கட்டுரை

img

கூட்டாட்சிக்கு குழிபறித்து எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் மோடி அரசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜூலை 25, 26 தேதிகளில் இணைய வழியாக நடை பெற்றது. கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் வருமாறு:

சுய சார்பு அல்ல, மாறாக சுய சரணாகதி

இந்தியாவின் சுய சார்பு என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஊக்குவிப்பு நிதித் தொகுப்பு, உண்மையில் இந்தியாவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தனியார் மூலதனத்திடம் அடிமைப்படுத்துவதற்கான பொருளாதாரத் திட்டமேயாகும்.  நம் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் தற்போது அந்நிய நேரடி மூதலீட்டுக்கு அகலத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ரயில்வே, நிலக்கரி, கனிம வளங்கள், இன்சூரன்ஸ் உட்பட அனைத்துத்துறைகளும் இவ்வாறு அகலத் திறந்துவிடப்பட்டி ருக்கின்றன. ரயில்வே, துப்பாக்கிகள்  உட்பட ராணுவத் தளவாடங்கள் உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள், பிஎஸ்என்எல் உட்பட பொதுத்துறை நிறுவனங்களில் பல தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் மின்சாரத் துறை, நிலக்கரி, கனிம வளங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் நிதித்துறைகளும் இவ்வாறே தனியாருக்குத் தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பொதுச் சொத்துக்களைச் சூறை யாடுவதற்காக, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட மறுதலிக்கும் விதத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள், முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பல மாநிலங்களில் தொழிலா ளர்களின் பணி நேரம் நாளொன்றுக்கு 8 மணி நேரம் என்பதிலிருந்து, 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கூர்மைப்படுத்தப்படும்  மதவெறி நடவடிக்கைகள்

மத்தியக்குழு, நாட்டில் மதவெறி நடவடிக்கைகள், குறிப்பாக முஸ்லீம் மதச் சிறுபான்மையினருக்கு எதிராகக் குறிவைத்து, மேலும் கூர்மைப்படுத்தப்பட்டிருப்பதை ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது. தில்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைகளுக்கிணங்க, சமீபத்தில் நடைபெற்ற மதவெறி வன்முறையில் ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அவற்றின் துணை அமைப்புகளின் வன்முறை வெறியாட்டங்களை மூடிமறைத்திட தில்லி காவல்துறையினர் தள்ளப்பட்டிருக்கின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசியக் குடியுரிமைப்பதிவேடு/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியாகப் போராடிய மாணவர்கள் உட்பட பல இளம் ஆர்வலர்களும், மதவெறி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களையும் அரக்கத் தனமாக சட்டங்களின் கீழ் கைது செய்திருக்கின்றனர். அதே சமயத்தில் வட கிழக்கு தில்லியில் மதவெறி வன்முறையைத் தூண்டியவர்களையும், அவ்வன்முறை வெறியாட்டங்க ளுக்குத் தலைமையேற்று நடத்தியவர்களையும் சுதந்திர மாகத் திரிவதற்கு அனுமதித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில், அரக்கத்தனமான உத்தரப்பிரதேச 2020ஆம் ஆண்டு பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பாதிப்புகள் மீட்பு அவ சரச் சட்டத்தின் (‘UP Recovery of Damages to Public and Private Property Ordinance,2020’) கீழ் அமைதியான முறையில் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களிடம் அதீத அளவில் அபராதம் வசூலிப்பதற்கும், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  

ஜனநாயக உரிமைகள் -  குடிமை உரிமைகள் மீது தாக்குதல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மோச மான முறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் பலரை சிறைகளிலிருந்து லிருந்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக எவ்விதமான கருத்து வேறுபாட்டைத் தெரிவித்தாலும் அது ‘தேச விரோதம்’ என முத்திரை குத்தப்படுகிறது.ஆட்சியா ளர்களைத் துணிந்து எதிர்க்கிற ஊடகங்களில் சிலகூட இதிலிருந்து தப்பவில்லை. இவற்றுக்கு எதிராகவும் வழக்குகள் புனையப்பட்டுள்ளன.    

