செவ்வாய், அக்டோபர் 27, 2020

இந்தியா

img

மூழ்கும் கப்பலில் கேப்டனுக்கு போட்டி... கே.பாலகிருஷ்ணன்...

அதிமுகவின் செயற்குழு கூட்டத்தை கடந்த செப்டம்பர் 28 அன்று பெரும் கோலாகலத்துடன், தாரை தப்பட்டை வாத்தியங்களுடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்திருக்கிறார்கள். கூட்டத்திற்குள் பேசப்படும் விசயங்கள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது. கூட்டம் நடந்த இடம் முழுவதும் ஜாமர் கருவிகளைப் பொருத்தி மிகவும் பாதுகாப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் யார் யார் என்னென்ன பேசினார்கள், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இருதரப்பு ஆதரவாளர்களும் எப்படியெல்லாம் மோதிக்கொண்டார்கள் என்று அடுத்தநாள் பத்திரிகைகளில் நேரடி ஒலிபரப்பு போல் செய்திகள் வந்துள்ளன. அந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் செயற்குழு கூட்டம் நடந்தேறியுள்ளது.கூட்டம் துவங்கிய முதல் 15 நிமிடங்களில் சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானங்கள் மீது பெரிய விவாதமோ அல்லது கருத்துப் பரிமாற்றமோ எதுவும் நடக்கவில்லை. உதாரணத்திற்கு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும்மத்திய அரசின் அராஜகத்தைப் பற்றியோ அல்லது அதன் விளைவாக தமிழகத்தில் நமது மாணவச் செல்வங்கள் பலரின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது பற்றியோ எந்த விவாதமும் இல்லை.

தமிழகத்தில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறு-குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால் வருமான வாய்ப்பின்றி கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சுகாதார நெருக்கடியால் கொரோனா பரவல் விகிதமும், மரண விகிதமும் தமிழகத்தில் அதிகமாகவே இருந்திருக்கிறது. இன்னும் அந்த அச்சம் நீங்கிவிடவில்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அதிமுக செயற்குழு விவாதிக்கவில்லை.

5 மணி நேரமும் நடந்தது என்ன?
அதிமுக செயற்குழு கூட்டம் 5 மணிநேரம்  நடந்திருக்கிறது. ஆமாம்! ஆழமான விவாதம். ஆளுங்கட்சியான அதிமுகவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில்மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்கு பதிலாக,அது சார்ந்த தீர்மானங்கள் பற்றி விரிவாக ஆலோசிப்பதற்கு பதிலாக முழுக்க முழுக்க பதவிக்கான சண்டையே நடந்துள்ளது. எதிர்வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இந்தக் கூட்டத்திலேயேதீர்மானிக்க வேண்டுமென்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்க ஆட்டக்காரர் போல தொடங்கி வைத்துள்ளார்.  இவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவர் எழுந்து, இப்போது பொறுப்பில் உள்ள முதல்வரே பொருத்தமானவர் என்றும் அவரே தொடர வேண்டும் என்று பேச, அதை வழிமொழிந்து வேறு சில அமைச்சர்களும் பேச; அதெப்படிச் சொல்ல முடியும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தானே, அவர்தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென்று மனோஜ் பாண்டியன் பேச; அதையொட்டி காரசாரமாக கூட்டம் நடந்திருக்கிறது.

இவர்கள் எல்லாம் பேசியது ஒருபுறமிருக்க ஒரு கட்டத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சருமே நேரடியாக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் விமர்சித்து பகிரங்கமாக பேசிக்கொண்டார்கள். குழாயடிச் சண்டை கூட தோற்றுப்போய்விடும் அளவுக்கு கச்சேரி களை கட்டியுள்ளது.  நீங்கள் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் செய்தவர் என்ற தொனியில் துணைமுதலமைச்சர் மீது முதலமைச்சர் அம்பு விட; நீங்கள் ஒரு குடும்பத்தின் அடிமையாக இருந்தீர்கள் என பதிலுக்கு அவர்அம்பைத் திருப்பி அனுப்ப அதிமுக செயற்குழு ரணகளமாகியுள்ளது.ஒருவழியாக கடைசியில் அக்டோபர் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவது என வாய்தா வழங்கிஅறிவித்து கூட்டம் முடிந்துள்ளது.கடந்த மூன்றரை ஆண்டுகளாக நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த மோதல்  தற்போது வெடித்து வெளியே கிளம்பியுள்ளது.

ஜெயலலிதா மறைந்த பிறகு...
தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. மக்களின் வாழ்வியல் நிலைமை மிக மிக மோசமானதாக மாறியிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் பேசாமல், ஒருவருக்கொருவர் பதவிக்காக பகிரங்கமாக மோதிக்கொண்டது வெட்டவெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, உண்மை என்னவென்றால், ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு இதுவரை நடந்திருக்கிற அவர்களது கட்சியோ அல்லது ஆட்சியோ ஒருமித்த கருத்து கொண்ட ஆட்சியாகவோ அல்லது கட்சியாகவோ நடக்கவில்லை என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன.

