இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்குற்றங்கள் இடைவிடாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுகுறித்து தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குரல் எழுப்பி வருகிறது. ஆனால் அரசு நிர்வாகம் தனது காதுகளையும் கண்களையும் இப்பிரச்சனையில் இறுக மூடிக் கொள்கிறது. பாலியல் வன்குற்றங்கள் மேலும் மேலும் அதிகரிக்க மது போதையும், இளைய தலைமுறையின் உள்ளங்களில் பாலியல் வன்ம உணர்வை கார்ப்பரேட் ஊடகங்கள் திட்டமிட்டு திணிக்கும் நடவடிக்கைகளும், இவற்றை அங்கீகரித்து அனுமதித்துக் கொள்ளும் ஆணாதிக்க சமூக சிந்தனையும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இதுதொடர்பான ஆய்வுகளில் ஒன்றாக, சர்வதேச அளவில் பாலியல் மற்றும் மனநலம் குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் ஆய்வாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர மான தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

2018ஆம் ஆண்டில் இணைய தளங்களில் ஆபாசத் தேடல்கள் குறித்து ‘போர்ன்ஹப்’ எனும் தளம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதில் போர்ட்நைட் என்ற வார்த்தை 15ஆவது இடத்தைப் பிடித்தது. வீடியோ கேம்ஸ் பிரியர்களைப் பொறுத்தவரை 2017ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து இப்போது வரை, இந்த விளையாட்டு 125 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் விளையாடப்பட்டு வருகிறது. மூன்றாவது நபர் சார்ந்த துப்பாக்கி விளையாட்டு இது. ஏராளமான குழந்தைகள் உட்பட மக்கள் பார்க்கும் புகழ்பெற்ற இதுபோன்ற வீடியோ கேம்களைத் தழுவி ஆபாசக்குவியல்கள் உருவாக்கப்படுவது ஆபாச ஊடக கார்ப்பரேட்டுகளின் கல்லாவை நிரப்புவதற்காக தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வீடியோ கேம் கலாசாரம் வேகமாகப் பரவும்போது, அது சார்ந்த ஆபாச வக்கிரமும் கட்டமைக்கப்படுகிறது. 2016இல் போகிமான் கோ பிரபலமானபோது அது சார்ந்த ஆபாச விஷயங்கள் வைரலாக பரவின. இதற்கு முன்னர் டாம்ப் ரைடர், லெஜண்ட் ஆஃப் ஜெல்டா போன்ற புகழ்பெற்ற வீடியோ கேம் பாத்திரங்களும் கூட இதற்குத் தப்பவில்லை. உண்மையான உலகத்தில் மேற்கொள்ள இயலாத, அபாயகரமான விஷயங்களை, அனிமேஷன் செய்யப்பட்ட ஆபாச உலகத்தில் வேறொருவர் மூலமாக அனுபவிப்பது போல மாயையை ஏற்படுத்தி அடிமைகளாக்குவதே இதன் இலக்கு.

இது யதார்த்த உலகிலிருந்து நழுவி வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது. அந்த பாத்திர ங்களைப் போல கற்பனை செய்துகொள்வது மூலமாக பாலியல் வன்ம உணர்வு மனித உள்ளங்களில் விதைக்கப்படுகிறது. இதில் பதின்பருவ ஆண் குழந்தைகள் அதிகமாக சிக்கியிருக்கிறார்கள். இவர்களது உள்ளங்கள் நெறியற்ற பாலியல் வன்மம் கொண்டவையாக திட்டமிட்டு மாற்றப்படுகின்றன. இந்த ஆபத்தை தடுப்பதற்கு, பதின்பருவ சிறார்களுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் உரிய வழிகாட்டல் செய்ய வேண்டியது அவசியம். அதைவிட முக்கியமானது அரசு நிர்வாகம் ஆபத்தான வீடியோ கேம் இணைய தளங்களை கண்காணித்து முடக்குவதும் அவசியம்.