எதேச்சதிகாரத்தை நோக்கி

பாஜக தலைமையிலான அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றை முகமூடியாகக் கொண்டு, நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சமாக விளங்கும், கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைகளை மறுதலித்துவிட்டு, தன்னுடைய அனைத்து எதேச்சதிகாரங்களையும் தன்னிடம் மையப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் மத்தியக்குழு பரிசீலித்தது. அனைத்து அதிகாரங்களும் பிரதமராலும் மத்திய அரசாங்கத்தாலும்  ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநில அரசாங்கங் கள் இவற்றினால் ஏற்படக்கூடிய சுமைகளைத் தாங்கிக் கொள்ள தள்ளப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் மாநில அரசாங்கங்கள் முன்னணியில் இருந்தபோதிலும், அவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்குப் பதிலாக,  அவற்றுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக்கூட அளிக்காமல் மறுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம், பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் ஒரு தனியார் அறக்கட்டளை சார்பாக வசூலிக்கப் பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களிலிருந்து நிதி உதவி யினை மாநிலங்களுக்கு உடனடியாக செய்திட வேண்டும்.

அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை அரித்து வீழ்த்தும் நடவடிக்கைகள்

பாஜக அரசாங்கம், சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த அனைத்து அரசமைப்புச்சட்ட நிறுவனங்களையும் அரித்து வீழ்த்திட மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக மத்தியக் குழு மக்களை எச்சரித்தது. நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளையும் மிகவும் கடுமையானமுறையில் கட்டுப்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களில் நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆழமானமுறையில் கேள்விகள் வந்திருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது போன்ற முக்கியமான மனுக்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதலானவை விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டின் மீதும் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டிருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை மற்றும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மத்திய அரசின் அரசியல் அங்கங்களாக மாறிக்கொண்டிருப்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மாநில அரசாங்கங்களைப் பலவீனப்படுத்தல்

பாஜக அரசாங்கம், பல்வேறு தில்லுமுல்லுகளை மேற்கொண்டும், அபரிமிதமான முறையில் பணத்தை வாரி வழங்கியும், மிகவும் சந்தேகத்திற்குரிய வழிமுறைகள் மூலம், மிகவும் கூச்சநாச்சமின்றி குதிரை பேரத்தின் மூலமாக கட்சித் தாவல்களை ஊக்குவித்து,  இதர கட்சிகளின் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு,நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்தும் மத்தியக்குழு குறித்துக் கொண்டது.

கேரள அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முயற்சி

கேரளாவில், ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு முகவரியிட்டு வரும் தூதரகப் பார்சல்கள் மூலமாக நடந்து வந்த தங்கக் கடத்தல் வழக்கைப் பயன்படுத்திக்கொண்டு, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்திடவும், முதல்வரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியும், பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்கக் கடத்தல் வழக்கு, மத்திய அரசின் சுங்கத்துறையின் அதிகார வரம்பின்கீழ் வருகிறது. அதற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கை மத்திய அரசின் முகமைகளால் விசாரிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கேட்டிருந்தார். இப்போது தேசியப் புலனாய்வு முகமை இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவரும், தேசியப் புலனாய்வு முகமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.   இப்போது அனைவரின் கவனமும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை மாநிலத்தில் முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கவனத்தைத் திருப்பிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே சமயத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக-வின் இந்த சீர்குலைவு நடவடிக்கையை கேரள மக்கள் முறியடிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு நம்பிக்கை கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற முயற்சி

இந்தியா பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைக் கைகழுவி விட்டு, பாஜக மத்திய அரசாங்கம் இந்தியாவை அமெரிக்காவுடன் முற்றிலுமாக அதன் இளைய பங்காளியாக மாற்றிக்கொண்டு, உலகில் அதன் போர்த் தந்திர நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியும் செய்து கொண்டிருக்கிறது.  இது நாட்டின் நலன்க ளுக்கோ, நாட்டு மக்களின் நலன்களுக்கோ நல்லதல்ல.

