திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகாயாகம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை இந்து முன்னணி அமைப்பு டிசம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் நடத்துகிறது. இதில் பிரம்மாண்டமான யாகசாலை அமைத்து கஜ (யானை) பூஜை, 108 அஸ்வ (குதிரை) பூஜை மற்றும் 1008 கோ (பசு) பூஜை நடத்தப் போவதாகவும், மீனாட்சி திருக்கல்யாணம், ஆண்டாள் திருக்கல்யாணம் மற்றும் 16 அம்சங்கள் கொண்ட மஹா விஷ்ணு மஹாலட்சுமி யாகம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். இந்த யாகத்திற்காக மொத்தம் ரூ.8 கோடி செலவிடப் போவதாக திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில் அறிவித்தனர்.
எந்தவொரு அமைப்பும் தனிப்பட்ட முறையில் தங்கள் நம்பிக்கை சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. எனவே இந்து முன்னணி நடத்தும் இந்த யாக பூஜையும் அந்த அமைப்பு சார்ந்தவர்கள் பிரச்சனையே! ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை அவர்கள் தொடங்கி இருக்கும் விதம், அவர்களது யாகத்தின் நோக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.
பள்ளிக்குள் யாக ரதம்
அவர்கள் ஒரு வாகனத்தை ரதமாக ஜோடித்து திருப்பூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குள் அனுப்புகின்றனர். மேற்படி நிகழ்ச்சி குறித்து மாணவர்களிடம் பிரச்சாரம் செய்வதுடன், “இந்து” மாணவர்கள் பெற்றோரிடம் சொல்லி இந்த யாகத்துக்கு செங்கல்லும், பசு நெய்யும் தரும்படி கேட்கின்றனர்.
ஒரு மதவாத அமைப்பின் நிகழ்ச்சிக்கு பிரச்சாரம் செய்து ஆள் திரட்டுவதற்கு பள்ளிக்குள் அவர்களை அனுமதிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. மதம், கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம். அதை கல்வியில் திணிக்கக் கூடாது. எந்தவொரு (அரசு அல்லது தனியார்) பள்ளியாக இருந்தாலும், அதன் நிர்வாகி, உரிமையாளர் தனது மத நம்பிக்கைகளை, அங்கு படிக்கும் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு அரசமைப்புச் சட்டப்படி அனுமதி இல்லை. இது நம் நாட்டின் மதசார்பற்ற அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் சார்பு தன்மை கொண்ட பள்ளி நிர்வாகிகளும், கடவுள் நிகழ்ச்சி தானே என்ற நம்பிக்கையில் சில பள்ளி நிர்வாகங்களும் இதை அனுமதித்துள்ளனர்.
கவனிக்காத அரசு நிர்வாகம்
இது போன்ற (எந்த ஒரு) மத அமைப்பின் தலையீட்டையும் கல்வித் துறையில் அனுமதித்தால் அது மாணவர்களுக்கு மிகப்பெரும் தீங்காக முடியும். இளம் நெஞ்சங்களில் மதக்கண்ணோட்டத்தைப் புகுத்தி, சக மாணவர்களிடம் மதரீதியான பாகுபாட்டை உருவாக்கினால், அவர்களின் அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறிந்து செயல்படும் ஆற்றலை ஊட்டி வளர்க்கும் அடிப்படை கல்விச் சூழலையே பாழ்படுத்தி விடும்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் இதை கண்டு கொள்ளாமல் விடுவது வியப்பாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. கலை இலக்கிய, பண்பாட்டு அமைப்புகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் ஆட்சேபம் தெரிவித்த பிறகு, இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறி இருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பு அமைப்பாக இருந்தால் கூட, சட்டத்துக்கு புறம்பான, விஷமத்தனமான காரியத்தில் ஈடுபடும்போது அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தும் துணிவு இல்லாமல் பணிந்து போவது வெட்கக் கேடானது, ஆபத்தானது.
அணிதிரட்டல்
இந்து மாணவர்கள் செங்கல்லும், பசு நெய்யும் கொண்டு வந்து தரும்படி சொல்வது ஒரு மத அணிதிரட்டலாகும். 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கரசேவகர்கள் செங்கல் கொண்டு வாருங்கள் என்று கேட்டதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சாமானிய மக்களின் ராமர் மீதான பக்தியைப் பயன்படுத்தி அணிதிரட்டி, கடைசியில் பாபர் மசூதியை இடித்ததில் கொண்டு போய் முடித்தனர். அது வேறு, இது வேறு. யாகத்துக்கு செங்கல்லும், நெய்யும் கேட்பதில் என்ன பிரச்சனை என்று சிலர் கேட்கக்கூடும். இது நேரடியாக எந்தவொரு மாற்று மதத்தினருக்கும் எதிர் நடவடிக்கை இல்லைதான். ஆனால் முதலில் தங்கள் அளவில் இந்துக்கள் என்ற உணர்வுரீதியாக அணிதிரட்டுவதற்கு இது ஒரு ஏற்பாடு ஆகும்.
அம்மன்களும், சோடஷ மகாலட்சுமியும்
இப்போதும் இந்த தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணற்ற சாமிகளும், வழிபாடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதுரையில் மீனாட்சி கல்யாணமும், வில்லிபுத்தூரில் ஆண்டாள் கல்யாணமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதே வட்டாரத்தில் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன், ஆனைமலை மாசாணியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன் என ஏராளமான அம்மன் வழிபாடுகள் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவற்றில் லட்சக்கணக்கான சாமானிய மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த நம்பிக்கை அவர்களது வாழ்க்கையில் படும் கஷ்டங்கள், துன்பங்கள் தீர வேண்டும், வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தவித குறிப்பிட்ட “அமைப்புரீதியான அணிதிரட்டல்” நோக்கம் இல்லை. இந்த அம்மன் வழிபாடுகளில் இருந்தெல்லாம் மாறுபட்டது, இந்து முன்னணி நடத்தும் “சோடஷ மகாலட்சுமி” யாகம் எனும் நிகழ்வு. இதன் நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் துன்பத்தை வெளிப்படுத்தி மனதை ஆற்றுதல்படுத்தும் நிம்மதிப் பெருமூச்சாக இல்லை.
