அவிநாசியை அடுத்த பிச்சாண்டம்பாளையத்தில் திறக்காத மகளிர் சுகாதார வளாகத்திற்கு திறப்பு விழா நடந்ததாக கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த வடுகபாளையம் ஊராட்சிக் குட்பட்ட பிச்சாண்டம்பாளையம், ஏடி காலனி பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் தமிழக சட்டமன்ற சபாநாயகரும், இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி. தனபால் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 22.12.2018ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சட்டமன்ற சபாநாயகரும். தொகுதி உறுப்பினருமான பி.தனபால் அவர்களால் இந்த சுகாதார நிலையம் திறக்கப்பட்டதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது சம்மந்தமாக அவ்வூர் பொதுமக்கள் கூறுகையில், சபாநாயகர் இங்கு வந்து திறக்கவில்லை, கல்வெட்டு மட்டும் வைக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த சுகாதார வளாகம் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட வில்லை. இதன்காரணமாக தற்போது வரைவெட்ட வெளியைதான் இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்தி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே, கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.