கல்வி: டிஜிட்டல்  பிரிவினை வேண்டாம்

மத்தியக் குழு, பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி சம்பந்தமாக பல்வேறு மாநில அரசாங்கங்களிடமிருந்து வந்துள்ள அறிக்கைகளை ஆய்வு செய்தது. உள்கட்டமைப்பு வசதியின்மை, கணினி, திறன் பேசிகள் போன்ற உபகரணங்களின்மை முதலானவை மாணவர்களின் பெரும் பகுதியினரை டிஜிட்டல் மூலம் வகுப்புகளை கவனிப்பதற்கு இயலாமல் செய்துள்ளன. மத்திய அரசாங்கம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை, அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, உடனடியாக வாய்ப்பு வசதிகளை அளித்திட வேண்டும். மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்குப் போதிய நிதி உதவிகளை அளித்திட வேண்டும். இவற்றைச் செய்திடாமல் அனைவருக்கும் டிஜிட்டல் கல்வி என்பது சாத்தியமில்லை. டிஜிட்டல் மூலம் போதிப்பது என்பதும், தேர்வுகளை நடத்துவது என்பதும் சாத்தியமில்லை. நிச்சயமாக, டிஜிட்டல் கல்வி என்பது நேரடியாகக் கற்பிக்கும் முறைக்கு மாற்றாக இருக்க முடியாது.

மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிப்பு

கோவிட் 19-கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பாகவே நாட்டில் பொருளாதார நிலைமை மந்தத்தை நோக்கிச் சென்றுவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக சமூக முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சி, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதற்கு மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. அப்போதுதான் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும், அதன் மூலம் உள்நாட்டுத் தேவைகள் அதிகரித்து, இந்தியப் பொருளாதாரமும் ஏற்றம் பெறும் என்று கூறிவந்தது. இவை மூடிய ஆலைகளைத் திறப்பதற்கும், நின்றுபோயுள்ள உற்பத்திகளை மீண்டும் இயக்குவதற்கும் வகை செய்திடும் என்றும் கூறியது. ஆனாலும், நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலில் மூழ்கியிருக்கிற மோடி அரசாங்கம், மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கும் விதத்திலான நடவடிக்கைகளையே தொடர்ந்தது. இவற்றின் விளைவாக பொருளாதார மந்தம் மேலும் ஆழமாகியுள்ளது.      

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, (-)4 சதவீதத்திற்கும் (-)7 சதவீதத்திற்கும் இடையே வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. இது, மக்களை மேலும் கொடூரமான முறையில் சுரண்டுவதற்கும், அவற்றின் விளைவாக அவர்கள் துன்ப துயரங்கள் அதிகரிப்பதற்கும் இட்டுச் செல்லும். பெட்ரோலியப் பொருள்க ளின் விலைகளைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பது, பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பது, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயர்ந்துகொண்டிருப்பது மக்களின் சுமைகளை மென்மேலும் அதிகரித்திருக்கின்றன. மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கு உதவிடவும் இல்லை, மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை அளித்திடவும் இல்லை. இந்நடவடிக்கைகள் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும், பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை மிகவும் அசிங்கமான முறையில் மேலும் அதிகரிப்பதற்குமே இட்டுச் சென்றிருக்கின்றன.

விவசாயத்தை நிர்மூலமாக்கிடும் ஆபத்தான சட்டங்கள்

இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தை நீக்கியும், வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை (Agricultural Produce Marketing Committee Act) உணவு தானியங்களை மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்குக் கட்டுப்பாடு எதுவுமின்றி கொண்டுசெல்வதற்கு வகைசெய்யும் விதத்தில் திருத்தங்கள் செய்தும், கொண்டுவந்திருக்கும் அவசரச்சட்டங்களை மத்தியக் குழு கண்டித்துள்ளது. இது, எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திடும். குறைந்தபட்ச ஆதார விலை மூலமாகத் தற்போது விவசாயிகள் பெற்றுவரும் குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இவை மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டன. நாட்டில் தற்போது ஆங்காங்கே இருந்துவரும் பொது விநியோக முறையையும் இவை ஒழித்துக்கட்டிவிடும். இந்நடவடிக்கைகள், முக்கியமாக, பெரும் பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைகளை முழுமையாக அபகரித்திட வழிவகுத்துத் தந்திடும். இவை, இந்தியாவின் விவசாயத்தை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையாகும்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்கள்

