உலகம்

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூலை 18

1743 -  உலகின் முதல் அரைப்பக்க செய்தித்தாள் விளம்பரம் அமெரிக்காவின் நியூயார்க் வீக்லி ஜர்னல் இதழில் வெளியானது. செய்தித்தாள் விளம்பரங்களும், செய்தித்தாளின் வரலாறு தொடங்கும்போதே தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட இடைவெளியில் இதழ்களை வெளியிடுவது வெனிசில்தான் முதன்முதலில் தொடங்கியது. வெனிசின் அரசு 1556இல் மாதந்தோறும் வெளியிடத் தொடங்கிய 'நோட்டிஸீ ஸ்க்ரிட்டி'(எழுதப்பட்ட அறிவிப்புகள்!) என்ற அரசின் அறிவிப்புகளை வெளியிடும் இதழுக்கு, அக்காலத்திய வெனிசின் சிறிய நாணயமான கெஸட்டா ஒன்று விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடுதல் அங்கிருந்து ஜெர்மனிக்கும், பின் ஹாலந்து உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவியபோது, கெஸட்டா என்பதிலிருந்து கெஸட் என்பதாகி, அரசின் அறிவிப்புகளை வெளியிடும் இதழ் கெஸட் என்றே ஆகியது. இதிலிருந்தே தொடக்கக்கால செய்தித்தாள்களும் கெஸட் என்ற பெயரைக் கொண்டிருந்தன.

17ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில்தான் செய்தித்தாள்(நியூஸ்பேப்பர்) என்ற பெயர் உருவானது. செய்தித்தாள்கள் உருவானதுமே, அவற்றின் முழுச் செலவையும் விலையாக வாங்குவதில் இருந்த சிரமங்களால், கட்டணம் பெற்றுக்கொண்டு விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம், விலையைக் குறைப்பதும் தொடங்கிவிட்டது. செய்தித்தாள்கள் வளர்ச்சியடைந்தபின், பொதுவாக அவற்றின் வருவாயில் 70-80 சதவீதம் விளம்பரங்களிலிருந்தும், எஞ்சிய பகுதி மட்டுமே விற்பனையிலிருந்தும் வருவதாக மாறியது. விளம்பரத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியில் வெளியிடப்படுபவை, வகைப்படுத்தப்பட்ட(க்ளாசிஃபைட் - தமிழ் இதழ்களில் வரி) விளம்பரங்கள் என்றும், செய்திகளுக்கிடையே வெளியிடப்படுபவை டிஸ்ப்ளே விளம்பரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வரி விளம்பரங்கள் பொதுவாக சிறிய அளவிலும், படங்கள் இன்றியும் குறைந்த கட்டணத்தில் வெளியிடப்படும்.

படங்கள், விரும்பிய வடிவ எழுத்துகள் ஆகியவற்றுடன் அதிகக் கட்டணத்தில் டிஸ்ப்ளே விளம்பரங்கள் வெளியிடப்படும். பின்னாளில், படங்களுடன் கூடிய க்ளாசிஃபைட் டிஸ்ப்ளே என்ற வகையும் உருவானது. டிஸ்ப்ளே விளம்பரத்தில்தான் 1743இல் முதல் அரைப்பக்க விளம்பரம் வெளியானது. முதல் முழுப்பக்க விளம்பரம் 1856இல்தான் வெளியானது. விளம்பரங்களை மக்கள் ஒதுக்கிவிடலாம் என்பதால், செய்தியைப் போன்றே எழுதப்பட்ட விளம்பரக் கட்டுரைகள் போன்றவை அட்வெர்ட்டோரியல் என்ற பெயரில் உருவாயின. எடிட்டோரியல் என்பது குறிப்பாகத் தலையங்கத்தைக் குறித்தாலும், பொதுவாக செய்திப்பகுதிகளைக் குறிப்பதால், அட்வர்ட்டைஸ்மெண்ட், எடிட்டோரியல் இரண்டையும் சேர்த்து அடவர்ட்டோரியல் என்ற சொல் 1917இல் உருவானது. வானொலி, தொலைக்காட்சியைவிட, இணையத்தின் பரவல், செய்தித்தாள்களின் விளம்பர வருவாயை மிகப்பெரிய அளவில் குறைத்துவிட்டது. 

===அறிவுக்கடல்=== 

;