ஞாயிறு, அக்டோபர் 25, 2020

கட்டுரை

ஊரடங்கிலும் அடங்காத குடும்ப வன்முறை - உ.வாசுகி,

கொரனோவுக்கு  எதிரான போராட்டத்தை நடத்தும்போது இந்த பிரச்சனையெல்லாம் கவனிக்க முடியுமா என்ற கேள்வி வரலாம். ஆனால் நிச்சயமாக கவனிக்க வேண்டும்.

கொரனோ வைரசுக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் நாம் இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஊரடங்கு உத்தரவு அல்லது வீடடங்கு உத்தரவு என்பது அமலில் இருக்கக்கூடிய இந்த நிலைமையில் குடும்ப வன்முறை புகார்கள் அதிகரித்து இருக்கிறது என்பதுதான் அது. உண்மையில் வந்திருக்கும் புகார்களைவிட அதிகமான அளவில் தான் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். உலகத்தின் பல பகுதிகளில்  ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. பெரும்பாலான நாடுகளில் குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து உள்ளது. ஆப்பிரிக்கா, மேற்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள்,ஜெர்மனி என பல்வேறு நாடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்து இருப்பதாக விவரங்கள் வருகின்றன. 

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் குடும்ப உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் இல்லை. ஆணாதிக்கம் என்பது தான் குடும்பத்தின் மையக்கருவாக இருக்கிறது. 24 மணி நேரமும் குடும்ப உறுப்பினர்கள் ஒரே வீட்டில், அதுவும் சிறிய வீடாக இருந்தால் பத்துக்குப் பத்தில் ஒருவரோடு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு இருக்கக்கூடிய நிலை நிச்சயமாக மூச்சடைக்கும் சூழ்நிலை தான். அது தவிர வீட்டில் இருப்பவர்கள் வெளியில் வேலைக்குப் போக முடியாததால் வருமானம் இல்லை. ஆகவே வருமானம் இல்லை என்ற நிலைமை கூட குடும்ப வன்முறைக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைகின்றது.  ஆணாதிக்கம் மையக்கருவாக இருக்கும் சமூக அமைப்பில், அதைச் சுற்றி கட்டமைக்க கூடிய சமூக அமைப்பில் குடும்ப உறுப்பினர்கள் கூடுதலாக நேரம் செலவழிக்கும் போது இந்த மாதிரியான பிரச்சனைகள் அதிகரிக்கிறது.

சாதாரண காலமும் தற்போதைய நிலையும் 
குடும்ப வன்முறை சாதாரணமான காலங்களில் நடக்கும்போது இரண்டு முக்கியமான பிரச்சனை உருவாகும். அசாதாரணமான சூழ்நிலையில் வேறுபாடுகள் இருக்கும்.
1. சாதாரண காலங்களில் கணவன் அல்லது மனைவி அல்லது இரண்டு பேருமே வேலைக்கு செல்வார்கள். அப்போது அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்ளும் போது வன்முறை நடப்பதற்கான காலம் குறைவானதாக இருக்கும். மாலை நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு அல்லது குடிக்காமலும் வந்து வன்முறையில் ஈடுபடலாம். ஆனால் இன்று 24 மணி நேரமும் ஒன்றாக இருக்கும்போது வன்முறைக்கான அவகாசம் கூடுதலாகிறது.

2. சாதாரண காலங்களில் வன்முறை நடக்கும்போது கணவன் அல்லது கணவர் உறவினர்கள், மாமனார், மாமியார் அல்லது இதர உறவினர்கள் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றால் உடனடியாக பெண்கள் பக்கத்து வீடு அல்லது எதிர்வீட்டிற்கு அல்லது அம்மா வீட்டிற்கு போக முடியும். தன்னுடைய மன பாரங்களை இறக்கி வைத்து ஆறுதல், தேறுதல் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வர முடியும். ஆனால் இன்று இருக்கும் சூழலில் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. எதிர்வீடு, பக்கத்து வீடு என்றே போக முடியாத நிலையில் அம்மா வீட்டிற்கு எப்படி போக முடியும்? அதனால் மனப்புழுக்கம், மன உளைச்சல் என்பது தொடர்ச்சியாக அந்தப் பெண்ணை தின்று கொண்டே இருக்கிறது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.  ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் குறைவாகத் தான் எடுக்க முடியும். அந்த எல்லைக்குட்பட்டாவது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

