செவ்வாய், அக்டோபர் 27, 2020

கட்டுரை

img

புரட்சிகர பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வோம்....

கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு கால இமாலய சாதனைகளை எண்ணில் அடக்கி விட முடியாது. அவை எல்லாவற்றையும் இந்தக்கட்டுரையில் சொல்வது சாத்தியமில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பத்து சாதனைகளை மட்டும் பரிசீலித்தாலே இன்றைக்கு இந்திய நாடு, நாடாக இருப்பதற்கு இந்த இயக்கம் எத்தகைய பணியைச் செய்துள்ளது என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

1
நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குள் இருந்த காலத்தில், நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதற்காகப் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியாக, காங்கிரஸ் கட்சி அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியது. கம்யூனிஸ்ட்கள் இயக்கமாக இணைந்து செயல்படுவது என்பது 1920 ஆம் ஆண்டில் சற்று தாமதமாகவே சாத்தியமானாலும், தொடக்க காலம் முதல் இந்த நாடு பரி பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்திய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கமே. 1921 ஆம் ஆண்டில் கயாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் எம்.என்.ராய் வலியுறுத்தலில் பரிபூரண சுதந்திரம் ஏன் தேவை என்ற அறிக்கையை மௌலானா ஹஸ்ரத் மொகானி, சுவாமி குமரானந்தா எனும் இரு கம்யூனிஸ்டுகள் படித்தார்கள். அதைத் தீர்மானமாக முன்மொழியச் சொல்லி வலியுறுத்திய போது, காங்கிரஸோ, காந்தியோ ஏற்கவில்லை. அன்று துவங்கி, கடைசி வரை பரிபூரண சுதந்திரத்திற்காக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இத்தனைக்கும், 1920 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட்கள் ஓர் கிளையைத் தொடங்கி, இந்தியாவிற்கு வந்து பணியைத் தொடங்க திட்டமிடுவதற்குள், ‘கம்யூனிச இயக்கம் இந்தியாவில் வேரூன்றிவிடக்கூடாது, அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்’ என பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களைப் பெஷாவரில் கைது செய்து பெஷாவர் சதி வழக்கை (1922) ஏவிப் பல ஆண்டுகால சிறைதண்டனை விதித்தது. தொடர்ந்து கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என கம்யூனிஸ்ட்கள் மீது ஏவியது. கட்சி உள்நாட்டில் செயல்படத் தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு அடக்குமுறையை கம்யூனிஸ்ட்கள் மீது பிரிட்டிஷ் அரசு ஏவிய போதும், கம்யூனிஸ்ட்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு பரிபூர்ண சுதந்திரம் என்ற நோக்கத்தை விதைத்தார்கள். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அரசுக்கு மிகப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது கப்பற்படைப் புரட்சி. கப்பற்படை வீரர்களின் எழுச்சியால் முதன் முறையாக பிரிட்டிஷ் ராணுவத்தின் பீரங்கிகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நோக்கித் திருப்பப்பட்ட மாபெரும் போராட்டம் அது. பம்பாய், கல்கத்தா, கொச்சி, மதறாஸ் எனப் பல இடங்களில் ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் ஆயுதங்களுடன் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பம்பாயில் ராணுவ வீரர்களின் ரத்தமும், பொது மக்களின் ரத்தமும் சேர்ந்து ஓடியது. இப்படிப்பட்ட போராட்டத்தை காந்தி ஆதரிக்க மறுத்தார். முஸ்லிம்லீக்கும் அந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அன்றைக்கு அந்தப் போராட்டத்தை ஆதரித்த ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே. கடைசியில் அந்தப் போராட்டத்தைத் நிறுத்தி பிரிட்டிஷ் அரசிடம் சரணடையச் சொல்லி காந்தி கோரிக்கை வைத்தார். அந்தப் போராட்டத்தை வழிநடத்திய தளபதி அதை ஏற்றார். என்றாலும், ‘பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சரணடையமாட்டோம், மக்களிடமே சரணடைய விரும்புகிறோம்’ என்று சொன்னார். இந்தக் காலத்தில் காங்கிரஸின் பாதை என்னவென்றால், காங்கிரசுக்குத் தலைமை தாங்கும் முதலாளி வர்க்கத்தின் நலனைப் பாதுகாப்பதற்கு என்றைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு தேவை; அதனால் ஒரு பக்கம் பிரிட்டிஷ் அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுப்பதும், அந்தப் போராட்டங்கள் மக்கள் போராட்டமாக வீச்சடையும் போது அதைத் திரும்பப்பெறுவதுமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைமையில் ஒத்துழையாமை இயக்கத்தை வழிநடத்திய காந்தி,1922ல் சௌரிசௌராவில் காவல்நிலையத்தை ஏழை விவசாயிகள் தாக்கிய பிறகு போராட்டத்தை உடனடியாக நிறுத்தினார். அதனால் தான் நாடு விடுதலை அடைந்தபோது எல்லாரையும் விடுதலை செய்துச் சென்ற பிரிட்டிஷ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் தலைவர்களை விடுதலை செய்யவில்லை. ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட தலைவர்கள் சிறையிலேயே இருந்தார்கள். 

