சனி, செப்டம்பர் 19, 2020

என்ன சொல்லியிருக்காங்க

img

அன்றும், இன்றும், என்றென்றும்... அறிவுக்கடல்

இன்று நாம் பார்ப்பதைப்போன்ற லாக்  டவுன் கட்டுப்பாடுகள் இதற்கு முன்பே இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.... ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்பு...! ஆம்! 1896இல் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் பாம்பே பிரசிடென்சியில் பியூபானிக் பிளேக் தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டபோது! எர்சினியா பெஸ்ட்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கி.பி.541லிருந்து உலக மக்களைக் கொன்று குவித்து, 1960இல்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

541-42 இரண்டாண்டுகளில் ஐரோப்பா, மேற்காசியாவில் தாக்கியபோது 10 கோடிப்பேரை பலிவாங்கியது. 1346-53 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையில் 40-50 சதவீதம் வரை பலிவாங்கிய கருப்புச் சாவு என்று பெயரிடப்பட்ட தொற்றும் இதே நோய்தான். 541-767 வரை முதல், 1346-1830 வரை இரண்டாம், 1855-1960 வரை மூன்றாம் பிளேக் பெருந்தொற்று என்று பெயரிடப்பட்ட இந்நோய் ஏறத்தாழ 20 கோடி மக்களைக் காவு வாங்கியது. அப்படியான கொடூர நோய் அப்போதுதான்  இந்தியாவிற்குள் நுழைகிறது. 30 ஆண்டுகளுக்கு நீடித்து சுமார் 1 கோடிப் பேரை இது கொன்றது. ஆனால், இந்தியாவில் பலியானவர்கள் இரண்டே கால் கோடிக்கும் அதிகம் என்றும், ஆங்கிலேய அரசு குறைத்துக் கூறியது என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. அப்பேற்பட்ட நோயைத் தடுக்க ஆங்கிலேய அரசும் நடவடிக்கைகளை எடுத்தது.

அக்காலத்தில், துறைமுகங்கள் வழியாகத்தான் வெளி நாடுகளிலிருந்து நோய்  பரவும் என்பதால், துறைமுக நகரங்களில் இத்தொற்றுக்கான சோதனைகள் தொடங்கப்படு வதுடன், பிற நகரங்களுக்குப் பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் ஆங்கிலேய அரசால் மேற்கொள்ளப் படுகின்றன. இன்றைக்குப் போன்றே, வேறு நகரங்களுக்குப் பயணம் செய்ய அனுமதியில்லை, தனிமைப்படுத்துதல், அவசியமின்றி வெளியே வரக்கூடாது, இந்திய மருத்துவ முறைகளில் சிகிச்சையளிக்கத் தடை உள்ளிட்ட எல்லா கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டன. ஆனால், இந்த நடவடிக்கைகளை மத நம்பிக்கைகள்மீதான ஒடுக்குமுறை என்று  மதவாதிகள் எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினர்.

ஆனாலும், உட்புற நகரங்களுக்கு நோய்  பரவத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பல நகரங்களிலும், நோயைக் கட்டுப்படுத்து வதற்கான குழுக்களை அமைத்து, கட்டுப்பாடு களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. நோயைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியதற்காக, புனே ஸ்பெஷல் பிளேக் கமிட்டியின் சேர்மனான ஐசிஎஸ் அலுவலர் வால்டர் ராண் என்பவரையும், அவரது பாதுகாவலரான ராணுவ லெஃப்ட்டினெண்ட் ஆயெர்ஸ்ட் என்பவரையும், சாப்பேக்கார் சகோதரர்கள் என்று குறிப்பிடப்படும் தாமோதர் ஹரி சாப்பேக்கார், பால்கிருஷ்ண ஹரி சாப்பேக்கார் என்ற மதவாதிகள் சுட்டுக் கொன்றனர். குறிப்பிட வேண்டிய செய்தி என்னவெனில், மத்தியில் பாரதீய ஜனதா அரசு அமைந்தபின், 2018இல் தாமோதர் ஹரியை கவுரவிக்க அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

நோயால் மக்கள் இறப்பதைக் குறைக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பவர்களைக் கொலை செய்பவர்கள் எவ்வளவு அறிவாளிகள்? ஒன்றேகால் நூற்றாண்டாக அந்த ‘அறிவு’ குறையவே இல்லை. மதவாதிகள் அன்றும், இன்றும், என்றென்றும் மாறுவதேயில்லை என்பதைத்தான், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என்ற அவர்களது அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது!

;