சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

உலகைச் சுற்றி... உலகச் செய்திகள் ஒருவரியில்

70வயதாகும் இஸ்ரேலின் நீண்டகாலப் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாகு, ஊழல், மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஞாயிறன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் முதல் இஸ்ரேலியப் பிரதமர் இவர். ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள இவர், கடைசியாக நடந்த தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல், பிரதான எதிர்க்கட்சியோடு பேரம்பேசி கைகோர்த்துக் கொண்டு பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றினார்.கொரோனா பாதிப்பில் உலகின் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக இந்தியா இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து திங்களன்று1,38,845 என்ற எண்ணிக்கையுடன் கடுமையான நிலைக்கு இந்தியா நகர்ந்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஈரான் 1,35,701 என்ற எண்ணிக்கையுடன் 11வது இடத்தில் இருக்கிறது. 

                                                                                                                                                             +++++++++++++++++++++++++

பிரிட்டன் கடந்த இரண்டு மாதங்களில் முதல்முறையாக கடந்த 24 மணிநேரத்தில்தான் குறைந்த கொரோனா மரண எண்ணிக்கையை சந்தித்துள்ளது. ஞாயிறன்று 118 பேர் மரணம் என்ற நிலை எட்டப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மார்ச் 23 அன்று பிரிட்டனில் மரண எண்ணிக்கை வெறும் 74 ஆக இருந்தது. அன்று முதல் மே 23 வரையிலான காலத்தில் ஒவ்வொரு நாளும் 150 என்ற எண்ணிக்கையில் துவங்கி அதிகபட்சமாக 1172 பேர் மரணம் என்ற உச்சநிலைக்கு சென்றது. படிப்படியாக மரண எண்ணிக்கை குறைந்து வருவது பிரிட்டிஷ் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

                                                                                                                                                          +++++++++++++++++++++++++

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என நம்புவதாகநேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கய்வாலி தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளையும் சேர்த்து சமீபத்தில் நேபாள் அரசு தனது திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான வரை படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

                                                                                                                                                         +++++++++++++++++++++++++

கோவிட் 19 வைரஸ் எங்கிருந்து புறப்பட்டது, எப்படி மனிதர்களுக்கு பரவத் துவங்கியது என்பது குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்ய சர்வதேச அறிவியல் சமூகத்துடன் இணைந்து பணியாற்றிட சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். அதேவேளையில் இந்தப் பணி நேர்மையுடனும் ஆக்கப்பூர்வமானதாகவும், தொழில்முறை ரீதியாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு உலக சுகாதாரஅமைப்பு தலைமையேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

                                                                                                                                                           +++++++++++++++++++++++++

அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் கடந்த இரண்டு மாதங்களில்முதல்முறையாக கொரோனா மரணம் நாள் ஒன்றுக்கு 100 என்ற எண்ணிக்கைக்கு குறைவாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 24 அன்று 84 பேர் பலியானதாக மாகாண ஆளுநர் ஆன்ட்ரு குயுமோ தெரிவித்துள்ளார். இது ஒரு நற்செய்தி, இந்த எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி அடையும் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                                                                          +++++++++++++++++++++++++

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அதில் தனது நாடே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வு காணாத டிரம்ப் நிர்வாகம், விரைவில் அணு ஆயுத சோதனையை நடத்துவது குறித்து விவாதித்து வருவதாகசெய்தி வெளியாகியுள்ளது. சீனாவையும், ரஷ்யாவையும் உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம்கருதுவதாகவும், எனவே 1992க்குப் பிறகு முதல் முறையாக விரைவில் அணு ஆயுத சோதனை நடத்தலாம் என திட்டமிட்டிருப்பதாகவும் தி கார்டியன் ஏடு வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.ஐரோப்பாவில் மட்டும் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20லட்சத்தை தாண்டியிருக்கிறது. இதில் கடுமையான பாதிப்பு ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. 3.35லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் பலி எண்ணிக்கை கட்டுக்குள்ளேயே இருக்கிறது. ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

                                                                                                                                                        +++++++++++++++++++++++++

கோவிட் 19 பாதிப்பு மற்றும் ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் மோசடியான மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் இ-மெயில்களின் எண்ணிக்கை 600சதவீதம் அதிகரித்துள்ளது என 
தெரியவந்துள்ளது. அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் உட்பட 90 நாடுகளின் இ-மெயில்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு துறை தலைவர் இசுமிநகாமிட்சு தெரிவித்துள்ளார்.

                                                                                                                                                        +++++++++++++++++++++++++

முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த ஹாங்காங் தற்போது மக்கள் சீனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரே நாடு, இரண்டு கொள்கைகள் என்ற அடிப்படையில் ஹாங்காங் நிர்வாகம் நடக்கிறது. எனினும் அங்கு அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகள் தொடர்ந்து பிரிவினை நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங்கிற்கும் பொருந்தும் விதத்தில் மக்கள் சீனக் குடியரசு புதிய தேசியப் பாதுகாப்பு சட்டத்தை வரைவு செய்துள்ளது. இதற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கூப்பாடு போடத்துவங்கியுள்ளன. இந்நிலையில், இது முற்றிலும் சீனாவின் உள்நாட்டுப்பிரச்சனை என்றும் ஹாங்காங் மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு என்றும் சீனா பதிலளித்துள்ளது.
 

;