181 செயல்படட்டும்
பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உதவிக்கரம் நீட்டுவதற்கு ஹெல்ப்லைன் 181 எண் உள்ளது. 181 செயல்படக்கூடிய சேவையாக மாற்றவேண்டும் . அதற்கு பொருத்தமான ஊழியர்களை நியமிக்க வேண்டும். 181 எண் இருக்கிறது, பாதிக்கப்பட்ட பெண்கள் எப்போது வேண்டுமானாலும் போன் செய்யலாம் என்று அரசு கூடுதலாக ஊடகம், தொலைக்காட்சி மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும். 

அதேபோல, கொரோனா வைரஸ் சம்பந்தமாக பல செய்திகள் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. அதே அந்த அளவுக்கு சமமான செய்தியாக இல்லையென்றாலும் கூட, குடும்ப வன்முறை என்பது தண்டனைக்குரிய குற்றம் இதை செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பக்கபலமாக நிற்கும் என்று நம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகள் - குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தக்கூடிய செய்திகளை தொடர்ச்சியாக அரசு வெளியிட வேண்டும். இதுதான் பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். தேவைப்பட்டால் தன்னார்வ அமைப்புகளை, பெண்கள் அமைப்புகளை நிச்சயமாக இது போன்ற உதவிகள் செய்வதற்கு அரசு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
கொரனோ வைரஸ் என்று சொல்லும்போது அது உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்பு என்பதோடு ஊரடங்கு உத்தரவினால் வரக்கூடிய பொருளாதார பாதிப்பு மட்டும் தான் முன்னுக்கு வருகிறது. ஆனால் இந்த பிரச்சனைக்கும் வேறு சில கடுமையான பக்க விளைவுகள் இருக்கின்றன. அந்தப் பக்க விளைவுகளில் ஒன்றுதான் குடும்ப வன்முறை. கொரனோவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தும்போது இந்த பிரச்சனையெல்லாம் கவனிக்க முடியுமா என்ற கேள்வி வரலாம். ஆனால் நிச்சயமாக கவனிக்க வேண்டும்.

கூகுள் சர்ச் என்ன சொல்கிறது?
உலகளவில், சில நாடுகளில் பெண்ணின் கணவர் அல்லது இணையர் வன்முறை மூலமாக கொல்வதற்கு முயற்சிக்கிறார்கள்; நாம் எப்படி தப்பிக்கலாம் என்று ‘கூகுளில் தேடக்கூடிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய இப்பிரச்சனையை இந்தியாவும் கையாள வேண்டியுள்ளது. தமிழக அரசும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். 

மேலும், கொரோனா துயரத்தில் நோயாளிகளை எதிர்கொள்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார துறையில் பணிபுரிய கூடியவர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள், அரசு ஊழியர்கள் கிராம சுகாதார அலுவலர்கள் அனைவரும் மிகப்பெரிய கடும் சூழலைச் சந்தித்து வருகிறார்கள். சில மாநிலங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹெல்ப்லைன், மருத்துவர்கள் போகும் போது அங்கிருக்கும் மக்கள் விஷயம் தெரியாததால் உதவிக்கு வருபவர்களை அடிப்பது, மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. முக கவசம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அநேகமாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியாளர்களுக்கு கூட குறைந்தபட்சம் மாஸ்க் செட்டாவது கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் மிகப்பெரிய கேள்விக் குறியாகவே இன்றும் உள்ளது.

எனவே, உலகளாவிய முறையிலும், இந்திய அளவிலும் கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பெண்களும், குழந்தைகளும் அதிகபட்ச பாதிப்பை பல தளங்களில் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, ஊரடங்குக்கு பின்பும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
காணொலி தொகுப்பு:  ஜி.ராணி


 

;