அறிவியல்

img

சந்திரயான் 2

உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட சந்திரயான் - 2 செயற்கை க்கோள் ஏவுதல் நிகழ்வு தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அறி வித்துள்ளது.  அதற்கான ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுண்ட் - டவுன் நிறுத்தப்பட்டது.  நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.   ஏற்கெனவே இந்தியாவின் சந்திரயான் - 1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதையடுத்து, நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் வகையில் சந்திரயான் - 2ஐ அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்த விண்கலம் புவிசார் ஏவுவாகனம் - மார்க் 3 மூலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இதற்கான கவுண்ட் - டவுன் ஜூலை 14ஆம் தேதி காலை  6.51 மணியளவில் துவங்கியது. இந்த ஏவுவாகனத்திற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் ஏவுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்பாகத் துவங்கின.  இரவு பத்து மணியள வில் கிரையோஜெனிக் எஞ்சினில் திரவ ஆக்ஸிஜனை நிரப்பும் பணி துவங்கியது.  “நள்ளிரவு 12 மணியளவில் ஆக்ஸிஜன் நிரப்பும் பணி முடிந்த பிறகு, திரவ ஹைட் ரஜனை நிரப்பும் பணி துவங்கியது. 15ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் இந்தப் பணியும் முடிவடைந்தது. ஆனால், அதி காலை 1.50 மணியளவில் தொழில்நுட்பக் காரணங்களால் சந்திரயான் - 2 ஏவப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது

ஆனால் என்ன தொழில்நுட்ப பிரச்சனை என்பதை இஸ்ரோ அறிவிக்கவில்லை. அத்துடன் சந்திரயான் 2 மீண்டும் எப்போது ஏவப்படும் என்பதையும் தெரிவிக்கவில்லை. சந்திரயான் - 2 விண்கலம் இதுவரை எந்தவொரு நாடும் சென்றிராத நிலவின் தென்துருவ பிரதேசத்திற்கு செல்ல இருந்தது. இந்தப் பிரதேசத்தில் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் அதிக ஆபத்து களின் காரணமாக எந்த விண்வெளி நிறுவனமும் இந்த பிரதேசத்திற்கு கலங்களை இதுவரை அனுப்பவில்லை. இதற்கு முந்தைய நிலவுப் பயணத் திட்டங்கள் ஓரளவு சமவெளி பகுதியான நிலவின் மத்தியரேகை பகுதியில் நிகழ்ந்துள்ளன. ஆனால், நிலவின் இந்த தென் பகுதியில் பள்ளங்களும், கடினமான நிலப்பரப்பும் நிறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  நிலவில்  ஏதாவதொரு வடிவத்தில் அங்கு நீர் உள்ளதா என அறிந்து கொள்ளுதல் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் நிலவின் மேற்பரப்பு, கனிமவியல், மிகுதியாக கிடைக்கும் தனிமங்கள், நிலவின் வெளிப் புறப்பகுதியில் ஆய்வு ஆகியவையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

;