புதன், அக்டோபர் 21, 2020

இந்தியா

img

மாட்டு சாணம் செல்போன் கதிர்வீச்சை குறைக்குமாம்: தேசிய காமதேனு ஆணையத் தலைவர்

மாட்டு சாணம் செல்போனின் கதிர்வீச்சைக் குறைக்கும் எனத் தேசியக் காமதேனு ஆணையத் தலைவர் வல்லபாய் கதிரியா  தெரிவித்துள்ளார்.

பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் புற்றுநோயைப் போல் கொரோனா வைரஸ் நோயையும் குணப்படுத்த முடியும் என அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா சட்டப்பேரவை விவாதத்தில் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்க  'பாபிஜி அப்பளம் சாப்பிடுங்கள்’ எனப் பாஜக அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசியது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

இந்நிலையில் மாட்டு சாணத்தில் கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி இருக்கிறது எனத் தேசியக் காமதேனு ஆணையத் தலைவர் வல்லபாய் கதிரியா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசியக் காமதேனு ஆணையம் தீபாவளியை முன்னிட்டு `காம்தேனு தீபாவளி அபியான்' என்ற நாடு தழுவிய பிரச்சார நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி உள்ளது. இதற்கான அறிமுக விழாவில்  இவ்வமைப்பின்  தலைவரும் பாஜக மூத்த தலைவருமான  வல்லபாய் கதிரியா  கலந்துகொண்டார். இதில் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட  சிப்  ஒன்றை அவர் அறிமுகப்படுத்தினார். 
அதைத் தொடர்ந்து பேசிய அவர்;

மாட்டு சாணத்தில் கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஆகவே, இதன் மூலம் செல்போனின் கதிர்வீச்சை குறைக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மாட்டுச்சாணத்தில் இருந்து செல்போன்களின் கதிர்வீச்சை குறைக்கும் சிப் உருவாக்கி இருக்கிறோம். இது நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

வல்லபாய் கதிரியாவின் இந்த கருத்து அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;