியாத காலம் விரைவிலே வரும்; பொருளாதார நலன்களுக்காக உணர்வுப்பூர்வமாகப் போராடி வருகின்ற ஒட்டுமொத்த மக்களின் தவிர்க்கமுடியாத வலிமையான ஆதரவு காங்கிரஸுக்கு கிட்டும்..’ என்று குறிப்பிட்டு தொழிற்சங்கங்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளை காங்கிரஸின் கோரிக்கைகளாக மாற்றுமாறு வலியுறுத்தியிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த அணுகுமுறை, பிரிட்டிஷ் ஆட்சியில்இருந்து மக்களை விடுவிப்பதற்கான ஒட்டுமொத்த தேசிய இயக்கத்தின் ஒருபகுதியாக இருந்த சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பை கோடிட்டுக் காட்டியது. அதேநேரத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூக பாகுபாடு, சாதிய அடுக்குமுறைகளின் விளைவுகளை எதிர்கொண்டவர்களை அணிதிரட்டுவதிலும், வர்க்கப் போராட்டம் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்தபோராட்டங்களில் ஈடுபடுவதிலும் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியத்துவம் கொண்டிருந்தனர். அவர்களுடைய ஈடுபாடு சுதந்திரத்திற்கானதாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக பொருள்சார்ந்த நிலைமைகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்காக, சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான இறுதி நோக்கத்துடன் தேசிய இயக்கத்தில் மறுக்க முடியாத புதிய போக்கைக் கொண்டதாகவும் இருந்தது. 

ஆரம்ப நாட்களிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள்,ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது, ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் ஹிந்து மகாசபா மற்றும் முஸ்லீம்லீக்கால் மேற்கொள்ளப்பட்ட இனவாதப் பிரிவினைகளை எதிர்த்துப் போராடுவது என்றே இருந்து வந்தன. கம்யூனிஸ்ட்டுகளின் தலையீட்டின் மற்றொரு அம்சம், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டங்களுடன் சாதி ஒடுக்குமுறை போன்ற சமூகப் பிரச்சனைகளை ஒருங்கிணைக்க முயல்கின்றவகையிலேயே இருந்தது. சாதி அமைப்பைச் சீர்திருத்துவதற்காக என்றில்லாமல், அந்த அமைப்பை ஒழிப்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. 

காங்கிரஸால் ஆரம்பத்தில் அணிதிரட்டப்பட்டிருந்த விவசாயிகள், நிலப்பிரபுத்துவத்தை அவர்கள் எதிர்த்துப் போராட மறுத்தபின்னர் ஏமாற்றமடைந்தனர். தங்களுக்கான வர்க்க கோரிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் விழிப்புணர்வுக்கு அது வழிவகுத்தது. உள்ளூர் மற்றும் பிராந்திய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. போருக்குப் பிந்தைய எழுச்சியின் ஒருபகுதியாக அவை பெரும் வேகத்தை எடுத்தன. வங்காளத்தில் தேபாகா போராட்டம், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானவிவசாயிகள் போராட்டம், மகாராஷ்டிராவில் வொர்லி பழங்குடியினர், பீகாரில் பக்சாத் போராட்டம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு என்று விவசாயிகளின் பெரிய அணிதிரட்டல்கள் நடைபெறக்கூடிய இடங்கள் இருந்தன. நிஜாம்ஷாஹிக்கு எதிராக தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்ட போராட்டம் நிச்சயமாக இந்தப் போராட்டங்களிலேயே மிகப் பெரிய போராட்டமாக இருந்தது.  அதேபோன்று, கல்கத்தா, கான்பூர், பம்பாய், மெட்ராஸ் போன்றநாட்டின் பல்வேறு பகுதிகளில், ரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், சணல் மற்றும் பருத்தி, தேயிலைத் தோட்டங்கள் போன்ற முக்கியமான தொழில்துறைகளில் பல போராட்டங்கள் நடைபெற்றன. பம்பாயில் நடைபெற்ற கடற்படைக் கலகத்திற்கு வெளிப்படையான ஆதரவை அளித்து பம்பாய் தொழிலாளர்கள் வெளியே வந்ததுதான், அரசியல் தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்ற தொழிலாளர் போராட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 

