இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, நீரில் மூழ்கிய படகில் இருந்து மாயமான மீனவர், நெடுந்தீவு பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர். மேலும், ரோந்துக் கப்பலை வைத்து மோதியதில், 2 படகுகளும், 9 மீனவர்களும் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2 படகுகளையும், அதில் இருந்த 8 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர், மாயமான கருப்பையா என்ற மீனவரை தேடி வந்தனர். பல மணி நேரம் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், ஞாயிறு மாலை நெடுந்தீவு பகுதியில் அவர் சடலம் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அவரது உடல் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளநிலையில், இந்திய அதிகாரிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.