திருப்பூர் மாநகராட்சி ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையோரம் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை மாஃபியா கும்பல் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளது. சட்டப்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் வருவாய் துறை, பத்திர பதிவு துறை அதிகாரிகள் ஆதரவுடன் நில மாஃபியா கும்பல் இந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் நகரின் மையத்தில் ராயபுரம் உள்ளது. இப்பகுதி நகரின் ஊடாகச் செல்லும் நொய்யல் ஆற்றின் வடக்குப் பகுதியில், ரயில்வே பாதையின் தெற்குப் பகுதியில் போக்குவரத்து வசதிக்கு ஏற்ற இடத்தில் அமைந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெள்ளையர்கள் ஆட்சி செய்தபோது ரயில் நிலையம், காவல்நிலையங்கள், தாலுகா அலுவலகம், சிறைச்சாலை, உள்ளிட்ட பொதுப்பணி கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏழை உழைப்பாளிகள் கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்டனர். கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அவர்கள் தங்குவதற்காக ராயபுரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் நிலம் ஒதுக்கிக் கொடுத்து உள்ளனர். இந்த இடத்தில் குடிசைகள் அமைத்து அவர்கள் பல ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர். அடிப்படை வசதி இல்லாமல் வெறும் குடிசைகள் மட்டும் அமைத்து ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அந்த மக்கள் காலப்போக்கில் நகரின் வேறு பகுதிகளில் குடியேறினர்.

இதனால் அவர்கள் வசித்து வந்த இடம் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி அடர்ந்த காடுபோல் கிடந்தது. இதனால் இந்த இடத்தை அப்பகுதி பொது மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்த நிலையில் அவற்றை வெட்டி காய வைத்து தீ எரிக்க பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்றுமதி தொழிலில் விரைவாக வளர்ச்சி பெற்ற திருப்பூரில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. எனவே நொய்யல் ஆற்றங்கரையோரம் ராயபுரத்தில் அமைந்துள்ள காலி இடம் நில ஆக்கிரமிப்பாளர்களின் கண்ணை உறுத்தியுள்ளது. ஏற்கெனவே வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வேலை செய்த ஊழியர்கள் மூலம் இந்த இடம் குறித்த விபரத்தை அறிந்து கொண்டோர் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த இடத்திற்கு பொய்யான ஆவணங்கள் தயார் செய்து உரிமை கொண்டாடுவதற்கு தொடங்கியுள்ளனர். பல்வேறு தரப்பினர் இந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடிய நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பஞ்சாயத்து பேசி வருகின்றனர். இந்த இடத்திற்கு உண்மையான தாய் பத்திரம் யாரிடமும் இல்லை என்றும் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நில மாஃபியா கும்பல் இந்த இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே வேறொரு தரப்பைச் சேர்ந்தோர் அந்த இடத்தில் இருந்த முட்செடிகளை அகற்றி சுற்றிலும் வேலி அமைத்து, இடத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் இருந்தனர். இதுகுறித்து மற்றொரு கும்பலுக்கு தெரிந்து நூற்றுக்கு மேற்பட்ட அடியாட்களை அழைத்து வந்து, சுத்தப்படுத்தி வேலி போட்டவரை விரட்டி விட்டு தற்போது இவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு 24 மணி நேரமும் ரௌடிகள் கும்பலாக அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை. இந்நிலையில் நில மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர் கள் ஆக்கிரமிப்புச் செய்து வைத்துள்ளனர். தற்போதைய சந்தை நிலவரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை கைப்பற்றி கொள்ளையடிப்பதற்கு இரு கும்பலும் எந்தநேரமும் மோதிக் கொள்ளக்கூடும் என்ற நிலை உள்ளது. சமூக விரோதிகளின் அடாவடித்தனத்தின் அச்சத்துடனேயே வசித்து வருகிறோம். வருவாய் துறை, பத்திர பதிவு துறை, காவல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழல் அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக் கொண்டு இந்த இடத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே இந்த நிலம் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேரில் விசாரித்து உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். தாய் பத்திரம் இல்லை என்று கூறப்படுவது உண்மையா? வேறு யாரிடம் தாய் பத்திரம் இருக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்து, இது அரசுக்குச் சொந்தமான இடமாக இருந்தால் நில மாஃபியா ஆக்கிரமிப்பு கும்பலின் பிடியில் இருந்து மீட்க வேண்டும். இந்த இடத்தை கையகப்படுத்தி தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் இந்த நிலத்தைக் கையகப்படுத்தி திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிக் கொடுத்தால் ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று மக்கள் விழிப்புணர்வு இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
(ந.நி.)