இணையம்

img

டிஜிட்டல் தளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு ரூ.53 கோடி செலவு - பாஜக முதலிடம்

கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை அரசியல் கட்சிகளின் விளம்பர செலவு ரூ. 53 கோடி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாஜக முதல் இடத்தில் இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில், ஃபேஸ்புக்கில் மொத்தம் 1.21 லட்சம் அரசியல் விளம்பரங்களுக்கு ரூ. 26.5 கோடி செலவிடப்பட்டுள்ளன. அதே போல், கூகுள், யூடியூப்பில் உள்ளிட்டவற்றில் 14,837 விளம்பரங்களுக்கு ரூ. 27.36 கோடி செலவிடப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி, ஃபேஸ்புக் தளத்தில் 2,500க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு, ரூ. 4.23 கோடி செலவிட்டு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல், ’மை ஃபஸ்ட் ஓட் ஃபார் மோடி’, ’பாரத் கே மான் கே பாத்’ மற்றும் ’நேஷன் வித் நமோ’ ஆகியவற்றுக்கான விளம்பர செலவு ரூ.4 கோடியும், கூகுள் விளம்பரங்களுக்கு ரூ.17 கோடி செலவிட்டுள்ளது.

இதை அடுத்து, காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக் தளத்தில் 3,686 விளம்பரங்களுக்கு ரூ. 1.46 கோடியும், கூகுளில் 425 விளம்பரங்களுக்கு, ரூ.2.71 கோடியும் செலவிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரங்களுக்கு ரூ. 29.28 லட்சம் செலவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பேஸ்புக் தளத்தில் 176 விளம்பரங்களுக்கு ரூ.13.62 லட்சமும், கூகுளில் விளம்பரங்களுக்கு ரூ. 2.18கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


;