செவ்வாய், அக்டோபர் 27, 2020

கட்டுரை

img

இந்தியாவும் மாமேதை மார்க்சும்....

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தனது நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்புகளையும், தியாகத்தையும் நினைவு கூர்வதோடு,  இந்தியாவின் சமூக – அரசியல் நிலைமைகள் குறித்த மாமேதை மார்க்ஸ் அவர்களின் கண்ணோட்டத்தை மீண்டும்நினைவில் கொள்வதும், அது எவ்வாறு இன்றைக்கும் மிகச் சரியாகபொருந்துகிறது என்பதையும் கூட நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சமூக கட்டமைப்பு குறித்து
“இந்திய கிராமங்கள் தோற்றத்தில் எளிமையான உள்ளூர் சமூகங்களாக, தீங்கற்றவையாக  காணப்பட்டாலும் கூட முதலாளித்துவச் சுரண்டலுக்கு வாய்ப்பளிக்கும் அடித்தளமாகவே அவை இருக்கின்றன. அவை சிறியதொரு வட்டத்திற்குள் மனித மனங்களை அடக்கியே வைத்திருக்கின்றன. மரபு வழியான விதிகளுக்கு கீழ்அதனை அடிமைப்படுத்தியும் வைத்திருந்தன. அனைத்து மாண்புகளையும், வரலாற்று ஆற்றல்களையும் நிராகரித்து வைத்திருந்தன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்த சிறிய சமூகங்கள்சாதியப் பாகுபாடுகளாலும் அடிமைத்தனத்தாலும் மாசுபடுத்தப்பட்டிருந்தன.” என இந்திய உள்ளூர் சமூகங்கள் குறித்து சொல்கிறார் மார்க்ஸ்.

 “இத்தகைய நிலைமைகள் மனிதனை சூழல்களின் தலைவனாக உயர்த்துவதற்கு பதிலாக, புறச் சூழல்களுக்கு கட்டுப்பட்டவனாக அவனை மாற்றி விட்டது. இதனால் சுயமாக வளரக்கூடிய ஒரு சமூகஅரசை, ஒரு போதும் மாறாத இயல்பான தலைவிதியாகவும் மாற்றிவிட்டது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது” என மிகத் துல்லியமாக இந்திய சமூக கட்டமைப்பு குறித்த தனது வர்ணனையை முன்வைக்கும் மாமேதை மார்க்ஸ் அவர்கள் மேலும் சொல்கிறார். “புதியதாக எந்தப் பலனையும் பெறாமலே தனது பழைய உலகத்தையும் இழந்து நிற்கும் இந்துஸ்தானம் தனது தொன்மையான பாரம்பரியங்களிலிருந்தும், கடந்த கால வரலாற்றிலிருந்தும் தொடர்பை அறுத்துக் கொண்டிருக்கிறது.” இந்தியா குறித்து மார்க்ஸ்அவர்களின் மதிப்பீடு இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்துவதையும், சாதிய, மத, பழமைவாதச் சிந்தனைகளிலிருந்து விடுபட முடியாததொரு சிக்கலான சமூகமாகவே இந்தியா இன்றைக்கும் நீடிப்பதையும் நாம் உணர முடியும். இத்தகைய பழமைவாதச் சிந்தனைகள் எனும் வாகனத்தின் மீதே இன்றைய ஆட்சியாளர்களும் தங்கள் சுகமான பயணத்தை தொடர்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பொருளாதார கட்டமைப்பு குறித்து
“முதலாளித்துவம் இந்தியாவை ஒரு சரக்கு சந்தையாகவே கருதி செயல்படுகிறது. அத்துடன் நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறையையும் தீவிரமாக பயன்படுத்தி விவசாயிகளையும் கடுமையாகச் சுரண்டுகிறது. முதலீடு எதனையும் செய்யாமலும், பொருட்களுக்கான விலையினை கொடுக்காமலும் கச்சாப் பொருட்களை பெறுவதில் அது ஈடுபடுகிறது. இத்தகைய நடைமுறைகளால் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியாளராக இருந்த இந்தியா பிறகு கச்சாப் பொருட்களின் ஏற்றுமதியாளராகவும், உற்பத்தி பொருட்களின் இறக்குமதியாளராகவும் மாறியது.” என தனது மதிப்பீட்டை முன்வைக்கிறார் கார்ல்மார்க்ஸ். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்த அவரின் அன்றைய விமர்சனம் இன்றைய முதலாளித்துவ – சர்வதேச நிதிமூலதன கூட்டணி ஆட்சியாளர்களுக்கும் மிகச் சரியாகவே பொருந்துகிறது. என்னதான் தற்சார்பு பொருளாதாரம் என இன்றைய ஆட்சியாளர்கள் தம்பட்டம்அடித்தாலும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சந்தையாக இந்தியாவை மாற்றுவதிலேயே ஆட்சியாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள மார்க்ஸ் நமக்கு பெரிதும் உதவுகிறார்.  அதனடிப்படையிலேயே பேராசிரியர் விஜயபிரசாத்,  ”இன்றைய கார்ப்பரேட் மூலதனம் என்பது “தளங்களின் முதலாளித்துவம் - Platform Capitalism” எனும் புதியதொரு வகைமையை உருவாக்கியிருக்கிறது” எனவும் வரையறை செய்கிறார். 

