கட்டுரை

img

“காஷ்மீர் நமக்கு இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - மயிலை பாலு

 இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மிகவும் முக்கியமானது.  காஷ்மீரில் எது நடந்தாலும் அது இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்கும்.

“சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதலாவது பிரதமராகியிருந்தால் இப்போது  காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானில் இருந்திருக்காது” என்று பிரதமர் நரேந்திரமோடி 2018 பிப்ரவரியில் மக்களவையில் பேசும்போது கூறினார். இப்போது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதே விஷயத்தைப் பேசியிருக்கிறார்.

இதன் உண்மைத்தன்மை என்னவென்பதைக் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணியில் அறிந்துகொள்வது நல்லது. அதற்கான உள்ளீடு கீழே தரப்படுகிறது. இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் சமஸ்தானங்கள் இணைப்பு முயற்சியில் சிக்கலாக இருந்தது ஹைதராபாத், ஜுனாகத் மட்டும்தான். காஷ்மீரைப் பற்றி அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

பட்டேலின் கருத்தும் நிலையும்

காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் என்று மகாத்மா காந்தி நம்பினார்.  ஆனால் சர்தார் படேலின் நிலை அப்போது என்னவாக இருந்தது என்பதை அவரது அரசியல் பிரிவு செயலாளராக இருந்த வி.சங்கர் இப்படிக் கூறுகிறார். “அதற்கான முடிவை ஜம்மு-காஷ்மீரின் ஆட்சியாளர்களி டமே விட்டுவிடலாம். அவரது விருப்பமும் அந்த ஆட்சிப் பகுதியினரின் விருப்பமும் பாகிஸ்தானுடன் இணைவதாக இருந்தால் அந்த வழியில் தாம் குறுக்கே நிற்கப்போவ தில்லை.” (சர்தார் பட்டேல் பற்றிய எனது நினைவுகள்-1974; பக்கம் 127) சங்கர் மட்டுமல்ல வரலாற்றுப் பேராசிரியர் ராஜ்மோகன் காந்தியும் இவ்வாறுதான் சொல்கிறார். “காஷ்மீர் விஷயத்தில் 1947 செப்டம்பர் 13 வரை வல்லபாய் பட்டேலின் மிதவாத போக்கு நீடித்தது.  அன்றைய தினம் இந்தியாவின் முதலாவது பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ‘காஷ்மீர் இன்னொரு நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) இணைவது என முடிவு செய்தால் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். “(ராஜ்மோகன் காந்தி: ‘படேல் - ஒரு வாழ்க்கை’ 1991, பக்கம் 439)

1947 செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான படேலுக்கு ஒரு தகவலை அனுப்பி வைத்தார். “பாகிஸ்தான் ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கை யில் காஷ்மீருக்குள் நுழையத் தயாராகி வருகின்றனர்”  என்பது அந்தத் தகவல். அக்டோபர் 26 ஆம் தேதி நேரு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் பிரதமராக இருந்த நகர் சந்த் மஹாஜன், “இந்திய வீரர்கள் உடனடியாக ஸ்ரீ நகருக்கு செல்ல வேண்டும்” என்று கோரினார். “இதனை இந்தியா ஏற்காவிட்டால் காஷ்மீர் ஜின்னாவின் நிபந்தனையை ஏற்க வேண்டிவரும்” என்று அறிவித்தார்.  இதனால் எரிச்சல டைந்த நேரு “போங்கள்” என்று மகாஜனிடம் கூறினார். அந்த நேரத்தில் இல்லத்திற்குள் வந்த படேல், “மகாஜன்,  உண்மையில் நீங்கள் பாகிஸ்தானுக்குப் போகமாட்டீர்கள்” என்றார். (ராஜ்மோகன் காந்தி:  பட்டேல் - ஒரு வாழ்க்கை; 1991 - பக்கம் 442)

“காஷ்மீர் பிரச்சனைக்குத்  தீர்வுகாண  கருத்துக்கணிப்பு,  ஐநாவிடம் முறையிடுதல், சண்டை நிறுத்தம் காரணமாக காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தல்,  மகாராஜாவைப்  பதவியிலிருந்து அகற்றுதல் உட்பட, இந்தியா மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் பட்டேல் மகிழ்ச்சியற்றி ருந்தார். ஆனால் அவ்வப்போது கருத்து கூறி வந்தாரே தவிர, தனது சொந்தத் தீர்வை சொன்னதில்லை” என்பதும் ராஜ்மோகன் காந்தியின் நூல் பதிவாகும்.  (மேல் நூல் பக்கம் 518)

