பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மடம் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மடம் கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பொங்கல் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரின்றி பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று பென்னாகரம் – நாகமரை சாலையில் மடம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் காலி குடங்களோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் குடிநீர் தட்டுப்பாடை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.