வியாழன், செப்டம்பர் 24, 2020

கட்டுரை

img

அவர்கள் எப்போதும் இந்தியாவின் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் - ..பெரணமல்லூர் சேகரன்

சுதந்திரத்துக்காகவும் முழு விடுதலைக்காகவும் இந்திய மக்களின் வீரம் செறிந்த போராட்டங் களை வெறுமனே நினைவு கூர்வது மட்டும்  இன்றைய தேவை அல்ல. அதற்கு மேல் இந்தப் பாரம்பரியத்திலிருந்து இந்திய விடுதலை நிறைவேற்றாத பணிகளை முடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அதிலிருந்து ஊக்கத்தையும் வலிமையையும் பெறுவது அவசியம். 1757ல் நடந்த பிளாசி யுத்தத்தைத் தொடர்ந்து இரு நூற்றாண்டுகளுக்கு பிரிட்டிஷ் காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க பல்வேறு வழிகளில் புரட்சிகள் ஒன்றிணைந்தன. எனினும் இந்திய  ஆளும் வர்க்கங்கள் வேண்டுமென்றே பல்வேறு  புரட்சிகளை மறைத்து விட்டு தமது நலனுக்கானவற்றை மட்டுமே வெளிச்சமிட்டுக் காட்டின. இந்தக் காவியப் போராட்டத்தை நேர்மையாகவும், விருப்பு வெறுப்பின்றியும் கூறுவதுதான் நாம் நம்மைப் புரிந்து கொள்ளவும், பாராட்டைப் பெறாத வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வும், இதுவரை நிறைவேறாத பணிகளை முடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான ஒரே வழியுமாகும்.

மகாத்மா காந்தியின் கொலையாளிகள் உட்பட இந்தக் காவியப் போராட்டத்தின் பாரம்பரியத்தை தங்களுடையதாக வரித்துக்கொள்ள முயலும் நிலையில் இன்றைய கால நிலை  உள்ளது. வேறு சில தரப்புகளோ விடுதலைப்  போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கு குறித்து மீண்டும் மீண்டும் கூறப்படும் அவதூறுகளை வெளிப்படுத்தும் தூற்றல்கள் விடுதலைப் போராட்டத்தில் அற்பப் பங்கையோ அல்லது எதிர் விளைவுகளை  ஏற்படுத்திய பங்கையோ வகித்த பகுதிகளிலிருந்து வருவது வியப்புக்குரியதல்ல. எண்ணற்ற மக்கள் தேச சுதந்திரத்திற்காக தங்கள் இன்னு யிரைத் தியாகம் செய்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சிறை வைக்கப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் அந்தமான் சிறையின் சிறிய அறைகளில் ஆயுட் கைதிகளாக  அடைக்கப்பட்டனர்.

பகத்சிங்கின்  சக தோழர்களான பண்டிட் கிஷோர் லாலும், சிவவர்மாவும் அந்தமான் கொடுஞ்சிறைக்கு அனுப்பப்பட்ட போது அங்கு கம்யூனிஸ்ட்  இயக்கத்தில் இணைந்து அவர்களது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தனர்   என்பது குறிப்பிடத்தக்கது. பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திர  இந்தியாவில்  இந்திய மக்களின்  உண்மை யான முழுமையான விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனிஸ்ட்   இயக்கத்தில் இணை ந்தனர். ஏனெனில் கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு, சுதந்திரம்  என்பது  அரசியல் விடுதலை மட்டுமல்ல. அரசியல் சுதந்திரமானது பசி, வறுமை,பாதுகாப்பின்மை ஒழிக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கிறது. 1917ன் ரஷ்யப்புரட்சி தீவிரமான விளைவை ஏற்படுத்தியது. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு ஆகியவை ஆங்கிலேய ஆட்சியால் தொடுக்கப்பட்டன. சம்மந்தப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பரந்த காங்கிரஸ்  இயக்கத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே முழு சுதந்திர கோரிக்கையை எழுப்பினர். இடதுசாரிகள் மற்றும் முற்போக்காளர்களின் அழுத்தம் காரணமாக காங்கிரஸ் தலைமை இறுதியில் முழு சுதந்திரம் கேட்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, 1930ல் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது முக்கியமான கட்டம்  ஆரம்பித்தது. தண்டி உள்ளிட்ட இடங்களில் உப்புச் சத்யாகிரகம் நடத்தப்பட்டு சுதந்திரப் போர் உத்வேகம் பெற்றது. 1931 மார்ச் 23ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்டது இளைஞர்கள் மத்தியில்  எழுச்சி  ஏற்பட்டது. சோஷலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த பகத்சிங்கின் மரண சாசனம் பெரும் முக்கியத்துவம் பெற்றது. சுதந்திரத்திற்காகப் போரிடவும், ஒரு சோஷலிசப் புரட்சிக்காகவும் மக்களைப் பங்கேற்கச் செய்வதன் அவசியத்தை அவரது மரண சாசனம் வலியுறுத்தியது. காந்தி இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து ஒத்துழையாமை இயக்கம் திரும்பப்பெறப்பட்டது.

1929-33ல் ஏகாதிபத்திய உலகம் திணறிக் கொண்டி ருந்தது. ஒத்துழையாமை இயக்கம் திரும்பப்பெறப்பட்டதால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை, சோஷலிசத்தின் தாக்கம்  ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, தெளிவான இடதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியது. தேசிய இயக்கத்தைத் தீவிரப்படுத்தியது. 1920லேயே அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இத்தகைய வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் தேசிய விடுதலை இயக்கத்திற்குக் கூடுதல் பலத்தை அளித்ததோடு காங்கிரஸ் கொள்கைகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன.1936ல் ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவரானார். அவரும் சோஷலிச முழக்கத்தை பிரபலமாக்கினார். இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தின் உள்ளடக்கம் விரிவடைகிறது.