கட்சியின் நான்காவது மாநாடு 1956-ம் ஆண்டில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் எண்ணிக்கை 407. அப்போது படிவத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சொன்ன ஆண்டுகளைக் கூட்டியபோது 1344 ஆண்டுகள் சிறைத் தண்டனை என வந்தது. சராசரியாக ஒவ்வொரு பிரதிநிதியும் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். தலைமறைவாக இருந்த காலத்தைக் கூட்டினால் 1021 ஆண்டுகள் வந்ததாம், ஒரு பிரதிநிதி தலா 2.5 ஆண்டுகாலம் தலைமறைவாக இருந்துள்ளனர். 
அதனால் தான் விடுதலைக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் மீது பிரிட்டிஷ் அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியோ, தொடக்க காலத்தில் இருந்து, நாடு விடுதலை ஆகும் வரையிலும் பெரும்பகுதி காலம் தடைசெய்யப்பட்டது. அலுவலகங்கள் வைக்க முடியாது. பத்திரிகை நடத்த முடியாது,புத்தகங்கள் பிரசுரிக்க முடியாது எனும் அளவுக்கு அடக்குமுறையை சந்தித்தது. காரணம், பிரிட்டிஷ் அரசை முதலாளித்துவம் எனும் ஆணிவேரோடு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வேறு எந்தக் கட்சியும் சாதிக்காத மகத்தான முதல் சாதனையாக இவற்றை நாம் கொள்ள வேண்டும்.  

2
நாட்டில் நிலக்குவியலை எதிர்த்த போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது இரண்டாவது சாதனை. ஆட்சி அதிகாரம் வெள்ளையர் கையில் இருந்தாலும், அன்றைக்கு நாட்டின் சகல சொத்துகள், கிராமப்புற நிலங்கள் எல்லாம் பெரும் நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள், ஜாகிர்தார்கள், பண்ணையார்கள் கையில் தான் இருந்தது. ‘உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்பது போல விவசாயத் தொழிலாளர்களை அவர்கள் ஒட்டச் சுரண்டினார்கள். ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கையில் நிலமே கிடையாது. ஜமீன்தாரன் தாரர்களிடமும், பண்ணையார்களிடமும் மட்டுமே எல்லா சொத்துகளும் இருந்ததால் கிராமப்புறங்களில் இவர்களின் ஆதிக்கமே மேலோங்கியது. ஏழை விவசாயிகளையும், கூலித் தொழிலாளர்களையும் ஒட்டச் சுரண்டி இவர்கள் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் அரசுக்கு வரிவசூல் செய்து கொடுக்கக் கூடிய தண்டல்காரர்களாகவும் இவர்களே இருந்தார்கள். மாடு வைத்திருந்தால் வரி, ஆடு வைத்திருந்தால் வரி, மீசை வைத்திருந்தால் வரி, தாடி வைத்திருந்தால் வரி, பெண்களுக்கு மார்பகத்துக்கு வரி என கொடூரமாக வரி போட்டு மக்களைப் பிழிந்தார்கள். காந்தியும், காங்கிரசும் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடினார்களே தவிர, இந்த நிலப்பிரபுக்களையோ, பண்ணையார்களையோ, இந்த நிலக்குவியல் வகை நிலவுடைமையையோ எதிர்த்து சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. எந்தப்போராட்டத்தையும் அவர்கள் நடத்தவில்லை. அப்படிப்பட்ட சூழலில் பத்து விரலில் பாடுபட்டும், ஐந்து விரலில் அள்ளிச் சாப்பிட வழியில்லாத கிராமப்புற அடித்தட்டு விவசாய மக்களைத் தட்டியெழுப்பி அவர்களது உரிமைக்காகப் போராடச் செய்த சாதனை கம்யூனிஸ்ட் இயக்கத்தையே சாரும். 

