கட்டுரை

img

அவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...

“நாங்கள் ஒரு போதும் வன்முறைக்கு வன்முறையால்  பதிலளிக்க மாட்டோம். கோபத்தை கோபத்தால் எதிர்கொள்ள மாட்டோம்.  அவர்கள் வெறுப்பை பரப்பினால் , நாங்கள் அன்பால் பதிலளிப்போம். அவர்கள் தடி கொண்டு தாக்கினால், நாம் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிப்போம். அவர்கள் தோட்டாக்களால் துளைத்தால், நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம். அவர்கள் நம்மை சிறையில்அடைத்தால் நாம் ‘சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் அமாரா’ என பாடிக்கொண்டே சிறை செல்வோம். ஆனால்,ஒருபோதும் இந்த நாட்டை துண்டாட விட மாட்டோம்.“-இவை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரும் மத்திய மோடி அரசால் கொடும் சட்டமான ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ (UAPA)வின் கீழ்கைது செய்யப்பட்டவருமான உமர் காலித் உதிர்த்த வரிகள்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் முடங்கிக் கிடக்கும் பேரிடர் சூழலை பயன்படுத்தி இந்தியாவில் மோடி அரசாங்கம் அறிஞர் பெருமக்களை, சமூகவியலாளர்களை, குறிப்பாக சிஏஏ போன்ற பிரிவினைச் சட்டங்களுக்கு எதிராக போராடிய மாணவர்களை வேட்டையாடும் “ஜனநாயகப் படுகொலை”களை அரங்கேற்றி வருகிறது. அம்பேத்கரின் பேரனும், பேராசிரியருமான ஆனந்த்டெல்டும்டே முதல் ஆய்வு மாணவர்கள் உமர்காலித், மீரான்ஹைதர், ஃசபோரா ஜர்கார், ஆசிஃப் இக்பால் தன்ஹா, குல்பிசா பாத்திமா, நட்டாஷா நார்வால், கலிதா, சார்ஜீப் இமாம் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஃசபோரா ஜர்கார் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் மனிதாபிமானமற்ற முறையில் கைதுசெய்யப்பட்டார். தற்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உட்படமேலும் நான்கு சமூகவியலாளர்கள் மீதும் தில்லி கலவர சம்பவத்தை தூண்டிவிட்டதாக குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?

கடந்த ஆண்டு இறுதியில் சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி என்ற மதவாத சட்டங்கள் இந்திய சிறுபான்மை மக்களை நேரடியாக தாக்கும் விதமாக, ஒட்டுமொத்த இந்தியாவை உருக்குலைக்கும் விதமாக, பன்முகத்தன்மையை சிதைக்கிற- அரசியலமைப்பு சட்டத்தை குழிதோண்டிப் புதைக்கிற வகையில் பெரும்பான்மை பலம் கொண்டு மோடி அரசாங்கம் அமல்படுத்தியது. இதனை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக அசாம்,தில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் போராட்ட வரிசையில் முன்னணியில் நின்றது. தில்லியின் ஜாமியா, ஜவகர்லால் நேரு மற்றும் ஏனைய மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் வீரம் செறிந்த தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேலான மக்கள், பெண்கள், குழந்தைகள் என வீதிக்கு வந்தனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு, கலவரங்கள் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்க திட்டமிட்டு அமைச்சர்களான கபில் மிஸ்ரா, அனுராக் போன்றோரே பகிரங்கமாக பொதுவெளியில் கலவரத்தை தூண்டும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்தனர்.குறிப்பாக ஜாமியா மிலியா மாணவர்களின் போராட்டத்தின்போது பல நூற்றுக்கணக்கான காவலர்கள் முன்னிலையிலேயே இந்துத்துவா கும்பலை சார்ந்த இளைஞர் ஒருவர் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டார்.  பிப்ரவரி 23 முதல் 26 வரை பாஜகவும், மத்திய அரசும்,தில்லி காவல் துறையும், சங் பரிவாரங்களும் கூட்டிணைந்து வடக்கு தில்லியில் பெரும் கலவரத்தை உருவாக்கின. இரண்டு காவலர்கள் உட்பட 58 பேர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். அதன் நீட்சியாகபொதுமுடக்கத்தை பயன்படுத்தி மீண்டும் அந்த போராட்டத்தை யாரும் முன்னெடுக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஏஏ போராட்டத்தில் பங்கு பெற்ற மாணவர்களை, சமூக செயற்பாட்டாளர்களை, இடதுசாரிகளை மோடி அரசின் சூலாயுதம் குறிவைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