பீகார் மற்றும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்திட பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும். மாநில அளவி லான மூன்று இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகியவை இந்தக் குறிக்கோளை எய்துவதில் ஆர்வத்துடன் உள்ள அனைத்து சக்திகளுடனும் ஒத்துழைத்திட தயாராயிருப்பதாகக் கூட்டாக அறிவித்திருக்கின்றன. பாஜக இத்தேர்தலுக்காக மிகவும் பரபரப்புடன் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. தன்வசம் உள்ள அனைத்து வாய்ப்பு வசதிகளையும் பயன்படுத்தி டிஜிட்டல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் உதவியுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை டிஜிட்டல் பிரச்சாரம் மூலமாகவும் மற்றும் டிஜிட்டல் வாக்களிப்பு மூலமாகவும் நடத்திட முன்மொழிவு அளித்திருப்பதை எதிர்க்கின்றன. இது, ஜனநாயகத்தை அரித்து வீழ்த்திடும் விதத்தில் தேர்தல் நடைமுறையில் பெரும்பான்மையான மக்கள் பங்கேற்பை ஒழித்துக்கட்டிவிடும். மேலும், இத்தகைய பிரச்சார முறைகள் மிகப்பெரிய அளவில் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப் படுவதற்கு வழிவகுத்துத்தந்துள்ளன என்பதையே உலக அளவிலான அனுபவங்கள் மெய்ப்பித்திருக்கின்றன.

இது, மக்களின் கட்டளையைச் சிதைத்து சின்னாபின்னப் படுத்திவிடும். மக்களால் நேரடியாக வந்து வாக்களித்திடவும், முறையான பிரச்சார நடவடிக்கைகள் மூலமாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சம அளவில் போட்டி போடக்கூடிய நிலையை உருவாக்கி, முறையாகத் தேர்தல்களை நடத்திட முறையான நிலைமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில்,  மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதும் இயல்பான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக சூழ்நிலைமைகளை உருவாக்கித்தருவதும்  தேர்தல் ஆணையம் மற்றும் நிர்வாகத்தின் பணியாகும். பாஜக-வினால் பண பலம் மிகப்பெரிய அளவில் துஷ்பிர யோகம் செய்யப்படுவதைக் கணக்கில் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்களின் ஆபத்துக்க ளைச் சுட்டிக்காட்டியும். அவை ஜனநாயக தேர்தல் நடைமுறை களைச் சிதைப்பதைச் சுட்டிக்காட்டியும், மக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்ப தைச் சுட்டிக்காட்டியும்  உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த மனுக்களின்மீது தீர்ப்பினைப் பெற நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இந்தத் தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் எந்தத் தேர்தல்களுக்கு முன்பும் விநியோகிக்கப்பட அனுமதிக்கக் கூடாது.

 ஜம்மு-காஷ்மீர்

அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு சுமார் ஓராண்டு கழிந்த பின்னரும், மிகப்பெரிய அளவில் அனைத்து பிரபலமான அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வர்கள் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் வழக்கமான சமூக-பொருளாதார வாழ்க்கை சீர்குலைந்திருப்பது தொடர்கிறது. அவர்களின் தகவல் தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பது தொடர்கின்றன. நாடு முழுவதும் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டு காலமாக அரசியல் முடக்கமும் உள்ள நிலையில் மத்திய அரசாங்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெளியார் சொத்துக் களை வாங்க அனுமதித்திடவும் அதன் மூலம் மக்களின் சமூக வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய விதத்திலும் அங்கேயிருந்துவந்த குடியேற்றச் சட்டத்தை மாற்றி இருக்கிறது. மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதி சக்திகள் என்று முத்திரை குத்தி, அவர்களுக்கு எதிராக அரக்கத்தனமான சட்டங்களின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதும் தொடர்கின்றன. இவ்வாறு அங்கே ஆழமான முறையில் மக்களின் ஜனநாயக உரிமை கள் மற்றும் குடிமை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள ஊடகக் கொள்கை, அங்கே எது வெளியிடப்பட வேண்டும் அல்லது கூடாது என்பது குறித்து அதிகார வர்க்கம், பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டிற்கு சட்ட அங்கீகாரம் அளித்திருக்கிறது. இதன்மூலம், அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. 2019 ஆகஸ்டிலிருந்து கைது செய்யப்பட்ட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அங்கே தகவல் தொடர்புகள் முழுமையாக மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கை அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மத்தியக் குழு கோருகிறது. இவை, கொரோனா வைரஸ் தொற்றை வலுவாக எதிர்த்து முறியடிப்பதற்கும், அவதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் அளித்திடவும் அவசியமாகும். 

தமிழில் : ச.வீரமணி

 

;