சேலத்தில் 2 கிலோ ஆட்டுக்கறி கேட்டு முதியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர் அன்னதானப்பட்டி பேருந்து நிலையம் அருகே ஆட்டுக் கறிகடை வைத்துள்ளார். இந்நிலையில் அன்னதானப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியம், சிவபெருமான் ஆகியோர் ஞாயிறன்று மூக்குத்தி கவுண்டரிடம் சென்று 2 கிலோ கறி இலவசமாக கேட்டு உள்ளனர். இதற்கு மூக்குத்தி கவுண்டர் மறுத்ததால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியம் மூக்குத்தி கவுண்டரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, அங்கிருந்த மூக்குத்தி கவுண்டரின் மனைவி மற்றும் மகன் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியிடம் சென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என கேட்டுள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியம், முதியவர் என்றும் பாராமல் மூக்குத்தி கவுண்டரை அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியுள்ளார்.

இதை அறிந்த அவரது மகன் ஆகியோர் அன்னதானப்பட்டி காவல் நிலையம் சென்று கேட்டபோது அவர்களையும் மிரட்டியுள்ளார். இதன்பின் மூக்குத்தி கவுண்டரிடம் வெள்ளை பேப்பர்களில் எழுதி வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் தாக்கியதால் படுகாயமடைந்த மூக்குத்தி கவுண்டர் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பெற்ற மூக்குத்தி கவுண்டர், தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் உடனே விசாரித்து, மூக்குத்தி கவுண்டரை மிரட்டி தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவபெருமான் ஆகியோரை சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார். இச்சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாலசுப்பிரமணியம் தான் செய்த தவறை உணர்ந்து மூக்குத்தி கவுண்டரின் மனைவியிடம் சென்று மன்னிப்பு கேட்கும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.