2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா காலமானார். அன்றைய தினம் இரவே ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அக்கட்சிக்குள் ஏற்பட்ட களேபரங்களின் பின்னணியில் அவர் ராஜினாமா செய்தார். ஏன் ராஜினாமா செய்தீர்கள் என்று கேட்டபோது, என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யுமாறு கூறினார்கள், அதனால் ராஜினாமா செய்தேன் என்று கூறி,ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சென்று அமர்ந்து கொண்டு தர்மயுத்தம் என்று அறிவித்துவிட்டார். ஜெயலலிதாமரணமடைந்த துக்கத்தில் தொண்டர்கள் துவண்டு கிடந்தார்கள். ஆனால் இவர்களுக்குள் பதவிக்கு அடித்து அலை மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.அதிமுக பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்வுசெய்யப்பட்ட சசிகலா அடுத்த கட்ட நகர்வாக முதலமைச்சர் பதவி ஏற்க ஆயத்தமானார். அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு இவரது முதலமைச்சர் கனவை தவிடு பொடியாக்கியது மட்டுமன்றி பெங்களூரு சிறையிலும் தள்ளியது.

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் எடப்பாடிபழனிசாமி முதலமைச்சராக 16-2-2017 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்களான 11 சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால் 122 சட்டமன்ற உறுப்பினர்களின்  ஆதரவுடன்  எடப்பாடி பழனிசாமி பதவி தப்பியது. 
ஆட்சியை எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வேண்டுமென பேரவைத் தலைவரிடம் புகார் செய்யப்பட்டது. பேரவைத் தலைவர்அசைந்து கொடுக்கவில்லை. அதன் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தற்போதும் விசாரணையில் உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக பேரவைத் தலைவர் இந்த விசாரணையை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். 

அமைச்சர் பதவியை இழந்த ஓபிஎஸ் அதிமுக கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்.  தேர்தல் ஆணையம், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை இருவரும் பயன்படுத்தக்கூடாது என்றும், அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித் தலைவர்) என்ற இரண்டு அணிகளாக செயல்படுமாறும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் சசிகலாவின் ஆலோசனையின் பேரில் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சி மேற்கொண்ட பின்னணியில்தான், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்டைப் பஞ்சாயத்து நடத்தி,  கைகுலுக்கச் செய்து ஆகஸ்ட் 28 அன்று இருவரும் இணைந்து கொண்டார்கள். இபிஎஸ், ஒபிஎஸ் இணைப்பு நடந்த அடுத்த கணமே தினகரன் தனிக்கட்சி துவக்கினார். அமமுக என்பது உதயமானது. பிரிந்திருந்தவர்கள் சேர்ந்தார்கள். சேர்ந்திருந்தவர்கள் பிரிந்தார்கள்.

மோதலின் விளைவாக நடந்த இடைத் தேர்தல்
எடப்பாடி நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என டி.டி.வி வழிகாட்டுதலில் 18 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார்கள். இவ்வாறு மனு கொடுத்தது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தவறானது. எனவே இவர்களது பதவியினை பறிக்க வேண்டுமென பேரவைத் தலைவரிடம் அதிமுகவின் சட்டமன்ற கொறடா கடிதம் கொடுத்தார். கடிதம் கொடுத்த ஒருமாத காலத்துக்குள் 18 எம்எல்ஏக்களின் பதவிகளைப் பறித்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.  மொத்தத்தில் இவர்களுக்கிடையே நடந்த பதவிச்சண்டை- கோஷ்டி மோதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மினி சட்டமன்றத் தேர்தலையே நடத்த வேண்டிய நிலைமை தமிழகத்திற்கு ஏற்பட்டது. 18 தொகுதிகளுக்கான தேர்தல் என்பது இயற்கை
யான காரணங்களால் நடத்தப்பட்டதல்ல. மாறாக அதிமுக கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலின் விளைவே.

மோடியிடம் சரணாகதி
எனவே கடந்த மூன்றரை ஆண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மறுபுறம் தினகரன் மற்றும்சசிகலா என்று இவர்களுக்கிடையே ஆட்சியையும், கட்சியையும் யார் கைப்பற்றுவது என்ற மோதல்  ஓய்வின்றி நடந்து கொண்டிருக்கிறது. அதேவேளை இந்த மூன்றரை ஆண்டு காலமும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நரேந்திர மோடியிடமும் பாஜகவிடமும் சரணாகதி அடைந்து கிடக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, நிவாரணம் அளிப்பதற்கு மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி பெற முடியவில்லை. ஒக்கி புயல், கஜா புயல் வந்தது. மக்கள் வாழ்வேபுரட்டிப்போடப்பட்டது. அதற்கான நிவாரண நிதியும் இதுவரையிலும் தர முடியவில்லை. புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க வழியில்லை. இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தின் கொள்கை என்று அதிமுக அரசு சொல்கிறது. ஆனால்மோடி அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது. அதைஎதிர்த்துக் குரல்கொடுக்கும் திராணி இவர்களிடம் இல்லை. 

