இஸ்தான்புல்:
சவூதி அரேபியப் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படுகொலை குறித்து விசாரிக்கும் துருக்கியின் திறனை சவூதி அரேபியா” மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக” ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது.துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணைத் தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கஷோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார்.சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய நபராக 59 வயது பத்திரிகையாளர் கஷோக்ஜி பார்க்கப்பட்டார். இப்படி ஒரு சம்பவம், இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால், இதில் இளவரசர் சம்பந்தப்படவில்லை என்றும், சவூதி முகவர்கள் சிலர் கஷோக்ஜியை கொலை செய்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சவூதி, அதில் 5 பேருக்கு மரண தண்டனை கோரி வருகிறது.

அறிக்கை என்ன கூறுகிறது?
பத்திரிக்கையாளர் கஷோக்ஜியின் கொலை குறித்து சர்வதேச மனித உரிமை விசாரணையை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ஜனவரி 28ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3ஆம் தேதிவரை துருக்கிக்கு சென்று பார்வையிட்டார்.

கொலை நடந்த துணைத் தூதரகத்தை பார்வையிட்ட சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட் “சவூதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக கஷோக்ஜி கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்று முதல்கட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.

‘‘இந்தக் கொலை தொடர்பாக துருக்கியின் விசாரிக்கும் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்ட சவூதி அரேபியா, கொலை நடந்த இடத்திற்கு செல்ல துருக்கி விசாரணையாளர்களை அனுமதிக்காமல் 13 நாட்கள் தாமதமாக்கியது. அக்டோபர் 2ஆம் தேதி கொலை நடந்திருக்க, அக்டோபர் 15ஆம் தேதிதான் தூதரகத்திற்குள் நுழைய துருக்கி அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்தது. மேலும், அக்டோபர் 17ஆம் தேதிதான் வீட்டில் சென்று விசாரிக்க முடிந்தது. இது முக்கியமாக தடயவியல் விசாரணையை பாதித்ததாக” அவர் அறிக்கையில் எழுதியுள்ளார்.

ஜமால் கஷோக்ஜியின் உடல் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது, அவரது அன்புக்குரியவர்களை இன்னும் பெரிய துன்பத்தில் வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவூதி அரசின் துணை வழக்கறிஞர் ஷலான் பின் ஷலான், விஷ ஊசி செலுத்தி கஷோக்ஜியை கொலை செய்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் உத்தரவு பிறப்பித்ததாக தங்கள் விசாரணையாளர்கள் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தூதரகத்தினுள் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் வெளியே உள்ள இதில் தொடர்புடைய மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் ஷலான் கூறினார்.இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மற்றும் அங்கிருந்து புறப்பட்ட சவூதி முகவர்கள் 15 பேரை துருக்கி அடையாளம் கண்டுள்ளது.

மேலும், சவூதி இளவரசரின் முன்னாள் ஆலோசகர் சௌகத் அல்-கஹ்தானி உள்ளிட்ட 17 சவூதி அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. கஷோக்ஜியின் கொலை திட்டத்தில் அவர்களும் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த 17 பேரில் யாரேனும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.