ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

இணையம்

img

கணினிக்கதிர் : இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் ஸ்டால்கர்வேர்

வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஏற்ப, புதிய புதிய தொழில்நுட்ப பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் ஸ்டால்கர்வேர் (Stalkerware) என்ற புதிய தொல்லை கண்டறியப்பட்டுள்ளது. 

ஸ்டால்கர்வேர் என்றால் என்ன?
நாம் ஏற்கனவே அறிந்துள்ள மால்வேர், ஆட்வேர், ஸ்பைவேர் ஆகியவற்றைப் போல ஸ்டால்கர்வேர் என்பதும் ஒரு வகையான வைரஸ்தான். ஸ்பைவேர் போன்றவை இலக்கின்றி புளூடூத், வைபை (WIFI) இணைப்புகள் மூலமாக, இணைய முகவரிகளைக் கிளிக் செய்வதன் மூலமாக தற்செயலாக நம்மை அறியாமல் ஸ்மார்ட்போனில் நுழைகின்றன. “ஸ்டால்கர்வேர்” என்பது பயன்படுத்துபவரின் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் நிறுவப்படுவது. 

ஸ்டால்கர்வேர் என்பது ஸ்பைவேர் போன்றதா?
ஸ்டால்கர்வேர் ஸ்பைவேர் போன்றதுதான், இதில் கீபேட் செயல்பாட்டைக் கண்காணிக்கும் கீலாக்கர்கள் மற்றும் கிளிப்பர் போன்ற நிரல்களை உள்ளடக்கியது. ஸ்டால்கர்வேருக்கும் ஸ்பைவேர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஸ்பைவேர் என்பது எந்த ஒரு ஸ்மார்ட்போனிலும் நம்முடைய தவறான செயல்பாடுகளைப் பயன்படுத்தி நுழைபவை. பிறகு அந்த சாதனத்திற்குள் பதுங்கிக் கொண்டு, அதனை அனுப்பியவருக்கு ஃபோன் தகவல்களை அனுப்புகிறது. ஸ்டால்கர்வேர் என்பதும் இதே வேலையைத்தான் செய்கிறது. ஆனால், நிறுவனமாக்கப்பட்ட செயல்முறையுடன் கட்டண அடிப்படையில் இந்த வசதியை தேவைப்படும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. கட்டணம் செலுத்தியவர் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போனில் நிறுவி, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு இதுபோன்ற ஒரு செயல்பாடு நடந்ததே தெரியாத வண்ணம் இந்த ஸ்டால்கர்வேர் செயல்படுகிறது.

ஸ்டால்கர்வேரைப் பயன்படுத்தி பல்வேறு வகையான தகவல்களைக் கண்காணிக்க முடியும். எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டவரின் எஸ்எம்எஸ் செய்திகளை ஒருவர் கண்காணிக்க முடியும், ஜிபிஎஸ் வசதி கொண்டு இருப்பிடத்தை கண்டறியலாம். இதுபோல ஃபோன்கால்கள், ஆப் பயன்பாடுகள் அனைத்தையும் கண்காணிக்க என்று பயனரின் தேவைக்கேற்ப ஸ்டால்கர்வேர் வடிவமைக்கப்படுகிறது.ஸ்டால்கர்வேரின் முதன்மை சந்தை என்பது வேறொருவரை முழுமையாக நம்பாத நபர்கள்தான். எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்கிடமான வாழ்க்கைத் துணையைக் கண்காணிக்க, பெற்றோர் குழந்தைகளைக் கண்காணிக்க ஸ்டால்கர்வேர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது தவறில்லை என்பது போன்ற சொற்பிரயோகங்களை கொண்டிருப்பதால், சைபர் சட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. தனிநபர் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ள ஸ்டால்கர்வேரும் ஒரு வைரஸ்தான். 

பிளே ஸ்டோரில் ஸ்டால்கர்வேர் ஆப்ஸ்
ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோரில் ஸ்டால்கர்வேர் வகையைச் சார்ந்த 7 ஆப்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. Track Employees Check Work Phone Online Spy Free, Spy Kids Tracker, Phone Cell Tracker. Mobile Tracking, Spy Tracker, SMS Tracker, Employee Work Spy என்ற பெயரில் இருந்த அந்த ஆப்கள் ஆபத்தானவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பாதுகாக்க என்ன செய்யலாம்?
இது போன்ற ஆப்கள் ஏதேனும் உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டிருந்தால் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் மூலம் கண்டறியலாம். உதாரணமாக, கேஸ்பர்ஸ்கை போன்ற ஆண்டிவைரஸ்கள் தீங்கிழைக்கும் ஆப்களைக் கண்டறியக்கூடியவை. இவற்றை நிறுவி உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மால்வேர் ஆப்களின் எஞ்சிய சில பகுதிகள் (Remnants)நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான ஆப்களில் நுழைந்திருக்கலாம்.உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் ஃபேனை Factory Reset செய்து பயன்படுத்துங்கள். இந்த செயல்பாட்டில் உங்கள் மொபைலின் நினைவகம் அழிக்கப்பட்டு புதிதாக்கப்படும். எனவே, இந்த செயல்பாட்டிற்கு முன்பாக முக்கியமான தகவல்களை பேக்கப் செய்து கொள்ளவும்.மீண்டும் புரிதலுக்காக குறிப்பிடுகிறோம். ஸ்பைவேர் என்பது தற்செயலாக பதிவிறக்கம் செய்யப்படுவது. ஸ்டால்கர்வேர் என்பது குறிப்பிட்ட சாதனத்தைக் கண்காணிக்க ஒருவரால் வேண்டுமென்றே நிறுவப்படுவது.இன்றைய டிஜிட்டல் உலகில் தனிநபர் உரிமைக்கான போராட்டத்தில் நாம் இதுபோன்ற அனைத்து வகையான வைரஸ்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதும், கவனமாக இருப்பதும் அவசியமாகும்.

====என்.ராஜேந்திரன்====

;