டிஜிட்டல் வளர்ச்சி குறித்து
“இந்தியாவிற்கான நவீன வளர்ச்சியின் தேவையைக் கருதி, நவீனமயமாக்கல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை. மாறாக தங்களின் சுரண்டலின் தேவைக்கு ஏற்ற வகையில் மட்டுமே அவர்கள் செயல்பட்டதால், அவர்களுடைய நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் அரைகுறையாகவும், முழுமையற்றதாகவும் அமைந்திருந்தன” எனும் மார்க்சின் வரிகளை படிக்கும் போது, ஏதோ அவர் இன்றைய “டிஜிட்டல் இந்தியா” குறித்துதான் எழுதினாரோ என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் மார்க்ஸ் “மூலதனம் எடுக்கும்நடவடிக்கைகள் அனைத்தும் சாதாரண மக்களின் வாழ்வில் விடிவுஎதையும் ஏற்படுத்தாது என்பதோடு, தனிப்பட்ட நபர்களை இரத்தம்,அழுக்கு ஆகியவற்றின் ஊடே இழுத்து வருவதற்கும், துன்ப துயரங்களுக்கும் இழிவுக்கும் ஆட்படுத்துவதற்கும் காரணமாக இருக்கும்.” எனவும் எழுதுகிறார். அவரின் இத்தகைய எழுத்துக்களின் வழியாக இன்றைய புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மக்களின் துயரங்களையும், மறுபுறத்தில் கார்ப்பரேட்டுகளின் அபாரமான வளர்ச்சியையும் நம்மால் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.   

மார்க்ஸ் வழிகாட்டுகிறார்
மேற்கண்ட மார்க்சியக் கண்ணோட்டத்தின் புரிதலில், சமூக, பொருளாதாரத் தளங்களில் தனது காத்திரமான பங்களிப்புகளை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்த நூறாண்டுகளாக இந்தியாவிற்கு அளித்திருக்கிறது. இன்னமும் தொடர்ந்து அளிக்கும். இந்தியாவின் சமூக – பொருளாதார விடுதலைக்கு அடிப்படையாக மார்க்சியம்மட்டுமே இருக்க முடியும் என்பதையும், இதர முற்போக்கு சிந்தனைகள்அதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டேகம்யூனிஸ்ட் இயக்கம் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதை புரிந்து கொள்ள முடியாமல் மார்க்சியம் என்பதுஅந்நிய மண்ணில் உருவான தத்துவம், இது இந்தியாவிற்கு பொருந்தாது என கூக்குரல் எழுப்புபவர்களுக்கான ஒரு சம்மட்டி அடியாகவே மாமேதை மார்க்ஸ் அவர்களின் மேற்கண்ட எழுத்துக்களும், இந்தியா குறித்த அவரின் கண்ணோட்டங்களும் உள்ளன. மேலும் அவை இன்றைக்கும் மிகப் பொருத்தப்பாடு உடையதாகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் உள்ளது. தனது நூற்றாண்டை கொண்டாடும் இந்த தருணத்தில் மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தின் துணைகொண்டு, பழமைவாதச் சிந்தனைகளை உடைத்து, தனியுடமையை தகர்த்து தனது பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உறுதியோடு தொடரும் என்பதோடு தனது இலக்கையும் நிச்சயமாக அடைந்தே தீரும்.

===ஆர்.பத்ரி===

;