திருப்பூர் அருகே ராஜவாய்க்காலின் குறுக்காக மூன்று இடங்களில் கட்டப்பட்டு வரும் சிறு பாலங்கள் பணியை அரைகுறையாக நிறுத்தி வைத்திருப்பதால் பல மாதங்களாக இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களின்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணியை நிறைவேற்றுமாறு இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் நொய்யல் ஆற்றில் இருந்து பிரிந்து மாணிக்காபுரம் குளத்திற்கு ராஜ வாய்க்கால் செல்கிறது. இதில் இருந்து கிடைக்கும் நீர் விவசாயப் பாசனத்திற்கும், நிலத்தடி நீராதாரத்திற்கும் பயன்பட்டு வருகிறது. இந்த ராஜவாய்க்காலின் குறுக்காக சிட்கோ பொன்னாபுரம், தாட்கோ சத்யா நகர் மற்றும் குருவாயூரப்பன் நகர் ஆகிய மூன்று இடங்களில் சிறு பாலம் கட்டும் பணி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பகுதியில் அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும், ஏராளமான பொது மக்களும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கடந்த ஆறு மாதமாக பாலம் கட்டுவதற்காக சாலையின் குறுக்காக தோண்டிப் போட்டிருப்பதால் இங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைபட்டுவிட்டது.

பாதசாரிகள் மட்டுமே நடந்து செல்ல முடியும் என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டியவர்கள் வேறு மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசின் தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தில் இந்த மூன்று சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டாலும், ஆமை வேகத்தில் வேலை செய்யப்பட்டு வந்தது. சிறு பாலங்களுக்கு இரு புறங்களிலும் காங்கிரீட் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு விட்டன. இந்த பணி முடிவடைந்து ஏறத் தாழ இரண்டு மாதங்கள் ஆனபின்னும் அதன் மேல் பகுதியில் இணைக்கும் காங்கிரீட் பாலம் அமைக்கும் பணி இன்னும் நடை பெறவில்லை. அதிலும் மேல்பகுதியில் காங்கிரீட் கலவை போடு வதற்காக, இரும்பு தட்டுகள் அமைத்து கம்பிகள் கட்டுவதற்கு தயார் செய்யப்பட்டு வந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ திடீரென மேற்பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு தகடு தட்டுகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரித்துவிட்டனர். பணியைத் தொடக்கி ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்த நிலையில், அரை குறையாக திடீரென நிறுத்தப்பட்டது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரித்தபோது தலா ரூ.6 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.18 லட்சத்தில் மூன்று பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் பாதி வேலைகள் நடைபெற்ற பின்னரும் கூட, அதற்கான பில் தொகையை அரசு நிர்வாகத்தினர் இன்னும் வழங்கவில்லை என்பதால் அடுத்து தொடர வேண்டிய பணியை நிறுத்திவிட்டதாக ஒப்பந்ததாரர் தரப்பில் கூறியுள்ளனர். இதனால் இந்த வட்டாரத்தில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. சிட்கோவில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பெரும்பாலானவர்கள் வேலை செய்து வரும் நிலையில் இதனால் அன்றாடம் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த மூன்று பாலங்களையும் விரைந்து கட்டி முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். அதேசமயம் இந்த பணியை உரிய காலத்தில் முடிக்காமல் தாமதிப்பதை ஏற்க முடியாது. உடனடியாக பணியை முடிக்காவிட்டால் இப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னாபுரம் கிளைச்செயலாளர் ஆ.செல்வன் தெரிவித்தார்.