பல்வேறு பிரிவுகள்: கதார், புரட்சிகர தேசியவாத மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிகள்
அக்டோபர் புரட்சியின் பெரும் தாக்கமும், சோவியத் ஒன்றியத்தைநிர்மாணித்ததும் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையைத் தூண்டியது. அது போர்க்குணமிக்க சமரசமற்ற பல்வேறு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள், அரசியல் அமைப்புகளுக்கான வாக்குறுதியை அளிப்பதாக இருந்தது. அதில் கனடா மற்றும் அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கொண்ட கதார் இயக்கமும் அடங்கும். பஞ்சாபிலிருந்து குடியேறியவர்களின் போராட்டங்கள் இறுதியாக கதார் கட்சி உருவாவதற்கு வழிவகுத்தன. இந்தியாவிற்குத் திரும்பி வந்தபெரும்பாலான கதாரியர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டனர். பெரும்பாலும் விவசாயிகள் சங்கம் மூலமாக அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இந்தச் செயல்முறைகள் தங்களுடைய ரகசிய குழுக்கள் மூலம்பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக, தனிப்பட்ட ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புரட்சிகரத் தேசியவாதிகளையும் ஈர்த்தன. அதனைத் தொடர்ந்து, அந்தப் புரட்சியாளர்களில் பெரும் பகுதியினர் கம்யூனிஸ்ட் கட்சியின் சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அந்த இயக்கங்களில், பகத்சிங் மற்றும் பலரின் தலைமையிலான ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட கருத்தியல் போராட்டம் சிறந்த முறையில் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வங்காளம், பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் சில பகுதிகளிலும் இருந்தகுழுக்களும் ஈர்க்கப்பட்டன.மற்றொரு முக்கியமான வளர்ச்சியாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (சி.எஸ்.பி) உருவாக்கப்பட்டு இருந்தது. தேசிய இயக்கத்தில் காங்கிரஸை மிக முக்கியமான அரசியல் உருவாக்கம் என்பதாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் தலைவர்கள் சமரசம் செய்ததில் ஏமாற்றமடைந்த காங்கிரஸில் இருந்த சில பிரிவினர் இணைந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த காங்கிரஸ்சோசலிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட்டுகளுடன் நெருங்கி வந்தது. முக்கியத்துவம் தர வேண்டிய பிரச்சனைகளில்  நிச்சயமாக அவர்களுக்குள் அடிப்படை வேறுபாடு இருந்தது. காங்கிரஸை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக மாற்றுவதையே காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களை காங்கிரஸுடன் எந்த அடிப்படை மோதலும் இல்லாமல், சுதந்திர அரசியல் சக்தியாக வளர்த்தெடுப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை அணுகுமுறையாக இருந்தது. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஆகிய இரண்டுடனும் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துசெயல்படுகின்ற அந்தப் போக்கு தொடர்ந்தது. ஆனால், இறுதியில் முக்கியமான காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியாக மாறினர்.தன்னுடைய தனித்துவமான குறிக்கோளைப் பின்தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதே நேரத்தில், மற்ற போர்க்குணமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் அமைப்புகளுடனும் சேர்ந்து ஈடுபட்டதன் மூலம் உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியால் அதிக அளவிலான தேசபக்தர்களை ஈர்க்க முடிந்தது. 