மோடியின் தயவில்தான் இவர்களது ஆட்சி நடக்கிறது என்பதால் அவ்வப்போது வெறுமனே அறிக்கை விடுவது, கடிதம் எழுவது என்று நாடகம் நடத்துகிறார்களே தவிர, உறுதியாக மத்திய அரசை எதிர்த்துப் போராடி மாநில உரிமைகளைப் பாதுகாக்கிற நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அரசு மேற்கொள்ளவில்லை.இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கிறது. இவர்களது ஆட்சியில் ஒரே ஒரு விஷயம் வெகு ஜோராக நடந்திருக்கிறது என்று சொன்னால் அது ஊழலும், மெகா ஊழலும் மட்டுமே. தொட்டதிலெல்லாம் ஊழல் முறைகேடு. ஊராட்சி தொடங்கி கோட்டை வரை  கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. 

இருண்ட உலகில் இருக்கிறார்கள்...
இந்த லட்சணத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க  வேண்டுமென்ற போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஏதோ 2021 தேர்தலில் அதிமுக வெற்றி பெறப் போவது போலவும், அதற்கு யார் தலைமை தாங்குவது என்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள். எந்த இருண்டஉலகத்தில் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அப்பட்டமான இமாலயத் தோல்வியை அடைந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கு காலியாக இருந்த 21 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே அதிமுக தன் வசம் இருந்த 13 தொகுதிகளை இடைத்தேர்தலில் இழந்தது.உள்ளாட்சித் தேர்தலை சுமார் 2 ஆண்டுகள் பல சாக்குப் போக்குகளை காட்டி தள்ளிப்போட்டு வந்தார்கள். உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவுக்குப் பின்னர் வேறு வழியின்றி தேர்தல் நடத்தப்பட்டது.  அதையாவது  உருப்படியாக நடத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. ஊராட்சியை மட்டும் நடத்திவிட்டு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை. 9 மாவட்டங்களில் ஊராட்சித் தேர்தலும் நடைபெறவில்லை. மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை நடத்திவிட்டு கைவிட்டுவிட்டார்கள். எஞ்சியிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த கடைசி வரை அதிமுக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.  காரணம் தோல்வி பயம்தான்.  இப்போதுகொரோனா வந்துவிட்டதால் நிரந்தரமாக தள்ளிப்போடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதேபோலகூட்டுறவு அமைப்புகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் உட்பட எதுவும் நடத்தப்படவில்லை.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்தது  அதிமுக. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி கொடுக்க தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள். தேர்தல் என்றாலே தொடை நடுங்கும் அதிமுக, முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் சிக்கியுள்ளது என்பது உலக மகா வேடிக்கையாக உள்ளது.

ஊழல் ஆட்சியின் அலங்கோலம்
அதிமுக  முதலமைச்சர் வேட்பாளருக்கு போட்டி என்பதுகடந்த மூன்றரை ஆண்டுகாலமாக நடந்து வருகிற ஊழல் ஆட்சியின் உச்சக்கட்ட அலங்கோலக் காட்சியே தவிரவேறல்ல. திரும்பிய பக்கம்  எல்லாம் ஊழல் முடைநாற்றமெடுக்கும் இந்த ஆட்சியில், மக்கள் நலன் சார்ந்த பணிகள் எவை என்று பார்த்தால், தமிழக மக்களின் வாழ்வியலில் ஒரு மூன்றரை ஆண்டுக் காலத்தையே காணோம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. தற்போதைய  மோதல் முரண்பாடெல்லாம் அடிக்கும் கொள்ளையில் பங்கீட்டுக்கான சண்டையே தவிர வேறல்ல. இதை நாகரிகமான பாணியில் முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி என பறைசாற்றிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.மக்கள் வாழ்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறு-குறு, நடுத்தர தொழில்கள் அழிவின் பிடிக்குள்தள்ளப்பட்டிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி, அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி பங்குத்தொகையைக் கூட இவர்களால் வலியுறுத்திப் பெற முடியவில்லை. இதன் விளைவாக தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன. வேலைவாய்ப்பு மிகக் கடுமையான நிலைமைக்கு சென்றிருக்கிறது. சமூக வாழ்வியலிலும் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தாண்டவமாடுகின்றன. தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கணக்கற்ற முறையில் அரங்கேறி வருகின்றன. விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின்சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது மட்டுமன்றி அதே சட்டங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி தமிழக விவசாயிகளுக்கு பெருந்துரோகம் இழைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களை முற்றிலும் பாதுகாப்பற்ற நிலைக்குள் தள்ளிவிட்ட அதிமுக அரசு,எத்தனை செயற்குழு கூட்டி யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலும் மக்கள் அவர்களை முற்றாக நிராகரிப்பார்கள் என்பது திண்ணம்.

===கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)===

;