ராணுவ பள்ளிகளில் பெண் குழந்தைகள் பயில நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தே.அன்பு தெரிவித்தார். உடுமலை அருகே அமாரவதி நகரில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியின் 57 ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முன்னாள் மாணவரும், இந்திய ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தே.அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் பின் அவர் பேசுகையில், இந்தியாவில் மொத்தம் உள்ள 28 சைனிக் பள்ளிகளில் அமராவதி நகர் சைனிக் பள்ளி சிறந்த பள்ளியாக இருப்பதற்கு காரணம் சிறந்த கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள், பயிற்சி முறை மற்றும் சிறந்த தொழில்நுட்பமே ஆகும். இங்கு பயிலும் மாணவர்களின் ஒருங்கிணைப்பு, திடம், ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றிலும் சிறந்த பள்ளியாக உள்ளது.

தேசிய அளவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற போதிய விழிப்புணர்வு இல்லை. ராணுவத்தில் வீரர்கள் மட்டுமல்லாது அதிகாரிகளுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மத்திய அரசு தேர்வு வாரியம் , ராணுவத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் இளைஞர்கள் அதிகளவு பங்கேற்க வேண்டும். சைனிக் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றவர்களின் பெண்குழந்தைகளுக்கு மட்டும் அந்தந்த பள்ளிகளில்பயில அனுமதிகப்பட்டு வந்த நிலையில் தற்போதைய மத்திய ராணுவ அமைச்சரின் முடிவுப்படி, முதல்முறையாக மணிப்பூர் சைனிக்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறும்போது இந்தியாவில் உள்ள அனைத்து சைனிக் பள்ளிகளிலும் பெண்களும் சேர்ந்து பயில அனுமதிகப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, இந்த விழாவில் சைனிக் பள்ளி மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.