அறிவியல்

img

வேளாண் நிலம் : தமிழக நீர்வள, நிலவளத் திட்டம் புதிய வேளாண் விரிவாக்க முயற்சிகள்

உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழக அரசின் வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள, நிலவளத் திட்டத்தின் வாயிலாக மாநிலத்தின் நீர்வள கட்டமைப்புகள், நீர் பாசன திறன் உயர்வு, வேளாண்மையில் உற்பத்தித்திறன் பெருக்கம், பருவநிலை மாற்றுச் சூழலுக்கு ஏற்ற மதிப்புமிக்க பயிர் சாகுபடி செய்வது போன்ற வேளாண் விரிவாக்கப் பணிகள், மக்களின் பங்களிப்பு நீர் மேலாண்மை (Participatory irrigation management) மற்றும் நீர் பயனாளிகள் கூட்டமைப்பு (Water users Association) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 5லட்சம் விவசாயிகளை பயனாளிகளாக கொண்ட இத்திட்டத்தில் 2.25 லட்சம் பேர் பெண் விவசாயிகளாக இருப்பர். சுமார் 5,43,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 4,778 பாசன அமைப்புகள் சீர் அமைக்கப்படும். இத்திட்டத்தில் நீர் வளத்துறை (Water resources Department), வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, கால்நடை துறை போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

வேளாண் துறையை பொறுத்தவரை விவசாயிகளிடம் நிலையான வேளாண்மை (Sustainable Agriculture) பற்றிய விழிப்புணர்வு பணிகளை விவசாயிகளிடம் மேற்கொள்வது, புதிய ரகங்கள் மற்றும் நம்பிக்கை தரும் வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது, விவசாயிகளுக்கு போதிய அளவில் பயிற்சிகளை வழங்கி அவர்கள் பருவநிலை மாற்று பிரச்சனைகளுக்கு ஏற்ப குறுகிய மற்றும் அதிக உற்பத்தி தரும் ரகங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ரகங்கள், வறட்சியை தாங்கும் ரகங்களை சாகுபடி செய்யும் விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பயிறு வகை பயிர்கள் (Pulses), மக்காச்சோளம், எண்ணெய் வித்து பயிர்கள், பழங்கள், காய்கறி சாகுபடி பணிகளிலும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளி நீர்ப்பாசனம் (sprinkler irrigation) வாயிலாக உரங்களை பயிர்களுக்கு வழங்கும் கட்டமைப்புகளும் விவசாயிகளின் தோட்டத்தில் நிறுவப்படுகிறது.
மேலும் நெல் மற்றும் கரும்புச் சாகுபடியில் நிலையான வேளாண் பணிகளை மேற்கொள்ள உழவியல் முறைகளான செம்மைச் சாகுபடி முறைகளும் (system of intensification) ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் குறைந்த தண்ணீரில் நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்வதுடன் இணைய வழி விரிவாக்க முயற்சிகளான இ-வேளாண்மை மற்றும் விவசாயப் பயிர் ஆலோசனை மையங்களுடன் விவசாயிகளை இணைத்து வேளாண் சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட பசுந்தாள் உரம், மணிலா மற்றும் பயிர் வகைப் பயிர்கள் சாகுபடியின் உற்பத்தித் திறனை பெருக்க தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன் கிராம அளவில் விதைக் கிராமங்களை (Seed Villager) உருவாக்கி விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்ய சூழல் நிதியும் (Revolving fund) வழங்கப்படுகிறது.தற்போது கடலூர் மாவட்டத்தில் கிரப்பாளையம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப்படும் உழவர்கள் பள்ளியில் (Farmer field school) மாநில வேளாண் துறை அதிகாரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவாக்க கள பணியாளர்கள் கூட்டாக இணைந்து விவசாயிகளுக்கு குழுவாக பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். விவசாயிகளின் நடைமுறை பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் வழங்கப்படுவதும், விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்கள், சந்தையில் விலை நிலவரங்கள், வானிலை தகவல்கள், மதிப்பு கூட்டும் ஆலோசனைகளும் விவசாயிகளின் தோட்டங்களில், கிராமங்களில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் கிராமத்தில் மற்றும் தோட்டங்களில் பயிற்சிகள் மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் காலங்களில் நமது தமிழக விவசாயிகள் பருவநிலை மாற்றுச் சவால்களையும் சந்தித்து வேளாண் சந்தைகளின் தேவைக்கேற்ப அதிகளவில் உற்பத்தி செய்து தங்களின் வாழ்வில் வளம் பெறுவர் என்பதில் சந்தேகமில்லை.

முனைவர் தி.ராஜ்பிரவின்
கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
 

;