மேற்குவங்கத்தில் வீரம்செறிந்ததே பாகா போராட்டம் 15 ஆண்டு காலம் நடைபெற்றது. மிகப்பெரும் ஜமீன்தார்கள், ஜாகிர்தார்களையும் எதிர்த்து நடந்த இந்தப் போராட்டத்தில் எண்ணற்ற பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு பக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டே, மறுபக்கம் உள்ளூரில் இருக்கக்கூடிய காங்கிரஸ் நிலப்பிரபுக்களை எதிர்த்த போராட்டத்தையும் ஏக காலத்தில் நடத்திய பெருமை கம்யூனிஸ்ட்டுகளையே சாரும். மகாராஷ்டிரத்தில் வொர்லி பகுதியில் பண்ணையடிமை முறைக்கு எதிராகப் பழங்குடி மக்களைத் திரட்டி நடத்திய போராட்டங்கள்; தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுக்களுக்கு எதிராக பண்ணையடிமை முறையை ஒழிப்பதற்காக நடத்திய ஆயுதம் தாங்கிய புரட்சி; கேரளாவில் புன்னப்புரா வயலார், கையூரில் நடத்திய போராட்டங்கள்; கீழத்தஞ்சையில் நிலப்பிரபுக்களை, பண்ணையார்களை எதிர்த்து தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் நடத்திய போராட்டங்கள்; பஞ்சாப்பில் நடத்திய வரிகொடா இயக்கம் - இப்படி வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கொண்டே, நாட்டின் நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறைக்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய போராட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் எனப் போராடி, அந்த செயல்திட்டத்தை காங்கிரஸ் ஏற்கச் செய்த பெருமை கம்யூனிஸ்ட்களை மட்டுமே சாரும். 

3
பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் உள்ளூர் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் மூன்றாவது சாதனை. தொழிலாளர்கள் 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை உள்ளிட்டு எந்தவித அடிப்படை உரிமையும் கிடையாது, சங்கம் வைத்தாலே கருங்காலிகளை ஏவி அடிப்பது, கொடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவது என நாடு முழுவதும், பம்பாயில், கல்கத்தாவில், சென்னையில், கோவையில், மதுரையில் நடந்தது. 1923ல் சென்னையில் செங்கொடி ஏற்றி மே தினக் கொண்டாட்டத்தை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார் சிங்காரவேலர். 1920ல் ஏ.ஐ.டி.யூ.சி என தொழிற்சங்க காங்கிரஸை உருவாக்கி அதனடிப்படையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களை அணி திரட்டி ஆலை முதலாளிகளை எதிர்த்துப் போராடிய பெருமை கம்யூனிஸ்டுகளையே சாரும். 