மிகவும் விரிவான வெகுஜன அமைப்புகள்
1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போது,அதன் தொழிற்சங்க அமைப்பான ஏஐடியுசியும் அதே ஆண்டிலேயேசெயல்பாட்டுக்கு வந்தது. ஆரம்பக் கட்டத்தில் சில சீர்திருத்தவாத போக்குகள் இருந்தபோதிலும், தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு மிகவும் பரந்த தொழிற்சங்கத் தளத்திற்கு அடிகோலியது. 1930களில் அதிகரித்து வந்த வெகுஜனப் போராட்டங்களின் காரணமாக பரந்த அளவிலான அகில இந்திய அமைப்பிற்கான தேவை உணரப்பட்டது. அது 1936ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (PWA) ஆகியவற்றின் உருவாக்கத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது. மிக விரைவிலேயே, இவ்வாறான தளங்களும், அமைப்புகளும் அறிவுஜீவிகளின் அந்தந்த பிரிவுகளை ஒருங்கிணைக்கின்ற வகையில் மிகப்பலம் வாய்ந்த கருவிகளாகின. கம்யூனிஸ்ட்டுகளால் வழிநடத்தப்பட்ட அந்த அமைப்புகள், குறிப்பிட்ட வர்க்கம் மற்றும் வெகுஜனப் பிரச்சனைகளைத் தங்கள்வசம் எடுத்துக் கொண்டு மக்களை ஒன்றிணைக்கின்ற சக்திவாய்ந்த அமைப்புகள் என்பதை நிரூபித்தன. இவ்வாறு கம்யூனிஸ்ட்டுகள்பரந்த பிரிவினரை அணிதிரட்டுவதன் மூலம் சுதந்திர இயக்கத்தை வலுப்படுத்துவதில் தங்களுடைய பங்கையாற்றினர். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட ‘பிரித்தாளுகின்ற’ கொள்கைப் போக்குகளுக்கு எதிரான அரணாகவும் அவர்கள் செயல்பட்டனர்.

போருக்குப் பிந்தைய எழுச்சி
போர்க்காலத்தில் (1939-45) தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களிடையே செய்து வந்த வேலையின் காரணமாக, அந்த நேரத்தில் கட்சி மீது தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் கட்சி அமைப்பு நன்கு விரிவடைந்தது. போருக்குப் பிந்தைய வெகுஜனப் போராட்டங்களின் எழுச்சியால், தொழில்துறை சார்ந்த வேலைநிறுத்த நடவடிக்கைகள், விவசாயிகள், மாணவர்கள் போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் அதன் வெகுஜன அமைப்புகளுக்குப் பெரும் பங்கு இருந்தது.ராயல் இந்தியக் கடற்படை கிளர்ச்சியை ஆதரிப்பது, இந்திய தேசிய ராணுவக் கைதிகளை விடுவிப்பது போன்றவற்றில் இருந்தஅரசியல் தலையீடுகள் கம்யூனிஸ்ட்டுகளின் முக்கிய பங்கைக் கொண்டவையாக இருந்தன. அவை அதிகாரத்தை மாற்றித் தருவதற்கான செயல்முறைகளையும், பிரிட்டிஷாரின் வெளியேற்றத்தையும் விரைவுபடுத்தின. 

மக்களின் ஒற்றுமை மற்றும் ஜனநாயக மதச்சார்பற்ற குடியரசின் பாதுகாப்பை நோக்கி
இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் இதற்கு முன்னேப்போதும் இல்லாதது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு உத்வேகம் அளித்த பார்வையும், சுதந்திரப் போராட்டத்தின் போது அவர்களுடைய பங்களிப்பு மற்றும் மகத்தான தியாகங்களும் நவீன முன்னோக்குடைய ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசாக ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவிற்கானவையாக இருந்தன. அதற்குமுரண்பாடாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத, அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தில் மக்களின்ஒற்றுமையைச் சீர்குலைப்பதில் ஈடுபட்டிருந்த சக்திகள், தங்களுடையதிட்டங்களுக்கு எதிரான மிகப் பெரிய அரணாக கம்யூனிஸ்ட்டுகளைப்பார்க்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் நமக்கிருந்த பங்கையும், அந்த புகழ்பெற்ற மரபிலிருந்து நேரடியாக உருவான அரசியலமைப்புவிழுமியங்களையும் உறுதியுடன் பாதுகாப்பதே, கம்யூனிஸ்ட் கட்சி உருவான நூற்றாண்டு விழாவைக் கடைப்பிடிப்பதை அர்த்தமுள்ள செயலாக்கும்.

===நிலோத்பல்பாசு===

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;