லக்னோ, டிச.6-

உத்தரப்பிரதேச மாநிலத்திலி பஹ்ரைச் தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தலித் எம்பி-யான சாவித்திரிபாய் புலே, பாஜக-விலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த நாட்டுக்குத் தேவை அரசமைப்புச்சட்டம்தானேயொழிய, கோவில் அல்ல என்று கூறும் அவர், இவர்கள் மனுஸ்மிருதி அடிப்படையில் நாட்டை ஆள முயற்சிக்கிறார்கள் என்றும், வரும் டிசம்பர் 23இலிருந்து தலித்துகளின் கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக சமூகத்தை மதரீதியாகப் பிரித்தாள முயல்கிறது என்று குற்றஞ்சாட்டிய சாவித்திரிபாய் புலே, அது அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தையும், அதன்கீழ் தலித்துகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளையுமே அழித்து ஒழித்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

பாஜக அரசாங்கம் பகுஜன் (பெரும்பான்மை மக்கள்) மற்றும் சிறுபான்மையினரின் வரலாற்றை அழித்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்றும், தேவையில்லாமல் சிலைகளை அமைப்பதிலும், கோவில்களைக் கட்டுவதிலும் செலவு செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். பாஜக-விலிருந்து விலகும் முடிவை டாக்டர் அம்பேத்கர் நினைவுதினமான இன்று அவர் அறிவித்தார். மேலும் இன்றைய தினம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

இரண்டையும் நினைவுகூர்ந்த சாவித்திரிபாய் புலே, ஆர்எஸ்எஸ்/பாஜக/விசுவ இந்து பரிசத் வகையறாக்கள் 1992ஆம் ஆண்டு சூழ்நிலையை மீளவும் உருவாக்கிடவும், சமுதாயத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்திடவும்  முயற்சித்துக் கொண்டிருக்கின்றன என்றும் இவற்றைக் கண்டித்திடும் விதத்திலேயே பாபர் மசூதி இடிப்பு தினமான இன்றும் மற்றும் அம்பேத்கர் நினைவுதினமான இன்றும் நான் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என்றார். பாபர் மசூதி இடிப்பு சம்பவமானது முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டது என்றும், வளர்ச்சியைக் கட்டமைப்பதற்குப் பதிலாக அவர்கள் இந்து – முஸ்லீம் இடையே வெறுப்பைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்து – முஸ்லீம் மக்களிடையே நிலவிவந்த சகோதரத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

“நான் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்துள்ளேன். ஏனெனில், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் பாபாசாகேப் பி.ஆர். அம்பேத்கர் ஏற்படுத்திய அரசமைப்புச் சட்டத்தையும், இட ஒதுக்கீடுகளையும் அழித்திட தங்களை முழுமையாக தயார்செய்து கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.

சாவித்திரிபாய் புலே 2012இல் முதலில் பாஜக எம்எல்ஏ-ஆகவும், பின்னர் 2014இல் எம்பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். “மேலும்  இக்கட்சியில் இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை. எம்பிக்களும், அமைச்சர்களும் மக்கள் மத்தியில் மதவெறியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்,  அரசமைப்புச்சட்டத்தைத் துண்டு துண்டாகக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.

“இந்த நாட்டை இவர்கள் மனுஸ்மிருதி அடிப்படையில் நடத்திட விரும்புகிறார்களேயொழிய, நம் அரசமைப்புச்சட்டத்தை அவர்கள் பின்பற்றவில்லை. எனவே அரசமைப்புச்சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் வரும் டிசம்பர் 23 முதல் பிரச்சாரம் தொடங்கிட இருக்கிறேன்,” என்றும் சாவித்திரிபாய் புலே தெரிவித்தார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.