1940 அக்டோபரிலிருந்து காங்கிரஸ் தனிநபர் சத்தியாகிரகத்தைத் துவக்கியது. 1941 மத்தியில் 20,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியவாதிகளிலிருந்து கம்யூனிஸ்டு கள் வரை அனைத்து தேசியவாதிகளும் அதில் இருந்தனர். ஆனால் ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அதில் இல்லவே இல்லை. இதுதான் கோல்வால்கர் மற்றும்  அவரது தொண்டர்களின் தேசபக்தி. பிறகு 1942 ஆகஸ்ட் 9ல் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் மக்கள்  எழுச்சிக்கு இட்டுச் சென்றது. அதைத் தொடர்ந்து  அரசு கடும் அடக்குமுறையை ஏவியது. அரசின் கணக்குப்படியே நாடு முழுவதும் 10600 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாயினர்.

1945ல் இந்திய தேசிய ராணுவத்தின் கைதிகளுக்கு ஆதரவாகவும், 1946 முற்பகுதியில் ராயல் இந்திய கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாகவும் ஏற்பட்ட எழுச்சியில் ஆர்.எஸ்.எஸ். எங்கும் காணப்படவில்லை. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை பெறுவதையே மற்ற பிரிட்டிஷ் விசுவாசிகளைப் போல கோல்வால்கர் நம்ப மறுத்ததாக தமது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கில் எழுதியுள்ளார். அவர்களைப் போலவே அவர் “அவர்கள்  அரசைக் கொடுத்துவிட்டுச் செல்லும் பேதைகள். இரண்டு மாதங்களுக்குக் கூட  ஆள முடியாது. கூப்பிய கைகளுடன் பிரிட்டிஷிடம் தவழ்ந்து சென்று தயவுசெய்து திரும்பி வாருங்கள் என்று  அவர்கள் கூறுவார்கள்” என்று கூறினார்.

1946 இறுதியிலும் 1947லும் நாட்டில் பரவிய கலவரங்களில் முஸ்லிம்களைக் கொல்லுமாறு வெளிப்படையான அறைகூவல் விடுத்தது ஆர்.எஸ்.எஸ். எங்கெல்லாம் படுகொலை நடந்தனவோ அங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின் சில மாதங்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எதிராக 600-700 வழக்குகள் பதியப்பட்டன. 1947 டிசம்பர் 7-8 தேதிகளில் கோல்வால்கர் தில்லியில் கூட்டங்கள் நடத்தினார். அவற்றில் சுதந்திர இந்தியாவின்  அரசு  ‘இந்தியரல்லாது’ இருப்பதாகவும் சாத்தானாக  இருப்ப தாகக் குற்றம்சாட்டி முஸ்லிம்களுக்கு எதிராக ‘கொரில்லாப் போர்’ நடத்த அழைப்பு  விடுத்தார். சங் பாகிஸ்தானை அழிக்கும் என்றும் வழியில் யாராவது வந்தால் அவரையும் அழித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

1947 டிசம்பர் 8ல் கோல்வால்கர் கூறிய வார்த்தைகள்:-

“.......யாராவது ஆர்.எஸ்.எஸ். வழியில் நின்றால் அவர்களையும் அழித்துவிடுவார்கள்.” அந்த ‘யாராவது’ என்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.தளராமல் மனிதாபிமானத்துக்காகப் போராடி ய அவர் ஜனவரி 13 முதல் 18 வரை தில்லியில் அமைதிக்காக உண்ணாவிரதம்  இருந்தார். தில்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் மகாசபை யினரும் பொதுக் கருத்தின் புதிய திருப்பத்தின் அடிப்படை யில் ‘அனைத்து வகுப்பினருக்கிடையில் அமைதி, ஒற்றுமை, மற்றும் சகோதரத்துவத்துக்கான’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி வந்தது. அது நடந்தால்தான் காந்தி தமது உண்ணாவிரதத்தைக் கைவிடுவார். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு ஏற்பட்ட  இந்த  அவமானத்தைத் தாங்க முடியவில்லை. ஜனவரி 30 1948 அன்று காந்தி ஆர்.எஸ்.எஸ்.ஸின் சுயம்சேவக் வி.டி.சாவர்க்கரின் சீடருமான நாதுராம் கோட்ஸேயால்சுட்டுக் கொல்லப்பட்டார்.

1948 பிப்ரவரி 4 அன்று  இந்திய அரசு  ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியது.”ஆர்.எஸ்.எஸ்.ஸின் உறுப்பினர்கள் வன்முறை, திருட்டு, கொள்ளைளை கொலைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சட்ட விரோதமாக ஆயுதங்களையும், வெடி மருந்து களையும் சேகரித்துள்ளனர். எனினும் மறுக்கத் தக்க ஆபத்தான செயல்பாடுகள் தடையின்றித் தொடர்ந்து சங்கின்  (ஆர்.எஸ்.எஸ்) செயல்பாடுகளால் துவக்கி ஊக்குவிக்கப்பட்ட வன்முறை பலரை பலி வாங்கியுள்ளது.”

இவ்வாறு இந்தியச் சுதந்திரப் போரில் தேச துரோகி களாகத் திகழ்பவர்கள் ஆர்.  எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரத்தினர். ஆனால் இந்நாட்களில்  ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மமதையுடன் அவர்களுக்கு எதிராகப் பேசினா லும் இயங்கினாலும் தேச துரோகிகளாக தூற்றுகின்றனர். தியாகத்தில் விளைந்த இந்தியச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பதும் அடுத்த கட்டத்திற்கு சுதந்திரத்தைக் கொண்டு செல்ல வேண்டியதும் காலத்தின் அவசியம் .
 

;