புதன், அக்டோபர் 21, 2020

கட்டுரை

img

கொரோனா நோய் மரணங்கள் : நுரையீரல் ரத்த உறைதல் முக்கிய காரணம்

கொரோனா தொற்று குறித்த பயத்தில் பெரும் பங்கு வகிப்பது அது வந்தால் மரணம் சம்பவிக்கலாம் என்பதே. இந்த தொற்றினால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மரணங்கள் ஒப்பீட்டளவில் குறைவே. தமிழ்நாட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. என்றாலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இறப்புகளும் கணிசமாக உள்ளது. இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் ஏறக்குறைய எல்லா மரணங்களும் மூச்சுக் கோளாறினாலேயே ஏற்பட்டுள்ளன. பொதுவாக நுரையீரல்களில் ஏற்படும் தீ நுண்மி தொற்றில் அங்குள்ள காற்றுப் பைகள் பாதிக்கப்படுகின்றன. இதை நிமோனியா என்கிறார்கள். இதுதான் இதற்கு முன் ஏற்பட்டஇன்புளூயென்சா பரவல்களில் காணப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றில், ஆரம்பத்திலேயே உண்டாகிப் பின் அதிகமாகும் ரத்த உறைதலே மூச்சு நிற்பதற்கு காரணமாகிறது.

ரத்தம் உறைவதினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வாயுப் பரிமாற்றம் தடைபடுகிறது. இந்த முடிவுக்கு பல கட்ட ஆதாரங்கள் உள்ளன.முதலாவதாக, ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதைக் காட்டும் மார்க்கர்  டி -டைமர் (d-dimer) என்பது. இது அதிக அளவில் உள்ளவர்கள் கடுமையான மூச்சு சிக்கல்களுக்கு ஆளாகி மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது.   கொரோனா தொற்று நோயாளிகளில் பெரும்பாலோருக்கு டி-டைமர் அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில்தான் ரத்தம் உறையும் இடங்கள்காணப்படும். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரலைத் தவிர வேறு ரத்தம் உறையும் இடங்கள் காணப்படவில்லை. மிகவும் தொடக்க கட்ட அறிக்கைகளிலிருந்தே இந்த கருத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வலுவான ஆதாரம் வெவ்வேறு நாடுகளில்செய்யப்பட்ட ஏராளமான பிரேதப் பரிசோதனைகளிலிருந்து கிடைக்கிறது. இந்தப் பரிசோதனைகளில்  நுரையீரல்களிலுள்ள குறு ரத்தக் குழாய்களில் ரத்த உறைகட்டிகள்(BLOOD CLOTS) பெருமளவில் காணப்பட்டன. நிமோனியாவிற்கான அறிகுறிகள் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. இது ரத்தம் உறைதலே ஆக்சிஜன் குறைவதற்கும் மூச்சு நிற்பதற்கும் காரணம் என காட்டுகிறது..  மூன்றாவதாக, நுரையீரல் காற்றுப் பைகளிலுள்ள செல்களின் மேலுள்ள ஏற்பிகள்(receptors) கொரோனா வைரசை செல்களுக்குள் அனுமதிக்கின்றன என்பதும் அங்குள்ள ரத்தக்குழாய்களின் சுவர்களிலுள்ள செல்களுக்கும் இந்த ஏற்பிகளே பொதுவாக உள்ளன என்பதும்இப்பொழுது தெரிய வந்துள்ளது. இந்த செல்களில் தெளிவான தொற்று ஏற்பட்டு பின் அது  சிறு ரத்தக் குழாய்களில் உறைதலை தூண்டுகின்றன என்பதை  உடற்கூறு பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. உடனடியாக இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் இது விரைவாகப் பரவி சிகிச்சை பலனின்றி மூச்சு நின்றுவிடுகிறது.

நான்காவதாக, வெளியில் தெரியாத நிமோனியா (silent pneumonia or silent hypoxia) என்றழைக்கப்படுகிற நோயாளிகள். இவர்கள் ஒப்பீட்டளவில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் நல்லவிதமாகத் தோற்றமளிப்பார்கள். ஆனால் ரத்த ஆக்சிஜன் குறைந்து திடீரென்று இறந்துவிடுவார்கள். அனேகமாக இதற்குக் காரணம் பரவிக் கொண்டிருக்கும் நுரையீரல் ரத்த உறைதலே. சில நோயாளிகள் விசயத்தில் நுரையீரல் மற்ற செயல் முறைகளினால் பாதிக்கப்பட்டு மரணம் நிகழலாம். ஆனால்கிட்டத்தட்ட எல்லா நோயாளிகள் விசயத்திலும் நுரையீரலில்ரத்தம் உறைவதுவே உறுதியான காரணம்.எனவே இந்த நோய்க்கு தொடக்க நிலை கண்டுபிடிப்பும் ரத்த இளக்கிகள்(blood thinners) சரியான அளவில் செலுத்துவதுமே முக்கியமான தேவையாக இருக்கிறது. எளிமையான மதிப்பீடுகள் மூலம் எல்லா மருத்துவமனைகளிலும் இதை செய்ய முடியும். ஒருவர் ஒப்பீட்டளவில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் நல்லவிதமாகத் தோன்றினாலும் அவரது ஓய்வு மூச்சு விகிதம் (நிமிடத்திற்கு 20க்கு மேல்), விரலில் குறைவான ஆக்சிஜன் அளவு(93% குறைவு) ஆகியவைபல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதிக்கப்பட வேண்டும். முடிந்தால்டி-டைமர் அளவுகளும் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும்.

அது சாதாரண அளவைவிட 2-3 மடங்கு அதிகம் இருந்தால்  நுரையீரலில் பரவும் நிலையை காட்டும். அந்த நோயாளிகளுக்கு உடனே சாதாரணமாக பயன்படுத்தப்படும் ரத்த இளக்கிகளை(ஹெபாரின் அல்லது LMWH)) தகுந்த சிகிச்சை அளவு கொடுக்க வேண்டும். அறிகுறிகள் நீங்கும்வரை கொடுக்க வேண்டும். சில நிலைமைகளில் இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே தகுந்த மருத்துவ மேற்பார்வை அவசியம். மோசமான விளைவுகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். ஆகவே, கொரோனா நோய்க்கு பிரத்தியேகமான நுரையீரல் ரத்த உறைதல் பிரச்சனையின் தீவிரத்தை பொது மக்களும் மருத்துவர்களும் உணர்ந்துகொள்வது மிக முக்கியம். நோயின் நிலைமையைப் பொறுத்து கொடுக்க வேண்டிய மருந்தின் அளவுகள் குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டியதிருக்கிறது என்பது உண்மைதான். எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டியதில்லை. மேலே சொன்ன அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டும். இந்த முறையானது நோயை குணப்படுத்துவதில் நல்ல பலனைக் கொடுக்கிறது என்பது நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை இன்னும் குறைக்கும்.

 அலோக் ஸ்ரீவஸ்தவா, மருந்துத் துறைப் பேராசிரியர்,  சிஎம்சி மருத்துவக் கல்லூரி, வேலூர்

தமிழில் : இரா. இரமணன்
நன்றி: தி இந்து ஆங்கில நாளேடு 24.05.2020

;