4
அடுத்ததாக, இந்தியா விடுதலை அடைந்தால் அதன் ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வையை கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டமைத்தது. அன்றைக்கு பிரிட்டிஷ் அரசின் ஆளுகைக்குள் ஐந்தாறு மாகாணங்கள் தான் இருந்தன. மீதிப் பகுதிகள் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவளித்த சமஸ்தானங்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. பிரிட்டிஷார் தங்களுடைய நிர்வாகம், ராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இந்தியாவில் ஓர் ஆட்சியமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். இந்தியாவில் உள்ள மக்களின் இனங்களைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ பன்முகத் தன்மையைப் பற்றியோ, சாதி உள்ளிட்ட அவர்களுடைய சமூகப் பிரச்சனைகளைப் பற்றியோ பிரிட்டிஷார் கவலைப்படவில்லை. இந்திய மக்களை சுரண்ட வேண்டும், லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. அதனால்தான் மேற்குவங்கத்தில் பஞ்சம் தலை விரித்தாடிய போதும் கூட இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஈட்டிச் சென்ற செல்வத்தின் அளவு குறையவில்லை. ஆனால், இந்தியாவின் அமைப்பையும், அதன் மக்களின் பிரச்சனைகளையும் புரிந்து வைத்திருந்த கம்யூனிஸ்ட் இயக்கம், ‘இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, மதச்சார்பற்ற தன்மை அதற்கு முக்கியம், மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு பெரும்பாலான விவகாரங்களில் முழு அதிகாரமும், மத்திய அரசுக்கு சில விவகாரங்களில் அதிகாரமும் என மத்திய, மாநில அரசுகளின் கூட்டாட்சி முறையாக இந்தியாவின் ஆட்சி முறை வரையறுக்கப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தில் செயல்பட்டது. இந்த தாக்கத்தால் தான், காந்தி கூட மொழி அடிப்படையில் மாகாணங்களில் காங்கிரஸ் கமிட்டிகளைத் தொடங்கினார். நாடு விடுதலை பெற்ற போது, மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படும் என்றும் மாநிலங்களின் அதிகாரம் வலுப்படுத்தப்படும் என்றும் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மதராஸ் மாகாணம் போல பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட பெரிய மாநிலங்களை வைத்திருப்பதையே காங்கிரஸ் அரசு விரும்பியது. எனவே, மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகப்பூர்வமான கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பெரிய இயக்கம் நடத்தியது கம்யூனிஸ்ட்கள் தான். 1952ல் ஆந்திராவில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தை மட்டும் உருவாக்கிவிட்டு அமைதி காத்தது காங்கிரஸ் அரசு. ஆந்திராவில் தோழர் சுந்தரய்யா, கேரளத்தில் ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ், தமிழகத்தில் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் போராட்டங்கள் தீவிரமடைந்த பிறகுதான் மொழிவழி மாநிலத்தை அமைக்க மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிஷனை காங்கிரஸ் அரசு உருவாக்கியது.

