சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஆகஸ்ட் 10

கி.மு.30 - க்ளியோபாட்ராவின் மரணம் நிகழ்ந்தது. பேரழகு என்பதற்கு இன்றுவரை(2050 ஆண்டுகளாக!) முதலில் சுட்டப்படுபவர் எகிப்தின் அரசியான, இந்த ஏழாம் க்ளியோபாட்ராதான்! இவரது அழகைப் போலவே, இறப்பும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒன்று! கணவர் மார்க் ஆண்ட்டனியின் தற்கொலைக்குப்பின் சில(9 அல்லது 11) நாட்களில், ஒரு நாகத்தைக் கடிக்கவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. எப்போதுமே தன்னுடன் வைத்திருந்த நஞ்சுடைய சீப்பு(அல்லது கொண்டையூசி) ஒன்றால் தோலில் கீறிக்கொண்டு இறந்தார், கொல்லப்பட்டிருக்கலாம் என்பவையும் கூறப்படுகின்றன. எப்படியானாலும், அக்கால ரோமானிய வழக்கப்படி, போரில் தோற்றவர்களை இழுத்துச் செல்லும் அவமானத்தைத் தவிர்க்கவே அவர் இறந்தார். அத்தகைய தன்மானமும், வீரமும், அறிவும் கொண்டவர்தான் க்ளியோபாட்ரா! ஆணாதிக்கச் சமூகங்களில், பெண்களின் வெற்றி அழகால் சாதிக்கப்பட்டதாகவே சித்தரிக்கப்படுவதற்கு மிகச்சிறந்த உதாரணம் க்ளியோபாட்ராதான்! 

எகிப்தை பேரரசர் அலெக்சாண்டர் வெற்றிகொண்டபோது, அதை ஆள, தன் ஏழு பாதுகாவலர்களில் ஒருவரான தாலமியை நியமித்தார். அந்த மரபில், 12ஆம் தாலமியின் மகளான க்ளியோபாட்ராதான், எகிப்திய மொழியைக் கற்றுக்கொண்ட முதல் தாலமிய ஆட்சியாளர். அவர் சரளமாகப் பேசிய மொழிகள் 9 என்று கூறப்படுகிறது. கணிதம், தத்துவம், வானியல் ஆகியவற்றைக் கற்றுத்தேர்ந்திருந்ததுடன், அறிவில் சிறந்தவர்களுக்கு மதிப்பளித்து, அவையில்  நியமித்தவர் க்ளியோபாட்ரா. சீசருடன் வாழ்ந்ததாலும், அதன்பின் ஆண்ட்டனியைத் திருமணமே செய்துகொண்டதாலும், அழகால் மயக்கினார் என்ற செய்தி ஆக்டேவியனால் உருவாக்கப்பட்டது.

ரோமப் பேரரசு வேகமாக விரிவாக்கத்தை மேற்கொண்டிருந்த அக்காலத்தில், மத்தியதரைக்கடல் பகுதி நாடுகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில், எகிப்தின் சுதந்திரத்தைக் காப்பது அதன் அரசியின் கடமையாக இருந்தது. அதற்கு உதவியவர்கள் எதிர்பார்த்ததை அவர் செய்தார். அரசமரபையும், அரசையும் பாதுகாக்க, உடன்பிறந்தவர்களைத் திருமணம்கூடச் செய்துகொள்வது தாலமிய மரபில் எப்போதுமே நிகழ்ந்துள்ளது. க்ளியோபாட்ராவின் பெற்றோரே உடன்பிறந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுவதுடன், தன் தம்பிகளை க்ளியோபாட்ரா திருமணம் செய்தார் என்பதும், அங்கு இது ஏற்கப்பட்டதாக இருந்தது என்பதற்கான உதாரணங்கள். அறிவில் சிறந்து, அறிவார்ந்தவர்களைத் தன் அவையில் நியமித்து, அரசுக்கு ஆபத்து வந்த காலங்களில் அறிவுத் திறனால் முறியடித்து, போர்க்களத்தில் தலைமையேற்று, இறுதியில் தன் நாட்டின் சுதந்திரம் பறிபோகிற நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட ஓர் அரசியை, அழகிற்குள் சுருக்கியது, ஆணாதிக்க வக்கிரத்தின் உச்சம்!

==அறிவுக்கடல்==

 

;