அறிவியல்

img

அறிவியல் கதிர்

சீலின் எசப் பாட்டு 

சீல்(seals) விலங்குகளுக்கு பயிற்சி கொடுத்து பிரபல இசைப் பாடல்கள் போல பாடவைக்க முடியும் என்று ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். அவர்கள் பகிர்ந்துள்ள காணொலியில் ‘ஸ்டார் வார்ஸ்’ கருத்துப் பாடல்கள்,’டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ போன்ற பாடலிசைகளை  சீல் விலங்குகள் பாட முயற்சிப்பதை பார்க்க முடிந்தது. சத்தம் எழுப்பும் பரிணாமம் குறித்த புரிதலை இந்த ஆய்வு கொடுத்துள்ளது.

ஐஸ் எரிபொருளா?

தங்கள் நிறுவனத்தின் நிலவுக் கலம் ‘புளூ மூன்’ நிலவிலுள்ள ஐஸை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பப்படும் என்று விண்வெளி தொடக்க நிலை நிறுவனம் ப்ளூ ஆர்ஜின் உரிமையாளர் ஜெப் பெசோஸ் கூறியிருக்கிறார்.புளூ மூன் கலத்தின் பி இ-7(BE-7) என்ஜின் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் எரிபொருளாக பயன்படுத்துகிறது. இந்த எரிபொருள் நிலவின் மேற்பரப்பிலேயே தயாரிக்கப்படும் என்கிறார் ஜெப் பெசோஸ்.

திமிங்கலங்களின் காதல் பாட்டு

 

அலாஸ்கா கடற்கரையில் ‘வட பசிபிக் ரைட் வேல்’(North Pacific right whale) எனப்படும் திமிங்கலத்தின் இசையை முதல் முறையாக அறிவியலாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.இந்த இனம் மிகவும் அரிதான இனமாகும். மிக மெதுவாக நகருவதாலும் கொல்லப்பட்டவுடன் மேலே மிதப்பதாலும் இது வேட்டையாடுவதற்கு சரியான திமிங்கலம் என்ற பொருளில் ‘ரைட் வேல்’ என அழைக்கப்படுகிறது. வேட்டைக்காரர்கள் இந்த இனத்தை தீவிரமாக வேட்டையாடி கிட்டத்தட்ட அழித்துவிட்டனர். நூற்றுக்கும் குறைவாகவே எண்ணிக்கையில் உள்ளது. ஹம்ப் பேக்,பவ் ஹெட் மற்றும் சில திமிங்கலங்களின் குரலிசை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் 2010இல்  அவைகளிருந்து வேறுபட்ட இசையை கேட்டார்கள். அப்பொழுது அது எதனுடயது என்று அறியமுடியவில்லை. 2o17ஆம் ஆண்டு கிரேன்ஸ் என்ற விஞ்ஞானியின் குழுவினர் அது ஆண் ரைட் வேலுடையது என்று கண்டுபிடித்தனர். பலவிதமான ஒலிகளை எழுப்பக்கூடிய அவற்றில் இது இனப் பெருக்கத்திற்கான அழைப்பு என்று ஊகிக்கின்றனர்.

உருகும் பனிப்பாளங்கள்

இந்தியா, சீனா, திபெத், பூடான் ஆகிய நாடுகளில் பரவிக் கிடக்கும் இமாலய பனிப் பாளங்கள்(Himalayan glaciers) 2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை அடி குறைந்து வருகிறது.கொலம்பியா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பனிப்பாளங்கள் உருகுவது 2000த்திலிருந்து இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க உளவு விண்வெளிக் கலங்கள் எடுத்த புகைப்படங்களைப் பயன்படுத்தி நாற்பதாண்டுகளாக நடத்தப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் பொதுப் பார்வைக்கு(declassified) கொண்டு வரப்பட்ட பின் இந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்வெளியில் தண்ணீர் விநியோகம்

அமெரிக்காவை சேர்ந்த ஆர்பிட் ஃபேப்  (Orbit Fab) எனும் தொடக்கநிலை நிறுவனம் (startup) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்துள்ளது. ஒரு தனியார் நிறுவனம் முதன்முதலாக செய்துள்ள சாதனை இது. ஃபர்பி எனும் பெயரிடப்பட்ட சோதனையில் இரண்டு விண்கல சோதனைப் படுக்கைகளுக்கிடையே தண்ணீரைப் பரிமாறி தனது திறமையை நிரூபித்துள்ளது.இது எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பும் சாத்தியப்பாட்டை காட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி அமெரிக்க தேசிய ஆய்வுக்கூடத்தின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இருட்டில தேடுங்க....

அமெரிக்க தேசிய கடல் மற்றும் விண்வெளி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு கடல் பயணத்தில்  முதன் முதலாக ஊசிக் கணவாய்(squid) எனப்படும் ராட்சச மீனைப் படம் பிடித்துள்ளனர்.10-12 அடி நீளமுள்ள இதை மெக்சிகோ வளைகுடாக் கடலில் 750 அடி ஆழத்தில் கும்மிருட்டில் படம் பிடித்துள்ளனர்.இந்த காணொலிக்கு ‘மெடுசா’ என்ற பெயரிடப்பட்ட சிறப்பு புகைப்படக் கருவி பயன்படுத்தப்பட்டது. (மெடுசா என்பது உயிரியலில் ஜெல்லி மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களைக் குறிக்கிறது)

;