வேறுபாடு இருப்பதாக நினைக்கவில்லை

காஷ்மீர் விஷயத்தில் நேருவுக்கும் படேலுக்கும் இடையே என்ன மாதிரியான புரிதல் இருந்தது என்பதை “நேரு - படேல்: கருத்துவேறுபாடுகளுக்குள் உடன்பாடு- தெரிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் கடிதப் போக்குவரத்துகள் 1933- 1950” என்ற தலைப்பில் நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனம் 2010-ல் வெளியிட்ட நூல் தரும் தகவல்கள்:

  1. “வகுப்புவாத கேள்விகளுக்கு அப்பால் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அரசியல் போராட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டும் கலக்கக்கூடாது.  காஷ்மீர் குறித்த சிக்கலான பிரச்சனைக்கு கௌரவமான தீர்வு காண்பதற்கு அமைதியின் தூதரான பண்டிட் ஜவஹர்லால் நேரு தாமே இங்கு வருவார் என்பதை நான் அறிவேன். அவரும் ஒரு இந்து தான். அதுவும் காஷ்மீர் இந்து.  மேலும் அவர் முன்னணி தேசபக்தர்களில் ஒருவர். நவீன இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவர். எல்லா மனிதர்களைப் போல அவரும் தவறு செய்யலாம். ஆனால் அவரின் அனைத்து செயல்பாடுகளும் உயர்வான தேசபக்தியை கருதியதாகும். எனவே அவரைப் பற்றி அல்லது அவரின் செயல்கள் பற்றி நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கெடுவாய்ப்பான காஷ்மீர் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின்னணியில் கசப்பு ணர்வு இருக்காது” (ஜம்மு-காஷ்மீரின் ஓய்வுபெற்ற உதவி தளபதி பண்டிட் ஜியாலால் கவுத் ஜலாலிக்கு படேல் எழுதி யது -  ஜூன் 16, 1946)
  2. “காஷ்மீருக்காக என்னால் என்ன செய்ய முடியு மோ அதைச் செய்யாமல் இருந்து விட்டதாக நான் நினைக்க வில்லை. அதேபோல் காஷ்மீர் தொடர்பான கொள்கை நிலைப்பாடுகளில் உங்களுக்கும் எனக்கும் எந்த வேறு பாடும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் கீழே இருப்பவர்கள் நமக்கிடையே கருத்து வேறுபாடு இருப்ப தாக இன்னமும் நினைப்பது துரதிருஷ்டமாகும் . இது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது” (துவாரகநாத் கச்ருவின் கடிதம் குறித்து நேருவுக்கு படேல் எழுதிய கடிதம்; அக்டோபர் 8, 1947)

 

நேருவின் அச்சம்

  1. ஆர்எஸ்எஸ்சும் ஜம்முவுக்கு  சென்றுள்ள மேற்கு பஞ்சாபின் இந்து மற்றும் சீக்கிய அகதிகளும் காங்கிரஸ் அரசுக்கும் , ஷேக் அப்துல்லாவுக்கும் ஜம்மு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் செய்கி றார்கள். காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களை விரட்டுவதற்கு இந்திய அரசு சீக்கியத் துருப்புகளை அனுப்பி இருப்பதாக எல்லைப் பகுதியிலும் மேற்கு பஞ்சாபின் எல்லை மாவட்டங்க ளிலும் பிரச்சாரம் செய்கிறார்கள். இதில் ஒரு தரப்பாக ஷேக் அப்துல்லாவைத்  தாக்குகிறார்கள்... ( ஜம்முவில் வகுப்பு வாதப் பதற்றத்தை ஆர்எஸ்எஸ் அதிகரிப்பது குறித்து படேலுக்கு நேரு எழுதியது ; அக்டோபர் 30, 1947)
  2.  “இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மிகவும் முக்கிய மானது.காஷ்மீரில் எது நடந்தாலும் அது இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்கும். எனவே காஷ்மீர் நமக்கு இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்நியர்களின் நல னுக்காக அது ஒரு காலனியாக மாறுவதை நான் விரும்ப வில்லை. அப்படி ஆகிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” (ஷேக் அப்துல்லாவுக்கு நேரு எழுதியது - அக்டோபர் 10, 1947) படேலின் மனநிலையும் நேருவின் மனநிலையும் காஷ்மீர் விஷயத்தில் முன்னும் பின்னுமாகக் கயிறு இழுக்கும் போட்டி போலவே இருந்ததை இவை வெளிச்சப் படுத்து கின்றன. படேலை உயர்த்தவேண்டும் என்பதற்காக நேரு வைத்தாழ்த்தி உண்மைகளைப் புதைகுழிக்கு அனுப்பும் கோயபல்ஸ்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெரும்பாலான வரலாற்றை சங்பரிவார் இப்படித்தான் திரிக்கிறது. அதன் திரிபுவாதத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்வது அவசியம்.

கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர் 
தகவல் ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (12 - 2- 2018)

 

;