அந்தக் கமிஷனில் காங்கிரஸ் கோரிக்கையோ, ஆலோசனையோ முன் வைக்கக்கூடாது என்று வேறு தடுத்தது காங்கிரஸ் கட்சி. மாநில மறுசீரமைப்புக் கமிஷனுக்கு ஒரு மாநிலத்தைப் பிரிக்கும் போது எதை அளவுகோலாகக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கம்யூனிஸ்ட் இயக்கம் வழங்கியது. எனவே கம்யூனிஸ்டுகளின் ஆக்கப்பூர்வமான போராட்டங்களினாலும், செயல்படுகளினாலும் தான் இன்றைக்கு இந்தியாவில் மொழிவழி மாநில அமைப்பு சாத்தியமாகியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், வங்காளம் என மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பேரணியில் காவல்துறை நடத்திய தடியடியில் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருக்கு மண்டை உடைந்தது. இது தான் வரலாறு. விடுதலைப் போராட்ட காலத்தில் மொழிவழி மாநிலம் அமைக்கப்படும் என்று தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூட காங்கிரஸ் மறுத்த சூழலில், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டபோது எழுந்த சிக்கல்களைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக அது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாத சூழலில் மொழிவழி மாநில அமைப்பில் நதிநீர்ப் பங்கீடு போன்ற சிக்கல்களைத் தீர்க்க கம்யூனிஸ்ட்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மாநிலங்களைக் கம்யூனிஸ்டுகள் என்றைக்குமே நிர்வாக அமைப்பாக மட்டுமே பார்க்கவில்லை; இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள் என்பவை இனம், மொழிகளின் அடையாளமாக இருப்பதாகவே கம்யூனிஸ்ட் இயக்கம் கருதுகிறது. ஆகவே, இந்தியா பல மொழிகளைப் பேசுகிற, பல இன மக்களைக் கொண்ட நாடு என்பதால் பல்வேறு இன மக்களின் அடையாளமாக அதன் மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலங்களின் வளர்ச்சிக்கு நிறைய அதிகாரங்கள் வேண்டும் என்ற புரிதலைக் கம்யூனிஸ்ட் இயக்கம் கொண்டிருக்கிறது. எனவே, இந்தியா இன்று மொழிவழி மாநில அமைப்பைக் கொண்டிருப்பதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் இயக்கமே. 

5
 சாதி ஒடுக்குமுறை, ஆணாதிக்க ஒடுக்குமுறை, சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கம் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுத்து, தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியாவில் இந்து மகாசபை தொடங்கப்பட்ட காலம் தொட்டு சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஆணாதிக்க, சாதியக்கட்டமைப்பை வலுப்படுத்தும் மத, சாதிய சக்திகளால், பெண்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் தொடந்து வலுவாகப் போராடி வருகிறது. காந்தி தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட வேண்டும் என்று சொன்னாலும், தீண்டாமைக்கு அடிப்படையாக இருக்கிற இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மம் இருக்க வேண்டும் எனக் கருதினார் அவர். அவருடைய இந்த முரண்பட்ட நிலைப்பாட்டால், சாதி அமைப்பை அவர் எதிர்க்கவில்லை. 

6

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் அவற்றிற்கு எதிராகக் கடுமையாக போராடியது, போராடி வருகிறது கம்யூனிஸ்ட் இயக்கம்.

7
ஆட்சி அதிகாரம் கிடைத்தபோது அதை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்திய விதம். இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சி 1957 ஆம் ஆண்டில் இ.எம்.எஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. பிறகு, பல முறை கேரளாவில், மேற்குவங்கத்தில், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆட்சிகளின் சாதனைச் செயல்பாடுகள் என்று பார்க்கும்போது, சாமானிய மக்கள் இது தங்களுடைய ஆட்சி என்று கருதும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி இருந்தது. இந்த மாநிலங்களில் வலுவான பஞ்சாயத்து அமைப்புகளை ஏற்படுத்தி, மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கிய ஆட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி இருந்துள்ளது. மேற்குவங்கமும், கேரளாவும் பஞ்சாயத்து அமைப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த பிறகே ராஜீவ் காந்தி மத்திய சட்டத்தைக் கொண்டு வந்தார். பல மாநிலங்கள் மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டும் எனக் கேட்கும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்காது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே மாநில அதிகாரத்துக்கு குரல்கொடுக்கும் அதே அளவிற்கு, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்தியது. அதனால் தான் இன்றைக்கு கேரள மாநிலம் மக்களை அதிகாரப்படுத்துவதற்காக சர்வேதச அளவில் பாராட்டப்படுகிறது.  நிலச்சீர்திருத்தம் மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநிலங்களாக இந்த மாநிலங்கள் இருக்கின்றன.