மாறாக மத நம்பிக்கை கொண்டவர்களிடம் அவர்களது மத உணர்வுகளை மென்மேலும் இறுகச் செய்து, அவர்களது எதார்த்தமான வாழ்வியல் கண்ணோட்டத்தை, மதரீதியான கண்ணோட்டமாக திரித்து, கடைசியில் மதவெறி பிடித்தவர்களாக மாற்றும் ஒரு தொடர் நிகழ்வின் சிறு பகுதிதான் இது போன்ற அணிதிரட்டல்! இதில் இயல்பான மத நம்பிக்கையை, திட்டமிட்ட மதவாத அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.
மடை மாற்றும் உத்தி
இந்த நிகழ்வுக்கு மற்றொரு பரிமாணமும் இருக்கிறது. இந்த யாகத்தில் பங்கேற்றால் தொழில் வளம், விவசாயம் செழிக்கும் என்று இந்து முன்னணி விளம்பரம் செய்துள்ளது. தொழிலும், விவசாயமும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதை விரித்துச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை சிறு, குறு தொழில் துறை மோடி அரசின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் கிடக்கிறது. தமிழகத்தில் ஒப்பீட்டு அளவில் வளமான பாசன வசதி உடையது என்று சொல்லப்படும் இதே திருப்பூர் வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். குறிப்பாக தாராபுரம் அருகே கெத்தல்ரேவ் கிராமத்தில் தனது தாயையும், பெற்ற இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாகும். அவரது இந்த முடிவுக்கு அடிப்படை காரணம் கடன் தொல்லை என்பதை உண்மை அறியும் குழு வெளிப்படுத்தியது.
தொழிலும், விவசாயமும் நிர்க்கதியாய் இருக்கிறது, இந்த நிலைக்கு ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகளே மூல காரணமாக இருக்கிறது. இதற்கு எதிராக மக்கள் கோபம் அரசியல்ரீதியாக ஆட்சியாளர்கள் மீது அணிதிரள வேண்டும். ஆனால் அடுத்து சில மாதங்களில் மோடி அரசை கணக்குத் தீர்க்கும் தேர்தல் வர இருக்கும் நிலையில், உண்மையான காரணத்தை நோக்கி மக்கள் கோபம் திரும்பி விடாமல், மடை மாற்றி விடும் ஒரு உத்தியாகவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது.
வரலாறு என்ன?
இதே இந்து முன்னணியையும் உள்ளடக்கிய திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு என்ற அமைப்புதான் 2011 பிப்ரவரியில் சாயஆலைகள் மூடப்பட்டபோது, திருப்பூரை ஸ்தம்பிக்கச் செய்த பெரும் போராட்டத்தை நடத்தியது. 2014-ல் மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, தொழில் பாதுகாப்புக் குழு என்ற முகமுடி போர்த்திய இந்துத்துவ சார்பு கொண்ட இந்த அமைப்பினர் நூதனமான முறையில் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மோடி அரசு ஆட்சிக்கு வந்து தற்போது ஆட்சி முடியப் போகும் இந்த நான்கரை ஆண்டு காலத்தில் பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, எரிபொருள் விலை உயர்வு, நூல் விலையேற்றம், டிராபேக் குறைப்பு உள்ளிட்ட அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கும்போதும், தொழிலதிபர்களே சிலர் தற்கொலை செய்து கொண்டபோதும் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது அந்த முகமுடி அவர்களுக்குத் தொல்லை தருவதாக இருப்பதால் அதை ஒதுக்கிவிட்டனர். 2014க்கு முன் அப்போது ஆள்வோருக்கு எதிரான கோபத்தை ஒன்று திரட்டி பாஜகவுக்காக ஆதரவாக மாற்றுவதற்காக நுட்பமாக செயல்பட்டவர்கள், இப்போது ஆள்வோருக்கு எதிரான கோபம் ஒன்று திரளாமல் இருக்க, அறிவுப்பூர்வமாக, அரசியல்பூர்வமாக செல்லாமல் தடுக்க இந்த பிரம்மாண்ட நிகழ்வை நடத்துகின்றனர். அரசியல் சார்ந்த போராட்டத்தை, நம்பிக்கை சார்ந்த யாகத்தின் மூலம் சமப்படுத்த, ஈடுசெய்யப் பார்க்கின்றனர்.
சமூக நெருக்கடி முற்றும் சூழலில் அதற்கு காரணத்தைச் சொல்லி சரியான தீர்வை மக்களிடம் முன்வைக்காமல் குறுகிய இன, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடைய முயற்சிப்பதே பாசிச சக்திகளின் வேலை என்பதை உலக வரலாறு பதிவு செய்துள்ளது. திருப்பூரில் கடந்த 8 ஆண்டு காலத்தில் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளின் இங்கும், அங்குமான தனித்தனி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கோர்வைப்படுத்திப் பார்த்தால் அதே பாசிச சக்திகளின் அணுகுமுறையோடு ஒத்துப் போவதைக் காண முடிகிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் உருவான மண் என்பதே இந்த வட்டாரத்தின் வரலாறு!
– வேதன்

Leave a Reply

You must be logged in to post a comment.