கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதற்கு ஜாக்டோ ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கூட்டம் திங்களன்று அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வே.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான முன் தயாரிப்பு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து மாநில அரசு ஏற்க மறுக்கிறது. மேலும், நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு காலம் தாழ்த்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. தமிழக அரசின் அலட்சியப்போக்கை இனியும் ஏற்க முடியாது என்கிற அடிப்படையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இதனை கோவை மாவட்டத்தில் வலுவாக நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன் முன்னோட்டமாக வருகிற ஜன.18 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வலுவான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது, இதேபோல் ஜன.22 ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பங்கேற்கச்செய்து வெற்றிபெற வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் எதேச்சதிகார போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை வருகிற ஜன.21 ஆம் தேதி துவக்குவது என்று மாநில அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஜன.18 ஆம் தேதியே துவக்க வேண்டும். இதில் கட்டாயம் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் நிர்பந்தம் செய்து வருகிறார். இதனை கண்டித்து ஜன.21 ஆம் தேதியன்று முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாற்றம் செய்து வரப்பட்ட உத்தரவுகளை புறக்கணிப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக, இக்கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.