8
 ஊழல் இல்லா ஆட்சி என மாநில அரசு இயந்திரத்தை மக்கள் நலனை நோக்கிச் செலுத்தியதில் மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பெரும்பங்கு உள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி மாறி மாறி நிகழ்ந்திருக்கலாம். ஆனால் காவல்துறை உள்ளிட்ட அரசின் கட்டமைப்புகளை உழைப்பாளி மக்களுக்கு விரோதமாக மார்க்சிஸ்ட் கட்சி அரசுகள் பயன்படுத்தியது கிடையாது. நில விநியோகம் உள்ளிட்ட திட்டங்களை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கின்றன. 

9
 அகில இந்திய அளவில் நடந்த இந்தப் போராட்டங்களை தமிழ்நாட்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் சென்றுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்கள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டம், குறைந்தபட்ச கூலிச் சட்டம், நியாய வார சட்டம், குத்தகை விவசாயிகள் பதிவுச் சட்டம், நிலச் சீர்திருத்தச் சட்டம் இவையெல்லாம் இன்றைக்கு தமிழகத்தில் சாத்தியப்படுத்தியது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த இடையறாத போராட்டங்கள் தான். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் தலைமையில் நடைபெற்ற கீழத் தஞ்சை விவசாயப் போராட்டம் பல சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக சாதியால் பிரிந்துள்ள உழைக்கும் மக்களை – பட்டியலினத்தில் இருக்கிற விவசாயத் தொழிலாளர்களையும், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளையும் இணைத்து ஒரு சேரப் போராட வைத்த பெருமை கம்யூனிஸ்ட்டுகளை மட்டுமே சேரும். நிலக் குவியல் ஒழிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், கம்யூனிடுகளே.

10
 காங்கிரஸ் கட்சியில் இருந்த முதலாளிகளுக்கு எதிராகவும், பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு எதிராகவும் தொழிலாளர் நலனை முன்னெடுத்து கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் வருவதற்கான முற்று முழுமையான பங்களிப்பை கம்யூனிஸ்ட் இயக்கமே மேற்கொண்டது.சென்னை மாகாணத்திற்கு 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அமைத்த அணி பெரும் வெற்றியை சாதித்தது. பி.அனந்தநம்பியார், பி.ராமமூர்த்தி ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் இருந்த போதிலும் பெரும் வெற்றியை சாதித்தார்கள். சட்டமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் மக்கள் உரிமைகளை காப்பதற்கான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். தமிழ் பேசும் மக்கள் மட்டுமே கொண்ட ஆட்சிப் பிரதேசமாக நவம்பர் முதல் தேதியில் தமிழ்நாடு உருவானது. இந்த வரலாற்றை கோரிக்கையாக வைத்துப் போராடி வென்றது கம்யூனிஸ்ட் இயக்கமே. அந்த நாட்களின் திராவிட நாடு பற்றி பேசிவந்த திராவிட இயக்கம் பின் நாட்களிலேயே இந்த நிலைக்கு வந்து சேர்ந்தது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய அரசியலில் தீர்மானகரமான பங்களிப்பை கம்யூனிஸ்ட் இயக்கம் செய்து வந்திருக்கிறது. வகுப்புவாத எதிர்ப்பு, இந்திய கூட்டாட்சி பாதுகாப்பு, கல்வியை பாதுகாப்பது, இந்திய அரசமைப்பின் அனைத்து முற்போக்குக் கூறுகளையும் பாதுகாப்பது என தொடர்ந்து களத்தில் முன்நிற்கிறது.

பெரும்பான்மை இருப்பதால் நாங்கள் நினைப்பதைச் செய்வோம் என இயங்குகிறது பாஜக. இதை விடவும் பெரும்பான்மையோடு ஆட்சி செய்த ஆட்சியாளர்களை நாம் பார்த்திருக்கிறோம். 
விடுதலைப் போராட்டம் தொடங்கி அனைத்து களத்திலும் தனி முத்திரை பதித்திருக்கும் கம்யூனிஸ்டுகளே, இப்போதும் வகுப்புவாதம் எழுப்பியிருக்கும் சவால்களுக்கு தீர்வைக் கொடுக்க முடிகிற தனித்துவமான இயக்கமாக  பீடு நடை போடுகிறது.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;