யுஏபிஏ சட்டம்?
‘UNLAWFUL ACTIVITIES PREVENTION ACT’ (யுஏபிஏ) - 1967-ல் உருவாக்கப்பட்ட இந்த கொடும் சட்டமானது கடந்த ஆண்டு மோடி அரசு தன்னுடைய தேவைக்காக தனி நபரையும் இதன்கீழ் கைது செய்யலாம் என்ற மாற்றத்தோடு புதுப்பித்து கொண்டுவந்தது . இதன்படி எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஒரு நபரை கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் மோடி அரசாங்கம்  பதவியேற்றதற்கு பின்னால் மட்டும் 24 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குமுன் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஒரு சில கைதுகள் இந்த சட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளன. இந்த 24 பேரில் 70 சதவீதம் மாணவர்களாவர். குறிப்பாக ஜாமியாமற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக மத்திய அரசின் தேசவிரோத சட்டங்களுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், தேசத்திற்கே உந்துசக்தியாக - வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றனர். சிஏஏ போராட்டத்தை முதலில்  துவக்கியவர்களும் மாணவர்கள்தான். அதன் பின்புதான் தேசம் தழுவிய எதிர்ப்புப் போராட்டங்கள் எழுச்சிபெற தொடங்கின. இதன் விளைவாகவே அந்தமாணவர்களை பழிவாங்கும் முயற்சியாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்துள்ளனர். குறிப்பாக, உமர் காலித்தை நீதிமன்றமே விடுவித்த போதிலும் உடனுக்குடன் நான்கு முறை வழக்கு பதிந்து தற்போது ஆள்தூக்கி சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். ஏனைய பிற மாணவர்களிடத்திலும் பொய் வாக்குமூலங்களை பெற்று அவர்களுக்கெதிரான குற்றங்களை புனைய முற்பட்டுள்ளது அடுத்தடுத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகிறது.

யார் இந்த மாணவர்கள்?
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாணவர்களும் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள். அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய தலைப்புகள் எல்லாம் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கான தலைப்புகள் ஆகும். குறிப்பாக உமர் காலித் “ஆதிவாசிகளின் வாழ்நிலை” குறித்தான ஆராய்ச்சியை மேற்கொண்டவர் மற்றும் சிறந்த அம்பேத்கரியவாதி. தொடர்ந்து இந்துத்துவா சித்தாந்தத்தை அறிவுத் தளத்திலும், போராட்டக் களத்திலும் அம்பலப்படுத்தி விரட்டி அடிப்பவர்களாக இந்த மாணவர்கள் உள்ளனர். குறிப்பாக மத்திய பல்கலைக்கழகங்களில் இந்துத்துவா அமைப்பான ஏபிவிபி காலூன்றவிடாமல் செய்வதில் அவர்கள் முன்னணியில் நிற்கின்றனர். எனவேதான், கன்னய்ய குமார் முதல் உமர் காலித்வரை தொடர்ந்து கொடும் சட்டங்களால் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜேஎன்யு மாணவர் பேரவை தலைவரும், இந்திய மாணவர் சங்கத் தலைவருமான ஆயிஷிகோஷ் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டு வந்தார். 

வடக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டு அவர்களது உடைமைகள் சேதப்படுத்தப்பட்ட போதிலும் குற்றவாளிகளாக அவர்கள்தான் மாற்றப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் களத்தில் நின்று உதவிய மாணவர்களும், இடதுசாரிகளும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்கள். பாஜகவின் தோல்விகளான கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு, நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சரிவு, எல்லை பிரச்சனைகள், வேலை இழப்பு போன்றவற்றை திசை திருப்பவும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலான இஸ்லாம் எதிர்ப்பை ஒருசேர தூக்கிப் பிடிக்கவும் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தப்லீக் ஜமாஅத்  மாநாட்டினாலேயே கொரோனா பரவியது என்ற விஷமபிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஆனால், அது “அரசியல் பொய்யென்று” மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்து பாஜகவின் மூக்கு உடைக்கப்பட்டது. எனவே சிஏஏ  எதிர்ப்புப்போராட்டக்காரர்களை கைது செய்து அவர்களை குறிப்பாகஇஸ்லாமியர்கள் என்ற முத்திரை குத்துவதன் மூலம், சிஏஏ எதிர்ப்பு கோரிக்கையை பெரும்பாலான இந்தியர்களின் கோரிக்கை என்ற உணர்வில் இருந்து தனிமைப்படுத்த முயல்கிறது  மோடி தலைமையிலான இந்துத்துவா அரசு.எனவேதான் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து தில்லி கலவரத்தின் பாரபட்சமான ஒருசார்பு விசாரணை குறித்து கவலையோடு மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. 
ஒருபுறம் இந்திய நாடு கொரோனாவோடான போராட்டமும்,  மறுபுறம் அனைத்து சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இணைந்து மோசமான தேச விரோத சக்திகளுக்கு எதிராக, தேசவிரோத சட்டங்களான சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், என்இபி; இஐஏ மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மற்றும் தேசபக்தி போர்வையில் ஒளிந்திருக்கும் பாஜக சங்பரிவார் கூட்டத்தை எதிர்த்து ஒருமித்த குரல் எழுப்பி வீரசமர் புரிய அணி திரள்வோம்! 

கட்டுரையாளர் : எஸ்.சுபாஷ் சந்திரபோஸ், இந்திய மாணவர்  தென் சென்னை மாவட்டத் தலைவர்

;